மு. நவரத்தினசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மு. நவரத்தினசாமி
மு. நவரத்தினசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
முருகுப்பிள்ளை நவரத்தினசாமி
பிறந்ததிகதி (1909-02-16)பெப்ரவரி 16, 1909
பிறந்தஇடம் தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்
இறப்பு சூன் 30, 1969(1969-06-30) (அகவை 60)
பணி அரச ஊழியர்
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை
அறியப்படுவது பாக்குநீரிணையை முதலில் நீந்திக் கடந்தவர்
துணைவர் லீலாவதி
பிள்ளைகள் இராமச்சந்திரன்,
பாலச்சந்திரன்

முருகுப்பிள்ளை நவரத்தினசாமி (Murugupillai Navaratnasamy, 16 பெப்ரவரி 1909 - 30 சூன் 1969)[1] இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.[2]

வாழ்க்கைச் சுருக்கம்

நவரத்தினசாமி யாழ்ப்பாண மாவட்டம், தொண்டைமானாறு என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[3] பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றார். படிப்பை முடித்த பின்னர் அரச சேவையில் இணைந்து வேளாண்மை பயிற்றுனராகப் பணியாற்றினார். தனது ஊரிலேயே லீலாவதி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இளம் வயதிலேயே மனைவி இறந்து விட்டார்.[2]

நீச்சல் சாதனை

பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே நீந்துவதில் விருப்பம் கொண்டிருந்தார். பத்து வயதில் 10 மைல்களுக்கும் மேலாக நீந்திச் சாதனை புரிந்தவர்.[4] ஆங்கிலக் கால்வாயை ஆங்கிலேயர் ஒருவர் நீந்திக் கடந்தார் என்ற செய்தியைப் படித்த போதே, அருகில் உள்ள பாக்குநீரிணையை நீந்திக் கடக்க வேண்டுமென ஆவல் கொண்டார். அதற்காகக் கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டார்.[4]

1954 மார்ச் 16 இல் பாக்குநீரிணையில் வல்வெட்டித்துறையில் இருந்து கோடியக்கரை வரையான 34 மைல் தூரத்தைக் கடக்க முயன்று கடுமையான கடல் கொந்தளிப்பினால் தோல்வியடைய நேர்ந்தது. கோடியக்கரையை அடைவதற்கு 7 மைல்கள் இருக்கையில் அவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை. இதனால் 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முயற்சி செய்ய முடிவு செய்தார்.[2]

1954 மார்ச் 25 மாலை 4:10 மணிக்கு[1] அவர் தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார்.[2]

அடுத்த நாள் காலையில் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார். சேர் கந்தையா வைத்தியநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரி. இராமலிங்கம், வ. நல்லையா, என். எம். பெரேரா உட்பட பெருமளவு மக்கள் இவரை வல்வெட்டித்துறையில் வரவேற்றனர்.[1] யாழ்ப்பாணக் குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திய, இலங்கை ஊடகங்கள் இச்சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். கொழும்பில் காலிமுகத்திடலில் 1954 ஏப்ரல் 9ல் நடந்த ஒரு பாராட்டு நிகழ்வில் பிரதமர் இவருக்கு ஒரு வெள்ளிக் கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். எலிசபெத் மகாராணி தனது பிறந்த நாள் நினைவாக இவருக்கு British Empire Medal (BEM) வழங்கிக் கௌரவித்தார்.[5] இவ்விருது கொழும்பில் உள்ள குயீன்சு மாளிகையில் 1955 சனவரி 15 இல் நவரத்தினசாமிக்கு வழங்கப்பட்டது.[1][6]

இறுதிக் காலம்

தனது 56ஆவது அகவையில் 1965 ஆம் ஆண்டில் அரச சேவையில் இருந்து இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னர் இவர் இலங்கையை கட்டுமரம் ஒன்றில் 760 மைல்கள் தூரம் கடலில் சுற்றி வருவதற்குப் பயிற்சி கொடுத்தார்.[2] 1969 சூன் 30 இல் இவர் காலமானார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "The first human to swim across the Palk Strait" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305014739/http://thondaimanaru.org/index.php?option=com_content&view=article&id=36:the-first-human-to-swim-across-the-palk-strait&catid=1:history-of-thondaimanaru&Itemid=2. பார்த்த நாள்: 25 மே 2014. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 மகாலிங்கம், ஏ. ஆர். எஸ். (24 மார்ச் 2004). "Murugupillai Navaratnasamy – the maestro swimmer". டெய்லி நியூஸ். http://archives.dailynews.lk/2004/03/24/spo08.html. பார்த்த நாள்: 25 மே 2014. 
  3. "Murugupillai Navaratnasamy Palk Straight Swimmer". https://www.youtube.com/watch?v=ApyDZRE8Gio. பார்த்த நாள்: 25 மே 2014. 
  4. 4.0 4.1 "Murugupillai Navaratnasamy (Neechchal veran) Palk Straight Swimmer". 24 மார்ச் 2014. https://www.youtube.com/watch?v=QbN1HsY2iqc. பார்த்த நாள்: 25 மே 2014. 
  5. "Supplement to the London Gazzette, Issue 40191". The Gazzette. 10 சூன் 1954. https://www.thegazette.co.uk/London/issue/40191/supplement/3304. பார்த்த நாள்: 25 மே 2014. 
  6. "தமிழ் வீரன் நவரத்தினசாமி நீந்திக் கடந்தார்". தினகரன். 28 மார்ச் 2019. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மு._நவரத்தினசாமி&oldid=28003" இருந்து மீள்விக்கப்பட்டது