விஜயகுமாரி (திரைப்படம்)
விஜயகுமாரி | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் |
கதை | கதை / திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. எஸ். பாலையா நம்பியார் செருகளத்தூர் சாமா டி. ஆர். ராஜகுமாரி எம். எஸ். எஸ். பாக்கியம் அங்கமுத்து பி. கே. சரஸ்வதி |
ஒளிப்பதிவு | மஸ்தான் |
வெளியீடு | மார்ச்சு 18, 1950 |
நீளம் | 15955 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விஜயகுமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
திரைக்கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
புரட்சி மனம் கொண்ட இளைஞனான விஜயன் (கே. ஆர். ராமசாமி) நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பாடுபடுகிறான். அவ்வூர் ராஜகுமாரிக்கு (டி. ஆர். ராஜகுமாரி) முடிசூட்டும் வைபவம் நடக்கும் போது விஜயன் தன் தங்கையுடன் (குமாரி கமலா) மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்துகிறான். இதைப் பார்த்த வில்லன் மந்திரி (செருக்களத்தூர் சாமா) விஜயனின் இந்த நாடகத்தை மக்கள் பார்த்தால் தங்களது திட்டம் எல்லாம் மோசமான பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்து பிரதம மந்திரியின் மகனை (டி. எஸ். பாலையா) இளவரசனாகப் பட்டமளித்து ராஜகுமாரியைத் திருமணம் முடித்து அரசைக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்கிறான். அதே வேளையில் விஜயனும் இளவரசியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். மந்திரி உடனே அரசனிடம் விஜயனைப் பற்றிய தவறான காரணத்தைக் கூறி அவனை அந்த நாட்டை விட்டு வெளியேற்றுகிறான்.
விஜயனும் தங்கையும் ஒரு தீவை அடைகிறார்கள். அத்தீவின் அரசி மாயா (பி. கே. சரஸ்வதி) விஜயனையும் அவளது தங்கையையும் தன்னுடன் இருக்க வைக்கிறாள். மாயா விஜயன் மேல் காதல் கொள்கிறாள். அவளது காதலை விஜயன் ஏற்க மறுக்கவே அவனை சிறையிலடைக்கிறாள்.
மீன் பிடிப்பவர்களான அண்ணன் தங்கைகளான (பாக்கியம், எம். என். நம்பியார்) ஆகியோருக்கு கடலில் ஒரு மந்திரக் கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் விஜயனும் அவனது தங்கையும் சிறை பிடித்திருக்கும் இடம் தெரிந்து இருவரும் விஜயனைக் காப்பாற்றப் புறப்படுகையில் பிடிபடுகிறார்கள். அதே நேரம் விஜயகுமாரியின் தோற்றத்தைக் கொண்ட இளவரசி அந்த நாட்டுக்குள் நுழைந்து மந்திரியின் முட்டாள் மகனை மணம் முடிக்கிறாள். அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இறுதியில் விஜயன் மீண்டு வந்து நாட்டில் மக்களாட்சியைக் கொண்டு வருகிறான்.
பாடல்கள்
இத்திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
- மேலை நாட்டு இசையில் லலிதா, பத்மினி, வைஜெயந்திமாலா ஆகியோரின் ஆடலுடன் கூடிய பாடலான "லாலு லாலு லாலு லாலு.." என்ற பாடல் வைஜயந்திமாலாவை பிரபலமாக்கியது.
- "பொழுது விடிஞ்சா ராஜா ராணி நாம்.." உடுமலை நாராயணகவியின் பாடலுக்கு டி. ஆர். ராஜகுமாரி நடனமாடியிருந்தார்.
- "ஆணவத்தினால் அழிவு தேடாதே.." லலிதா, பத்மினியின் மேலை நாட்டு நடனத்துடன் இடம்பெற்ற பாடல்.
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (5 நவம்பர் 2009). "Vijayakumari (1950)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-vijayakumari-1950/article43760.ece/article6818674.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016.
உசாத்துணை
- மோனா, திரைப்பட சாதனையாளர்கள், "விஜயகுமாரி (1950)", வீரகேசரி, அக்டோபர் 2, 2011