மதன் (இதழாளர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மதன் |
---|---|
பிறப்புபெயர் | கோவிந்த குமார் |
பிறந்ததிகதி | 11 சூலை 1947 |
பிறந்தஇடம் | திருவரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
பணி | கேலிச் சித்திர ஓவியர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் |
தேசியம் | இந்தியர் |
மதன் என்கிற மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார், தமிழ்நாட்டு இதழாளர்,கேலிச் சித்திர ஓவியர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார்.[1] குறைந்த அளவில் கோடுகளைப் பயன்படுத்தி சிறப்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் திறமையானவலாக அறியப்படுகிறார்.
பிறப்பு மற்றும் கல்வி
இவர் 1947ஆம் ஆண்டு சூலை 11 ஆம் நாள் பிறந்தார். திருவரங்கத்தில் பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து பள்ளியிலும் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1969 ஆம் ஆண்டில் விகடன் இதழில் பயிற்சி கேலிச்சித்திரக்காரராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவற்றின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆனந்த விகடனில் இவர் வழங்கி வந்த ஹாய் மதன்! எனும் கேள்வி - பதில் பகுதி மிகவும் புகழ் பெற்றது.[2] பிரபலமான கேலிச்சித்திர ஓவியர் ஆர். கே. லட்சுமணனை தனது வழிகாட்டியாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
விகடன் குழுமத்திலிருந்து வெளியேறுதல்
விகடன் குழுமத்தில் 30 ஆண்டு காலம் பணிபுரிந்த மதன், 02.05.2012 நாளிட்ட விகடன் இதழில் வெளியான கேள்வி பதிலுக்கு, விகடன் வெளியிட்ட படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விகடன் குழுமத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.[3]
விருதுகள்
2015 ஆம் ஆண்டு கார்ட்டூன் வாட்ச் என்ற சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வெளிவரும் இதழ் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை மதனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.[4] 2016 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை தமிழன் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.[5]
இதர பெருமைகள்
சிறந்த திரைப்பட விமர்சகராக இருந்த காரணத்தால் கொலம்பியா டிரைஸ்டார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், பிலிப்பைன்சு நாட்டில் மணிலாவில் நடந்த காட்சில்லா திரைப்பட முன்னோட்டக் காட்சி மற்றும் இயக்குநர்களுடனான பேட்டிக்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக மதன் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த தனிப்பெருமையும் இவருக்குண்டு.[6]
பிற ஊடகப் பங்களிப்பு
இவர் அன்பே சிவம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகராகவும், உரையாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியில் மதன்ஸ் திரைப்பார்வை என்ற திரைவிமர்சன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியில் மதன் டாக்கீசு எனும் திரைவிமர்சன நிகழ்ச்சியை நடத்தினார்.[2] பின்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் ”மதன் மூவி மேட்னி” என்ற பெயரில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[7] கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் என்ற புதிய இயக்குநர்களைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியில் இவர் நடுவர்களில் ஒருவராக இருந்தார். மதன் தற்போது வியலாளர்கள், விளம்பர, காட்சி /கேள்வி ஊடக செயல்திட்டங்கள் தொடர்பாக ஊடகத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்கும் 'மதன்'ஸ் ஸ்வே' என்ற பெயரில் படைப்பாக்க ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[6]
எழுத்துப்பணி
இவர் முகலாயர்கள் பற்றி எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்து புகழ் பெற்றது. பின்னர் இத்தொடர் நுாலாகவும் வெளியானது. இந்நூல் 18 பதிப்புகளைக் கண்டு 1,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ள நுாலாகும்.[6] இவரது கேள்வி பதில்கள் விகடன் பிரசுரத்தால் ஹாய் மதன் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. அதே போன்று இவரது நகைச்சுவைத் துணுக்குகள் விகடன் பிரசுரத்தால் மதன் ஜோக்ஸ் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. இவ்விரு நுால்களுமே இன்று வரை விற்பனையில் தொடர் சாதனை படைப்பவையாக இருந்து வருகின்றன.[6]
இவருடைய படைப்புகள்
- வந்தார்கள் வென்றார்கள்
- மனிதனுக்குள் ஒரு மிருகம்
- மனிதனும் மர்மங்களும்
- மதன் ஜோக்ஸ்
- மதன் கார்ட்டூன்ஸ்
- கி.மு கி.பி
- நான் ஒரு ரசிகன்
1998ஆம் ஆண்டு விண்நாயகன் என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.
உசாத்துணை
- மதன் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ Ramani, Hema Iyer (6 August 2015). "‘A cartoonist is born, not made’". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/cartoonist-madhan-has-found-success-in-many-realms/article7507381.ece. பார்த்த நாள்: 23 August 2017.
- ↑ 2.0 2.1 http://www.veethi.com/india-people/madhan_(cartoonist)-profile-9685-22.htm
- ↑ https://tamil.oneindia.com/news/2012/05/17/tamilnadu-vikatan-terminates-cartoonist-madhan-154153.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
- ↑ https://tvnews4u.com/puthiya-thalaimurai-tamilan-awards-2016-aired-24th-august/
- ↑ 6.0 6.1 6.2 6.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.
- ↑ Naig, Udhav (9 November 2014). "Movie critic Madhan is back with a new show". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/movie-critic-madhan-is-back-with-a-new-show/article6579557.ece. பார்த்த நாள்: 23 August 2017.