மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கணக்காயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
சங்ககாலப் புலவர் நக்கீரர் இந்தக் கணக்காயனாரின் மகன்.
மதுரைக் கணக்காயனார் பாடல்கள் சொல்லும் செய்தி
அகநானூறு 27 - பாலை
- பாண்டியர் வேங்கடமலை யானைகளைப் போருக்குப் பயன்படுத்தினர்.
- பாண்டியரின் கொற்கை முத்துப்போல் தலைவியின் பல் இருந்ததாம்.
- அவளது கண் அழுது அழுது போர்க்களத்தில் போர்களத்தில் வேந்தனின் கண் சிவந்திருப்பது போல் ஆயிற்றாம்.
அகநானூறு 336 - குறிஞ்சி
அல்லகுறிப் பட்ட தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
அவள் பசும்பூட் பாண்டியனின் பொதியமலையில் பூத்த காந்தள் மலர் போல் மணக்கும் கூந்தலையும், நெற்றியையும் உடையவள்.
வென்வேற் பொறையனுக்கும் கொல்லிமலைக்கும் உள்ள தொடர்பைப் போல நட்பினை உடையவள்.
தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து (பட்டினப்பாக்கத்து) மோதும் கடல்லை போல நெஞ்சே! நீ அலைமோதுகிறாய்.
என்கிறான்.
அகநானூறு 342 - குறிஞ்சி
தலைவன் தலைவியை அடைய வருகிறான். குறியிடம் பிழைபட்டுவிடுகிறது. அவளை அடையமுடியவில்லை. வறிது மீளும்போது தன் நெஞ்சோடு பேசுகிறான்.
நெஞ்சே! நீ யார்? நீயும் நானும் ஒன்றுதானே? கிளைஞன்தானே? ஏன் கலங்குகிறாய்?
- தென்னன் என்னும் கள்வர் கோமான் ஏவல் இளையர் தலைவன். அவன் பல ஊர்களைப் பருந்து படச் சூரையாடினான். அங்குக் கவர்ந்த பொருள்களை மழை போல் தன் நாட்டு மக்களுக்கு வாரி வழங்கினான். அதனால் அவன் புகழ் எங்கும் பரவியிருந்தது.
- அவன் நாட்டில் நீர் ஒழுகும் இடத்தில் கல்அளை (கல்லுகுகுகை) ஒன்று இருக்கிறதே! அங்குள்ள சுனையில் பசுமையான இலைகளுக்கு இடையே செந்நிறத்துடன் பூத்திருக்கும் நெய்தல் பூப் போன்ற அவள் கண்களுக்கு இடையே என்னைத் தொலைத்துவிட்டேன் - என்கிறான்.
- 'நீரிழி மருங்கிற் கல்லளை' என்பது குற்றாலம் அருவி
நற்றிணை 23 - குறிஞ்சி
தாய் நலம் பேணிய தலைவியின் அழகு அழிந்து அவளது கண்கள் கொற்கை முத்தைப் போல் கண்ணீர் சிந்துவதைக் காட்டித் திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையுமாறு தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
புறநானூறு 330
- வாகைத்திணை
- மூதின்முல்லை
பகைவேந்தன் படை தன்னைத் தாண்டி வராவண்ணம் தான் ஒருவனாகவே தன் வாளைக்கொண்டு தடுத்து நிறுத்தினான். பொங்கிவரும் கடலுக்கு ஆழிக்கரை போல நின்றான்.
அவனைப் பாடிக்கொண்டு அவன் இல்லத்துக்குச் சென்றவர்களுக்கு வாரி வாரி வழங்கினான். வாங்குவோர் தாங்கமுடியாத அளவுக்கு மிகுதியாக வழங்கினான்.