மாவிந்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாவிந்தம் என்னும் நூல் தனி நூலாக அச்சிடப்பட்டுள்ளது. [1] [2] [3] இது பெருந்தேவனார் பாரதத்தின் இறுதிப் பகுதி. பாண்டவர் வைகுந்தம் சேர்வதைக் கூறும் செய்திகள் அடங்கிய நூல். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. [4] [5]

நிடத நாட்டின் தலைநகரம் மாவிந்தம். [6]

கதை

இந்த நூல் சொல்லும் கதையின் சுருக்கம் இவ்வாறு உள்ளது.

முன்னோரின் தீரச் செயல்களைக் கேட்டால் தன்னைப் பிடித்திருக்கும் வினை நீங்கும் என அறிந்து 'சனமேனன்' கேட்க, வேதவியாசன் சொல்லுகிறான். - தருமன் ஆட்சிக் காலத்தில் கலியுகம் பிறந்துவிட்டபடியால் நல்லோர் இருத்தலாகாது என்று தான் உலகத்தை விட்டு நீங்கப் போவதைக் கண்ணன் தருமனிடம் கூறினான். சிறுமியர் விளையாட்டாக ஒரு சிறுமியின் வயிற்றில் பிள்ளைத்தாய்ச்சி போல் சீலையைக் கட்டி "இவள் வயிற்றில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா" என்று துருவாச முனிவரிடம் கேட்டனர். முனிவர் சினம் கொண்டு "இவள் உங்களுக்கும், உங்கள் சாமிக்கும் எமனாய் இருக்கவல்ல ஓர் இரும்பு-உலக்கையைப் பெறுவாள்" என்றார். சீலை இரும்பு உலக்கையாக மாறிவிட்டது. அவர்கள் அரத்தால் இரும்பு உலக்கையை இராவிக் கடலில் வீசினர். பொடி சம்பங்கோரையாக வளர்ந்தது. துவராபதி அரச குமாரர்கள் தம்முள் சண்டையிட்டுக்கொண்டபோது அந்தச் சம்பங்கோரைகளைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டனர். உலக்கையில் இருந்த ஒரு துண்டத்தை ஒரு மீன் விழுங்கியது. அம் மீனைப் பிடித்த வேடன் தன் அம்பில் குத்தி வைத்திருந்தான். வேட்டையாடும்போது மானை வீழ்த்திய அந்த உம்பு கண்ணன் காலடியில் குத்தியது. கண்ணன் அருச்சுனனை அதைத்துத் துவரைப்பதி மக்களை வேறிட்டதிற்கு அழைத்துச் செல்லுமாறு அருச்சுனனிடம் கூறிவிட்டு வைகுந்தம் சென்றான். துவராபதியைக் கடல் கொண்டது.

கலியுகம் வந்துவிட்டதை உணர்ந்த தருமன் தன் ஆட்சிப் பொறுப்புகளைப் பரிச்சித்து என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தம்பியரும், துரோபதிநும் புடைசூழ வைகுந்தம் செல்லலானான். வழியில் விநாயகரையும், சேத்திர பாலகனையும் கண்டு வழி கேட்டுக்கொண்டு சென்றான். தரும நெறியையே கடைப்பிடித்து நாடாண்டவன் தருமன் என்பதை உணர்ந்து மேகநாதன் வழி காட்டி அனுப்பிவைத்தான். வழியில் தருமன் சத்திவிருடி என்னும் முனிவனை வணங்கிச் சென்றான். பெரிய மலை ஒன்றின் சாபம், அசுவமுகி என்னும் அரக்கியின் சாபம் ஆகியவற்றைப் போக்கினான். பின்னர் மாகாளியின் அருளைப் பெற்றுச் செல்லும் வழியில் திரௌபதி இறந்தாள். அடுத்து வானர வீரர்களையும், கருடாழ்வாரையும் கடந்து சென்றபோது முத்தலில் சகாதேவனும், அடுந்நு நகுலனும் உயிர் துறந்தனர். பின்னர் பரமேஸ்வரனைப் பார்த்துவிட்டுச் சென்றான். வழியில் தருமனை விழுங்க வந்த ஒரு பாம்பை வீமன் வெட்டி வீழ்த்தினான். அது தன் சாபம் நீங்கி இருடி-மகனாக மாறியது. அடுத்து அருச்சுனன் இறந்தான். பின்னர் எஞ்சிய இருவரையும் தாக்கிய ஒரு பன்றியை வீமன் வீழ்த்தியபோது அது சாபம் நீங்கி முனிவன்-மகனாக மாஆறியது. வீமனை திருமாலின் தூதர்கள் வந்து அழைத்துச் சென்றனர்.

தருமன் ஒரு புருஷ-மிருகத்திடம் வழி கேட்டுக்கொண்டு தனியே சென்றான். தெய்வமாகிய தர்மராசன் தருமனைச் சோதிக்க எண்ணி புழுத்த நாயின் உருவத்தோடு பின் தொடர்ந்தான். தருமன் அந்த நாயைத் தன் தலையில் தூக்கிக்கொண்டு ஒர் ஆற்றைக் கடந்தான். பின்னர் தரும-தெய்வம் "நீ உன் உடலுடனேயே சுவர்க்கம் புகுவாய்" என வரம் தந்து சென்றது. அங்குத் தருமன் கேதாரத்தைக் கண்டான். அப்போது நாராயணன் கட்டளைப்படி தேவர்கள் அவனை அழைத்தார்கள். தருமன் கோயிலை அடைந்தான். அப்போது 'அசுவத்தாமா என்னும் யானை-அரசன் இறந்தான்' என்னும் பொய்யைப் பாரதப் போரின்போது சொன்னதற்காக யம-தூதர்கள் தருமனை ஏழு நரகத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினர். நரக-வேதனையைக் கண்டு தருமன் மனம் வருந்தினான். துரியோதனன் நரகில் துன்புறுவது கண்டு மனம் வருந்திய தருமன் தான் செய்த தருமத்தில் பாதியைத் துரியோதனனுக்குத் தந்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான். பின்னர் பிரமலோகம் வேண்டாம் என்று மேலும் சென்று வைகுந்தத்தைக் கண்டான் நாராயண மூர்த்தி மகாபலிக்குத் தருமனை அறிமுகப் படுத்துகிறார். - இத்துடன் கதை முடிகிறது. [7]

வழிநூல்

இதன் வழிநூலாக, இதன் கதையைக் கூறும் வைகுந்த அம்மானை என்னும் நூல் 7500 அடிகள் கொண்டதாய் ஒரு நூல் வெளிவந்துள்ளது.

அடிக்குறிப்பு

  1. தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு
  2. பெருந்தேவனார் பாரதம் பொழிப்புரையுடன், மாவிந்தம் 1950, பண்டித முத்துரத்த முதலியார் பதிப்பித்தது
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 35. 
  4. 9 ஆம் நூற்றாண்டு நூல்கள்
  5. "காலந்தோறும் தமிழ், 9 ஆம் நூற்றாண்டு நூல்கள்" இம் மூலத்தில் இருந்து 2013-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130708231332/http://kaniyatamil.com/books9.htm. 
  6. நள்வெண்பா, சுயம்வர காண்டம் பாடல்
  7. நிறைவடையவில்லை
"https://tamilar.wiki/index.php?title=மாவிந்தம்&oldid=17476" இருந்து மீள்விக்கப்பட்டது