விம்பிசார கதை
Jump to navigation
Jump to search
விம்பிசார கதை அருணாசலம் 09 1 [1] என்னும் தமிழ்நூல் நீலகேசி உரை என்னும் உரைநூலில் நான்குவரி ஆசிரியப்பாப் பகுதி ஒன்றுடன் குறிப்பிடப்பட்டுள்ள நூல் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது.
பாடல்
- உலுப்பிணி வனத்தில் ஒண்குழைத் தேவி
- வலம்படு மருங்குல் வடு தோயுறாமல்
- ஆன்றோன் அவ் வழித் தோன்றினன் ஆதலின்
- ஈன்றோள் ஏழ் நாள் இன் உயிர் வைத்தாள்.
விம்பிசாரன் கதை
- விம்பிசாரன் மகத நாட்டைக் கி.மு. 540-490 ஆண்டுகளில் ஆண்டுவந்தான். மனைவியையும், மகனையும், செல்வத்தையும் துறந்து மொய்ஞ்ஞானம் தேடி வெளிப்பட்டுத் திரிந்த புத்தர், விம்பிசாரனின் யாகத்தில் பலியிடச் சென்ற ஆடுகளைப் பின்தொடர்ந்து சென்று மன்னனுக்கு நல்லறிவு புகட்டி ஆடுகளைக் காப்பாற்றி மன்னனைத் தன் நெறியில் ஒழுகச் செய்தார். இதனால் விம்பிசாரன்மீது பொறாமை கொண்ட தேவதத்தன் பிம்பிசாரனின் மகனாகிய அஜாத சத்துரு என்பவனைத் தன்வயப்படுத்திக்கொண்டு அவன்மூலம் விம்பிசாரனைச் சிறையிலிட்டு, புத்தருக்கும் பல கொடுமைகள் செய்தான். சிறையில் தந்தையைப் பட்டினி போட்டான. தன் தாயார் தன் தந்தைக்கு மறைவாக உணவு தருவது அறிந்து அதனையும் தடை செய்ததோடு, தந்தையையும் கொன்றான். கடைசியாக அஜாத சத்துருக்கு ஒரு மகன் பிறந்தான். அப் பிள்ளைமீது அன்பு கொண்ட அவன் தான் தன் தந்தைக்குச் செய்த கொடுமைகளை எண்ணி வருந்தினான். - இது விம்பிசாரன் கதை. இந்தக் கதை இந்த நூலில் கூறப்பட்டிருந்தது எனலாம்.
தொடர்புடைய பாடல்
- பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
- வரையா ஈகை போல யாவிரும்
- கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
- முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
- அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
- என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
- குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
- கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
- மாய யாக்கை சொல்லிய தான் தன்
- உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. [2]
இப் பாடலில் 'போதிப் பேரருள் வாமன்' என்பது புத்தனைக் குறிக்கும் எனக் கொண்டு இந்தப் பாடலும் 'விம்பிசார கதை' நூலின் பகுதியாக இருக்கலாம் என்பது மு. அருணாசலம் கருத்து.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 301.
- ↑ பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101