சேனாதிராச முதலியார்
சேனாதிராச முதலியார் (1750-1840) ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தெல்லிப்பழை பொன். எதிர்வன்னியசிங்க முதலியாருக்கு பௌத்திரர், இருபாலை நெல்லைநாத முதலியாருக்கு மைந்தர், இராமலிங்க முதலியாருக்கும் பர்வதவத்தினி அம்மையாருக்கும் தந்தையார், கூழங்கைத் தம்பிரானுக்கும் மாதகற் சிற்றம்பலப்புலவருக்கும் தந்தையார் நெல்லைநாத முதலியாருக்கும் மாணவகர். ஆறுமுக நாவலருக்கும் சரவணமுத்துப் புலவருக்கும் அம்பலவாணப் பண்டிதருக்கும் நீர்வேலி பீதாம்பரப் புலவருக்கும் இவரே நற்றமிழ் ஆசிரியர் ஆவார்.
இயற்பெயர் | சேனாதிராச முதலியார் |
---|---|
பிறப்பு | நெல்லைநாத முதலியார் சேனாதிராசா |
இறப்பு | 1840 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | தமிழ் பண்டிதர் |
அறியப்படுவது | ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் கல்வியை பரப்பியமை |
துணைவர் | பஞ்சாயூதர் மகள் |
பிள்ளைகள் | இராமலிங்க முதலியார்,பர்வதவத்தினி அம்மையார் |
பிறப்பு
ஒல்லாந்தர் காலத்தில் மொழி பெயர்ப்பு முதலியாராக உயர் பதவி வகித்தவரும், ஞாபகத்தில் சிறந்தவரும், தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஆங்கிலம், ஒல்லாந்தர் மொழி, மற்றும் போர்த்துக்கேயர் மொழி ஆகியவற்றைக் நன்கு கற்றவரும், குலம்,குணம், கல்வி,ஒழுக்கம், சைவநெறி முதலியவற்றில் சிறந்துவிளங்கியவரும், தமிழறிஞருள் மணியெனப் போற்றப்பட்ட நெல்லைநாத முதலியாருக்கு மூத்த மைந்தராக சேனாதிராச முதலியார் 1750 ஆம் ஆண்டு இருபாலையில் பிறந்தார். இவருக்கு கந்தப்பிள்ளை என்னும் தம்பியாரும் உண்டு. இவர் தாயார் பெயர் தெரியவில்லை ஆனால் அவர் மண்ணாடுகொண்டமுதலியாரின் வழித் தோன்றல் என்பர். இம் மண்ணாடுகொண்டமுதலியார் கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளலின் வழித் தோன்றல் என்றும், பதினான்காம் நூற்றாண்டில் மாலிக் கபிர் படைகள் தமிழகம் நுழைந்த போது, யாழ்ப்பாணம் வந்து குடியேறினார் என்றும் மேலும் கூறுவர்
கல்வி
இவர் இளவயதில் தந்தையாரிடம் தமிழும் பிறமொழிகளும் கற்று அறிந்த பின் மாதகல் சிற்றம்பலப்புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று உணர்ந்தார். மேலும் தனது தந்தையாரைப் போலவே ஞாபகத்தில் சிறந்து விளங்கிய இவர்,கூழங்கைத் தம்பிரானிடம் பெரும்பொருள் கொடுத்து நாற்பது நாட்களில் நான்னூல் முழுவதையும் கற்றுத் தெளிந்தார் என்பர். இவர் சிறுவராக இருந்த காலத்தில் இவர் தந்தையாரிடம் சந்தேகங்களை கேட்டு தெளியும் பொருட்டும் மற்றும் தமது கவிகளை அரங்கேற்றும் பொருட்டும் புலவர்கள் பலர் வருவது வழக்கம். அவர்களிடம் வினாவியும் அவர்கள் கவிகளைக் கேட்டும், பல நுணுக்கங்களை அறிந்த இவர் எல்லா வகைச் செய்யுள்களையும் பாடும் ஆற்றல் எய்தினார் என்பர். ஒல்லாந்த மொழி போர்த்துகேய மொழி ஆங்கிலம் முதலிய மொழிகளையும் தந்தையாரிடம் நன்கு கற்று, ஒல்லாந்தர் காலத்தில் உயர்ந்த அரசாங்க வேலையாக கருதப்பட்ட துவிபாஷகர் எனப்படும் மொழிபெயர்ப்பு முதலியாராகவும், பின் சட்டமும் கற்று யாழ்ப்பாணம் பெரிய நீதிமன்றத்தில் வழக்குரைப்பாளராகவும் பணியாற்றிவந்தார். ஆங்கிலயர் காலத்தில் இவர் நீதிபதியாக இருந்தார் என்றும் கூறுவர். அக்காலத்திலே இவரது வளவு ஒரு கல்விக்கூடமாகத் திகழ்ந்தது, மேலும் இவரும் இவரது தந்தையரும் வறிய மாணவர்களுக்கு உணவளித்து கற்பிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பர். போர்த்துகேயர் காலத்தில் மழுங்கியிருந்த தமிழ் கல்வி ஒல்லாந்தர் காலத்தில் மீண்டும் வளர தொடங்கியது. இவ்வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது என்றால் மிகையாகாது.
அக்காலத்தில் சேனாதிராச முதலியாரிடம் தமிழ்க் கல்வி கேட்டுத் தெளிந்தவர்கள் பலர் ஆவர். அவர்களில் ஆறுமுக நாவலர், அம்பலவாணப் பண்டிதர்,சரவணமுத்துப் புலவர், நீர்வேலி பிதாம்பரப் புலவர், வல்வை ஏகாம்பரப் புலவர், நல்லூர் கார்த்திகேய ஐயர், நல்லூர் சம்பந்தப் புலவர், காரைதீவு மு. கார்த்திகேயப் புலவர் முதலியோர் தலைசிறந்து விளங்கியவர்கள் ஆவர். இவர்களும் இவர்களின் மாணவர்களும் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் மற்றும் சைவ மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் என்பர். அக்காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முதலில் பிரசங்கம் செய்தவரும் சேனாதிராசா முதலியாராவர். அவருக்குப் பின் அவரது மாணவர் சரவணமுத்துப் புலவரும், இவருக்கு பின் ஆறுமுகநாவலரும் , நாவலருக்கு பின் அவரின் மாணவராகிய பொன்னம்பலபிள்ளையும் இப்பிரசங்கங்களை நடத்தினறேன்பர்.
இலக்கியப் பங்களிப்பு
சேனாதிராச முதலியார் பல வகைச் செய்யுள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.நல்லூர் கந்தசுவாமியார் மீது மிகுந்த பக்தி பூண்டு இருந்தமையால் அக்கடவுள் மீது நல்லை வெண்பா, நல்லையந்தாதி, நல்லைக்குரவஞ்சி முதலிய பிரபந்தகளும் பல தனி நிலைச் செய்யுள்களும் இயற்றியுள்ளார். அக்காலத்தில் நல்லூரில் இருந்த தனது அலுவலகத்திலிருந்து, நல்லூர் கந்தசுவாமியாரை வணங்கச் செல்லும் வழியில் இத் தனி நிலைச் செய்யுள்களைப் பாடினார் என்பர். மேலும் நீராவிப் பிள்ளையார் மீது ஓர் கலிவெண்பாவும் சில தனி நிலைப் பாக்களும் மற்றும் மாவிட்டபுரம் முருகக் கடவுள் மீது ஊஞ்சல்ப் பதிகமும், மற்றைய கோவில்கள் மீது ஊஞ்சல்ப் பதிகமும் இவரால் இயற்றப்பட்டது என்பர். அக்காலத்திலே மானிப்பாயில் அச்சிடப்பட்ட தமிழ் அகராதியை தொகுத்தவரும் இவரே. நல்லை வெண்பாவை தவிர்ந்த மற்றையவை எல்லாம் முழுமையாக இக்காலத்தில் கிடைக்கப்பெறவில்லை. நல்லை வெண்பா இவரது மாணவரான அம்பலவணப் பண்டிதரால் 1870களில் அச்சிடப்பட்டதால் முழுமையாக கிடைத்துள்ளது. இக்காலத்தில் கிடக்கப் பெற்றுள்ள இவரது செய்யுள்களில் சிலவற்றை கீழே ஈண்டு காட்டுதும். நல்லை வெண்பாவில் இரு வெண்பாக்களை காட்டுதும்.
கந்துகமுந், தானைவேற் காளையருங் கன்னியரும் கந்துகமுந், திக்களிகூர், நல்லுரே - சந்திரமா மாவைப் பிழந்தார் மகிழ்பூப்ப வீரையிலோர் மாவைப் பிழந்தார் மனை . நத்தமூ ருங்கயத்தால் நன்கினைகூன் பாடலத்தால் சித்தச வேன்போலுந் திருநல்லை - முத்தின் திருத்தணி மாமலையுந் திண்கொட்டிற் காட்டும் திருத்தணிமா மலையான் சேர்வு.
இவ் வெண்பாகள் இரண்டும் இயமகம் என்னும் மரபு முறையே பாடப்பட்டுள்ளது. இயமகம் என்பது ஒரே சொல் அல்லது சொற்தொடர் மீண்டும் வருமாறும், அவற்றுள் பொருள் வேறுபாடு உள்ளவாறு அமைத்து பாடும் தமிழ்ச் செய்யுள் வகையாகும்.
நல்லைக் குறவஞ்சியில் வரும் இயமக நெறிப்படி இயற்றப்பட்ட பா ஒன்றைக் கீழே காட்டுதும்.
திருவாறு நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார் இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்ற ரம்மானை இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்ற ராமாயின் தருவாரோ சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை தருவார்காண் சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை
இவரது தனிச் செய்யுள்களில் ஒன்றைக் கீழே காட்டுதும்.
கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சுழ் நல்லூரிற் குமர மூர்த்தி அடியருளத் திருளகல அமரர்முக மலரவர அணிமா னீன்ற கொடியினொடும் பிடியினொடும் குலவுமுடம் பிடியொடுங்கோ தண்ட மேந்தி மிடியகல மயிலேறி விடியவந்த தினகரன்போல் மேவி னானே
இவர் இயற்றிய ஊஞ்சல் செய்யுள் ஒன்றைக் கீழே காட்டுதும்
கனகநவ ரத்நமணி மவுலி மின்னக் கவின்கொணெற்றிச் சுட்டியிளங் கதிர்கள் காலப் பனகமணிக் குண்டலங்கள் பகலை வெல்லப் பணித்தரளத் தொடைநிலவின் பரப்பை யெள்ள அனகவிடைக் கிரங்கியமே கலைக ளார்ப்ப அடியவரை யஞ்சலெனச் சிலம்பு மார்ப்பத் தினகரமண்டலமளவு மதில் சூழ் கோவைத் தேவிதிருக் கண்ணகையே யாடீ ரூஞ்சல்
வாழ்க்கை வரலாறு
சேனாதிராச முதலியார் தனது தந்தையார் விருப்பப்படி தென் கோவை பஞ்சாயூதர் என்பவரின் மகளை மணந்து, இராமலிங்க முதலியாருக்கும் பர்வதவத்தினி அம்மையாருக்கும் தந்தையானார். இராமலிங்க முதலியார் இவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, நல்லூரில் ஆறுமுகநாவலர் நடத்திய முதல் பிரசங்கத்தின் போது அவைத் தலைவராக விளங்கிய பிரபு ஆவர். சேனாதிராசா முதலியாரின் மகள்வழிப் பேரன் கந்தப்பிள்ளை அவர்கள் இவரிடம் தமிழ் கற்று, அக்காலத்தில் பலருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியராவார். வித்தகம் என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், கொழும்பு ஆசிரியர் கல்லூரியின் தமிழ் பண்டிதரும், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மாணவருமாகிய தென் கோவை கந்தையாப் பண்டிதர் மேல்கூறிய கந்தப்பிள்ளை அவர்களின் மகள்வழிப் பேரனாவார். இவரது மாணவர்கள் போல் இவரது வழித் தோன்றல்கள் பலரும் தமிழ் அறிவில் சிறந்து விளங்கினார்கள். இவர் 1840ஆம் ஆண்டு 70 ஆண்டுகள் தமிழ்த் தொண்டு புரிந்து விட்டு இறைவனடி சேர்ந்தார் என்பர்.[1].
மேற்கோள்கள்
- ↑ குமாரசுவாமிப்புலவர், தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 157