முத்துக்குமாரக் கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்துக்குமாரக் கவிராயர்
இயற்பெயர் முத்துக்குமாரக் கவிராசர்
பிறப்பு அம்பலவாணப்பிள்ளை முத்துக்குமாரசேகரர்
இறப்பு 1851
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி தமிழ் பண்டிதர்
அறியப்படுவது சைவசமய மறுமலர்சிக்கு வித்திட்டவர்
துணைவர் கதிராசிப்பிள்ளை
பிள்ளைகள் யோகம்மா, சின்னம்மா, பொன்னம்மா, வள்ளிப்பிள்ளை

முத்துக்குமார கவிராசர் (1780 - 1851) 18ம்-19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்துப் புலவர்.

வாழ்க்கை குறிப்பு

முத்துக்குமாரசேகரர் என்ற இயற்பெயரைக் கொண்ட முத்துக்குமார கவிராயர் அம்பலவாணப்பிள்ளைக்கும் சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையரிடம் தமிழ் கற்று புலமை எய்தினர் என்பர். இவர் கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவர். இவர் கவிகளைக் கேட்டுணர்த்த கற்றோர் இவரைக் கவிராசர் என்று அழைத்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவருக்கு பௌத்திரர்.

இவருடைய மாணவர்

பிற்காலத்தில் தமிழ்ப் பண்டிதராய், பண்டைய சங்கத்தமிழ் நூல்களை தேடி எடுத்து அழியா வண்ணம் அச்சிட்டவரும், புதுக்கோட்டை நீதிபதியாய்ப் புகழ்பெற்றவருமான ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் முத்துக்குமாரக் கவிராயரின் மாணவரே. தாமோதரம்பிள்ளை தாம் அச்சிட்ட நூல்களின் பதிப்புரை தோறும் கவிகளால் இவருக்கு குரு வணக்கம் கூறுவார். அவற்றுள் இரு துதிச் செய்யுள்கள் கீழே தரப்பட்டுள்ளன:

இலக்கண விளக்க பதிப்புரை
"திங்கள் தங்கிய செஞ்சடை முடியினன் றிருத்தாட்
பங்கயங் கயிலாய நாதனை முனிச் பழிச்சிச்
சங்க மங்களத் தமிழ்முத்துக் குமாரன்றன் மலர்ப்பா
தங்கள் வங்கமாத் தமிழ்க் கடலிடைப் படிகுவனே."
வீரசோழியப் பதிப்புரை
"எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா
கத்துயர் மரபினோன் முத்துக்கு மார
வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவனே."

சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

இவரும் ஆறுமுக நாவலரும் மற்றும் சங்கரபண்டிதரும் யாழ்ப்பாணத்தில் கிறித்து மதத்தினரின் போலிப் பிரசாரத்துக்கு, மக்களை மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறித்து மதக் கொள்கைகள் வலியிழந்து தடுமாறியது என்று பின்வருஞ் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்.[1]..

முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்
றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து
சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்
செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே.

இலக்கியப் பங்களிப்பு

கிறித்து மதத்தினரின் சைவரை மதமாற்றும் நடவடிக்கையை கண்டித்து முதலில் யேசுமத பரிகாரம் மற்றும் ஞானக் கும்மி என்ற கவித் தொகுப்புகளை வெளியிட்டவர் இவராவர். இவற்றை 1852 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் அச்சிட்டு வெளியிட்டார். இதை எதிர்த்து கிறிஸ்து மதத்தினர் அஞ்ஞானக் கும்மி என்ற நூலை வெளியிட்டனர். இதனை கண்டித்துச் சிலம்புநாதபிள்ளை என்பவர் "அஞ்ஞானக் கும்மி மறுப்பு" என ஒரு நூலை இயற்றி வெளியிட்டார்[2][3].

கவிராசர் அவர்களால் பாடப்பட்ட தனிச் செய்யுள்கள் சில ஆயிரம் என்பர், ஆனால் இவற்றுள் ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை. இதனால் இவற்றை அறிந்த முதியவர்களிடம் கேட்டு அறிந்த சில செய்யுள்களை சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் "முத்தக பஞ்ச விஞ்சதி" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். இதில் உள்ள 25 செய்யுள்களும் தில்லை நடராசக்கடவுள், நல்லூர் முருகன் மற்றும் மாவிட்டபுரம் முருகன் மீது பாடப்பட்டவை ஆகும். மாவிட்டபுர முருகன் தேரில் பவனி வருதலை கண்ணுற்றபோது கூறிய ஆசிரிய விருத்தத்தை கீழே காட்டுதும்:-

"மல்லாக மாதகலான் மருகன் சுன் னாகத்தான் மகன்பா வாணர்
சொல்லாச்சீ ரீவினையான் துன்னாலை யானத்தான் சுரும்ப ரோதிச்
சில்லாலை இருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச் சிகண்டி மாவூர்
வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி வரக்கண் டேனே"

மேல்கண்ட அரிய செய்யுள் "நாமாந்திரியை" என்னும் பிரகேளிகை மரபில் பாடப்பட்டுள்ளது. பிரகேளிகை என்றால் ஆழமாக ஒரு கருத்தும் வெளிப்படையாக வேறு கருத்தும் உள்ளவாறு அமைக்கப்படும் செய்யுள் வகையாகும். இதில் நாமாந்திரியை என்பது பெயர்களில் ஆழமாக ஒரு கருத்தும் வெளிப்படையாக வேறு கருத்தும் உள்ள செய்யுள் ஆகும். இச்செய்யுளில் ஊர்ப் பெயர்களில் இரு கருத்துகள் உள்ளன.

சேது புராணக்கதை ஒன்றைக் கொண்டு சகத்திரானீக நாடகம் என்னும் நாடகத்தையும் இவர் பாடியுள்ளார் ஆனால் இது கிடைக்கப்பெறவில்லை.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. கு முத்துக்குமாரசுவாமிப்ப்பிள்ளை, யேசுமத பரிகாரம், ஞானக் கும்மி ., . பக். 09.
  2. Hudson, Dennis (சனவரி 1992). Religious Controversy in British India: Dialogues in South Asian Languages. நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791408272.
  3. சிவத்தம்பி, கா (1979). "Hindu Reaction to Christian Proselytism and Westernization in 19th Century Sri Lanka". Social Sciences Review (Colombo) 1: 41–75.