மு. கார்த்திகேயப் புலவர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கார்த்திகேயப் புலவர் |
---|---|
பிறந்ததிகதி | 1819 |
பிறந்தஇடம் | காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | 1898 (அகவை 78–79) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | தமிழ்ப் புலவர் |
மு. கார்த்திகேயப் புலவர் (1819 - 1898) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும், நாடகாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். வேதாகமங்களை நன்கு கற்றறிந்தவர். 1886 ஆம் ஆண்டில் உதயபானு என்ற இதழை ஆரம்பித்து வெளியிட்டு வந்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், காரைநகரில் முருகேசையர் என்பவருக்குப் பிறந்தவர் கார்த்திகேயப் புலவர்.[2] தனது தந்தையிடம் இருந்து தமிழையும், காரைநகரைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகரிடம் இருந்து வடமொழியையும் கற்றார்.[2] பின்னர் தமதூரைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை என்பவரிடம் கல்வி கற்றார்.[2] ஆறுமுக நாவலரின் ஆசிரியரான இருபாலை சேனாதிராச முதலியாரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகப் பயின்றார்.[2] தமது ஊரிலேயே பாடசாலை ஒன்றை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்து பல மாணவர்களைப் பயிற்றுவித்தார்.[2]
நாடகங்கள்
கார்த்திகேயப் புலவர் கந்த புராணத்தில் வரும் சூரபதுமனின் சரித்திரத்தை நாடகமாக இயற்றி நடிப்பித்தார்.[1] மகாபாரதக் கதாபாத்திரமான சந்திரவண்னனின் சரித்திரத்தையும் நாடகமாக எழுதினார்.[1]
எழுதிய நூல்கள்
இளமையிலேயே கவிகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்த இவர் தமது தந்தையால் பாடப்பெற்ற தன்னையமகவந்தாதியின் கடைசி 30 செய்யுள்களையும் பாடி நிரப்பினார்.[2] இவர் இயற்றிய நூல்கள்:[1]
- திருத்தில்லைப் பல்சந்தமாலை
- திண்ணபுரத் திரிபந்தாதி
- நகுலேசரியமக அந்தாதி
- திக்கைத் திரிபந்தாதி
- வண்ணைத் திரிபந்தாதி