மரோசரித்ரா
மரோசரித்ரா | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராமா அரங்கன்னல் |
கதை | கே. பாலசந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் சரிதா மாதவி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | ஆண்டாள் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 19 மே 1978 |
ஓட்டம் | 169 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
மரோசரித்ரா 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இந்த திரைப்படமானது தெலுங்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தி மொழியில் ஏக் தூஜே கே லியே என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
இந்த திரைப்படமானது மலையாள மொழியில் திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.[2]
இந்த திரைப்படம் அதிகபட்சமாக 700 நாட்கள் வரை ஓடியது.[3] இயக்குனர் பாலசந்தர் அவர்கள் இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது வென்றார். சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் 100 சிறந்த திரைப்படத்தின் பட்டியலில் இந்த திரைப்படமும் இடம்பெற்றது.
கதை
விசாகப்பட்டினத்தில் குடியேறிய தமிழ் குடும்பம் பாலு உடையது. அந்த வீட்டிற்கு அருகே சுவப்னாவின் குடும்பம் இருக்கிறது. சுவப்னா அதே ஊரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் பெண். வேலையை விட்டு தன் வீட்டிற்க்கு வரும் பாலு, சுவப்னாவுடன் காதல் வயப்படுகிறார். இருவர் குடும்பமும் அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறது. இரு குடும்பத்திற்கும் பொதுவாக இருக்கும் நண்பர் ஒருவர், "அவர்களை ஒரு வருஷம் பார்க்காம, பேசாம இருக்க சொல்லுவோம். அப்புறமும் ரெண்டு பேருக்கும் காதல் இருந்துச்சுனா கல்யாணம் பண்ணி வைங்க" என்று ஆலோசனை சொல்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் பாலு. ஆனால், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், இதை நாம் சரியாக உபயோகித்துக் கொண்டால் நம் காதல் கைக்கூடும் என அவரை சம்மதிக்க வைக்கிறார் சுவப்னா. தான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால், இருவர் வீட்டிலும் எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை தர வேண்டும் என்கிறார் பாலு. இது தான் சமயம் என பாலுவின் தந்தை பாலுவை ஹைதராபாத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார். இடைப்பட்ட காலத்தில் சுவப்னாவின் பெற்றோர் அவளை மனம் மாற்ற முயல்கின்றனர். ஹைதராபாத்துக்கு சென்ற பாலு என்ன ஆனார்? அவர்கள் காதல் கைகூடியதா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘மரோசரித்ரா’.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - பாலு
- சரிதா - சுவப்னா
- மாதவி - சந்தியா
- ஜெ. வி. ரமணமூர்த்தி
- 'காக்கிநாடா' ஷாமலா
- பி. எல். நாராயணா
- ஜெயா விஜயா
- எஸ். கே. மிஸ்ரோ
தயாரிப்பு
நடிகை சரிதாவை மரோசரித்ரா படத்தின் மூலம் பாலசந்தர் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார்.[4]
வரவேற்பு
மரோசரித்ரா திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மட்டும் 18 திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடிய சாதனை படைத்தது.[5] அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிகபட்சமாக பெங்களூர் கல்பனா திரையரங்கில் 693 நாட்களும் மற்றும் மைசூர் காயத்ரி திரையரங்கில் 350 நாட்கள் மேல் ஓடியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை சபையர் திரையரங்கில் 596 நாட்களும்,[6] கோயம்புத்தூரில் ராயல் திரையரங்கில் 450 நாட்களும் மற்றும் சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடியது.[7] கேரளா மாநிலத்தில் 1980 ஆண்டு திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
மறு உருவாக்கம்
தெலுங்கில் வெளியான மரோசரித்ரா படத்தை தமிழில் எடுப்பது என முடிவு செய்திருந்தார் கே. பாலசந்தர். 1977 ஆம் ஆண்டில் கன்னட மொழியில் வெளி வந்து வெற்றி பெற்ற கோகிலா படம், பாலசந்தருக்கு நினைவுக்கு வந்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் அறிமுக நடிகராக மோகன் அதில் நடித்திருந்தனர். தெலுங்கில் எடுத்த 'மரோசரித்ரா'வை, தமிழில் எடுக்க நினைத்த பாலசந்தர், கமல் கேரக்டரில் மோகனை நடிக்கவைப்பது என்று திட்டமிட்டார்.
தமிழில் வந்த கிழக்கே போகும் ரயில் படம் தெலுங்கு மொழியில் தூர்ப்பு வெள்ளே ரயிலு எனும் பெயரில் எடுக்க பட்டு வந்தது, அதில் மோகன் நடித்துக்கொண்டு இருந்தார். அந்த படத்திற்காக மோகன் மொட்டையடித்திருந்தார். கே.பாலசந்தரை நேரில் சந்தித்து, முடி வளர மூணு மாதம் ஆகும் என கூறினார் மோகன். முடி வளர்ந்தவுடன் படம் சம்பந்தமான வேளை பார்க்கலாம் என மோகனை அனுப்பிவைத்தார் பாலசந்தர். அந்த சமயத்தில்தான், தெலுங்கு 'மரோசரித்ரா' அதே மொழியில் தமிழகம், கேரளம், கர்நாடகம் என பல மாநிலங்களிலும் வெளியானது. தெலுங்கிலேயே வந்த 'மரோசரித்ரா'வின் வெற்றியால், படத்தை மீண்டும் தமிழில் எடுப்பது எனும் முடிவை கைவிட்டார் பாலசந்தர்.[8]
மேற்கோள்கள்
- ↑ "‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை". இந்து தமிழ். 20 May 2020. https://www.hindutamil.in/news/blogs/555345-marosarithra-42-years.html.
- ↑ கதிரேசன், எஸ். (14 பிப்ரவரி 2017). "காலத்தை வென்ற காதல் க்ளாஸிக்குகள்! - நாஸ்டால்ஜியா நினைவுகள்". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/tamil-cinema/80774-romantic-movies-of-tamil-cinema-valentines-special.
- ↑ "அழியாத கோலங்கள்" (in ta). குங்குமம். 18 May 2015 இம் மூலத்தில் இருந்து 22 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222101352/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8724&id1=6&issue=20150518.
- ↑ "‘நடிப்பு ராட்சஷி’ சரிதா". இந்து தமிழ். 7 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/558295-saritha.html.
- ↑ https://twitter.com/KHOurPride/status/1263127913961934849
- ↑ "பாலசந்தர் டைரக்ஷனில் உருவான மரோசரித்ரா அற்புத சாதனை". மாலை மலர். 31 சனவரி 2021. https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/01/31021449/2309941/cinima-history-Balachander.vpf. பார்த்த நாள்: 6 மே 2021.
- ↑ ராமலிங்கம், முத்து (7 நவம்பர் 2019). "உண்மையான உலக நாயகன் கமலின் சாதனைகளில் சில துளிகள்...கமல் 65’ ஸ்பெஷல்...". ஏசியாநெட் நியூஸ் தமிழ். https://tamil.asianetnews.com/cinema/kamal-s-65th-birthday-his-lifetime-achievements-q0l08z.
- ↑ ராம்ஜி, வி. (20 மே 2020). "கே.பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ அழைப்பு; மொட்டைத்தலையுடன் வந்த மோகன்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/blogs/555362-kb-mohan-marosarithra.html.