வழுதி (பாண்டியர்)
வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் [1] தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும் [2] போற்றப்படுகின்றனர்.
கூடல் [3][4], மருங்கை [5], கொற்கை [6] ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.
வழுதி பல கோட்டைகளை வென்றவன்.[7] வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர் [8] தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன் [9] புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான் [10]
வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.[11] இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன் [12] வாணன் [13] என்னும் வள்ளல்கள் வாழ்ந்துவந்தனர்.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்
- காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
- பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
- மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
- பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
- கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
- கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
- பெருவழுதி [14]
- குறுவழுதி
- நல்வழுதி
- அண்டர்மகன் குறுவழுதியார் [15]
வழுதி - ஒப்புநோக்கு
வழுதி என்னும் பெயர் அடைமொழியுடனும், அடைமொழி இல்லாமலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யாரைக் குறிக்கின்றன என்பத்தை நோக்குவது வரலாறு.
பெயர் | பாடல் | குறிப்பு |
---|---|---|
அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி | நற்றிணை 150 | - |
பசும் பூண் வழுதி | நற்றிணை 358 | மருங்கூர் அரசன் |
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி | அகநானூறு 93 | கூடல் அரசன் |
நல் தேர் வழுதி | அகநானூறு 130 | கொற்கை அரசன் |
நல் தேர் வழுதி | அகநானூறு 204 | வெற்றிக்குப் பின்னர் பாசறையில் துன்பப்பட்டவன் [16] |
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி | அகநானூறு 312 | வேல் வீசி வென்றவன் [17] |
பெரும் பெயர் வழுதி | அகநானூறு 315 | கூடல் அரசன் |
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி | புறநானூறு 3 | பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி |
சினப்போர் வழுதி | புறநானூறு 51 | பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. |
இயல்தேர் வழுதி | புறநானூறு 52 | பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. |
தகைமாண் வழுதி | புறநானூறு 59 | பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். |
அண்ணல் யானை வழுதி | புறநானூறு 388 | தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன் |
அடிக்குறிப்பு
- ↑ புறநூனூறு 52
- ↑ புறநானூறு 59
- ↑ பெரும்பெயர் வழுதி கூடல் அகநானூறு 315
- ↑ நக்கீரர் அடுபோர்ச் சோழர் உறந்தை, வேம்பின் வழுதி கூடல், நெடுந்தேர்க் கோதை கருவூர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் அகநானூறு 93
- ↑ பசும்பூண் வழுதி மருங்கை நற்றிணை 358
- ↑ நல்தேர் வழுதி கொற்கை முன் துறை அகநானூறு 130
- ↑ அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி நற்றிணை 150
- ↑ கலித்தொகை 141
- ↑ வெல்போர் வழுதி அகநானூறு 312
- ↑ பரிபாடல் 19
- ↑ இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப், பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி பரிபாடல் 10
- ↑ அண்ணல் யானை வழுதியின் மருகன் சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் வள்ளல் புறநானூறு 388
- ↑ தகைமாண் வழுதியின் சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் வாணன் அகநானூறு 204
- ↑ நற்றிணை 55, 56 பாடல்கள் பாடிய புலவர்
- ↑ அகம் 150, 228, குறுந்தொகை 345, புறம் 346 பாடல்களைப் பாடியவர்
- ↑ வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை (அகநானூறு 204)
- ↑ செல் சமத்து உயர்த்த அடு புகழ் எஃகம் (அகநானூறு 312)