மு. கா. சித்திலெப்பை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
முகம்மது காசிம் சித்திலெப்பை |
---|---|
பிறப்புபெயர் | முகம்மது காசிம் |
பிறந்ததிகதி | 11 சூன் 1838 |
பிறந்தஇடம் | கண்டி, இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 5, 1898 | (அகவை 59)
தேசியம் | இலங்கையர் |
அறியப்படுவது | தமிழ் உரைநடை இலக்கியத்தில் முன்னோடி, எழுத்தாளர், கல்வியாளர், வழக்கறிஞர் |
பெற்றோர் | முகம்மது லெப்பை சித்திலெப்பை |
முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர் (Muhammad Cassim Siddi Lebbe) (ஜூன் 11, 1838 - பெப்ரவரி 5, 1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவராவார். அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். இவர் 1885 இல் எழுதிய அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.[1] இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார்
வாழ்க்கைச் சுருக்கம்
குடும்பம்
அறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். அரேபிய மண்ணிலிருந்து வணிக நோக்கில் இலங்கைக்குப் பொருள் தேடிவந்த முல்க் ரஹ்மதுல்லா பார்பரீன் என்பவர் முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது பரம்பரையைச் சேர்ந்தவரே சித்திலெப்பை.
முல்க் ரஹ்மதுல்லாவின் புதல்வரான முகம்மது லெப்பையும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடத்தியவராவார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்த இவர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த ஆண் மகவு தான் முகம்மது லெப்பை சித்தி லெப்பை ஆவார்.
1833ம் ஆண்டில் இந்நாட்டின் முதல் முஸ்லிம் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இன்னாருக்கு மூன்றாவது குழந்தையாக 1838 ஜூன் 11ல் கண்டியில் பிறந்தவர் முகம்மது காசிம் சித்திலெப்பை.
இளமைக் காலம்
திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதிதிறமையாக விளங்கிய இவர் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.
வழக்கறிஞராக
கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்த இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
சமூகப் பணி
கல்வியை முன்னிருத்தி சமுதாயத்தை மேம்படச்செய்யும் முயற்சிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டார். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி "முஸ்லிம் நேசன்" என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாகத் தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் போன்றவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிடத் தீர்மானித்து இருந்தார்.
சமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அகமது கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். இசுலாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது.
ஆகவே அவர் தமது சட்டத் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த தகுதியையும் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகத் தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.
சித்திலெப்பையின் சமகால சகாவான எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவரின் சமூகப் பணிகளுக்கு உறுதுணை புரிந்தார்.
1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இதற்கு முதன் முதலாக ஒறாபி பாஷா அவர்கள் நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கி இதன் வளர்ச்சிக்கு வித்திட்டார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக ”அல்-மதரசதுல் கைரியா” என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு சாஹிரா கல்லூரியாக மலர்ந்தது.
எழுத்தாளராக
‘முஸ்லிம் நேசனை ‘ வெளியிட்டதன் மூலம் முதல் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குப் பாத்திரமான இவர் ‘அசன்பே சரித்திரம்’ எனும் நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ஈழத்தின் முதல் தமிழ் நாவலாசிரியர் என்ற பெருமையையும் அடைந்தார்.
முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான எம். சி. சித்திலெப்பை அவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அரசியலில்
இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் இசுலாமியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார்.
மேற்கோள்கள்
- ↑ நீல. பத்மநாபன் (1992). Modern Indian Literature. சாகித்திய அக்காதெமி. பக். 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7201-324-8. http://books.google.com.au/books?id=m1R2Pa3f7r0C&pg=PA382&lpg=PA382&dq=first+tamil+novel,+sri+lanka&source=bl&ots=unuf60-AEJ&sig=e_QmlYlZku0KZwGbH_AF6sbMYxE&hl=en&ei=RchdTeaCPIyt8AbVs-DADA&sa=X&oi=book_result&ct=result&sqi=2&redir_esc=y#v=onepage&q=first%20tamil%20novel%2C%20sri%20lanka&f=false.
- முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர் சித்திலெப்பை பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், சூன் 11, 2010
- தமிழ் வரலாற்று நாவல்களின் முன்னோடி அறிஞர் சித்திலெப்பையா? பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி ஆகத்து 1, 2010
- முதல் நாவல் தாமிரப் பட்டணமே! ‘அசன்பே’யோ - ‘மோகனாங்கி’யோ அல்ல பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி, ஆகத்து 8, 2010