மகிபை பாவிசைக்கோ
மகிபை பாவிசைக்கோ | |
---|---|
பிறப்பு | பீர் முகமது 15 திசம்பர் 1942 மகிபாலன்பட்டி, சிவகங்கைச் சீமை, பிரித்தானிய இந்தியா (தற்போது சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 13 திசம்பர் 2016 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 73)
அடக்கத்தலம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், இதழாளர் |
தேசியம் | தமிழர் |
மகிபை பாவிசைக்கோ (15 திசம்பர் 1942 - 13 திசம்பர் 2016) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், தனித்தமிழ் இயக்க முன்னோடி, மற்றும் இதழாளர் ஆவார்.[1]
தொடக்க வாழ்க்கை
இன்றைய தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் 15 திசம்பர் 1942 அன்று ஒரு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது.
கல்வி
பன்னிரண்டு வயதில் தமிழில் புலமை பெற்று பாட்டு இயற்றுமளவுக்குத் தமிழில் புலமை பெற்றார். தனது நண்பர்களின் யோசனையின்பேரில் தன்பெயரை தனித்தமிழில் தான் பிறந்த மகிபாலன்பட்டியின் பெயரையும் சேர்த்து மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். மகிபாலன்பட்டியில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நக்கீரர் கழக திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
இலக்கியப் பணிகள்
துவக்கத்தில் திராவிட இயக்கக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் "தமிழ்த்தேசியத் தந்தை" பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார். அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை எழுதிய இவர், பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏட்டின் முகவராகப் பணியாற்றினார்.
முஸ்லிம் முரசு, செம்பரிதி, ஒருமைத் தூதன், வஞ்சி மாலை உள்ளிட்ட பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
சிறுகதை, திரைக்கதை, புதினம், நாடகம், கட்டுரை, திறனாய்வு எனப் பல்துறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
பொதுவாழ்வு
கல்லூரி காலத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். தனித்தமிழ் இயக்கச் செயல்பாடுகளினால் 1960களில் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் குடியேறினார். அங்கு தமிழ் மொழி பாதுகாப்பு போராட்டங்களையும், தமிழர் நலப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளார்.
பெரியார், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் உள்ளிட்ட தமிழக ஆளுமைகள் மட்டுமில்லாமல் பெருஞ்சித்திரனார் வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம், சு. ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்கப் பெரிதும் உதவினார். தன்மான தமிழர் பேரவை, தனித் தமிழ் சேனை உள்ளிட்ட கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிறுவனத் தலைவராகவும் இயங்கினார்.[2]
மறைவு
நவம்பர் 2016-இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். எனினும் மருத்துவம் பலனளிக்காமல் 13 திசம்பர் அன்று மாலையில் தன் 84-ஆம் அகவையில் காலமானார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் பிறந்தநாளான திசம்பர் 15 அன்று காலை முதல் பிற்பகல் 2.30 வரை லிங்கராசாபுரத்தில் வைக்கப்பட்ட அவர் உடல், அதன்பின் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு அலசூர் திருவள்ளுவர் சிலை அருகே இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கிருந்து லட்சுமிபுரத்தில் உள்ள கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தமிழ் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "புலவர் மாகிபை பாவிசைக்கோ காலமானார்". கட்டுரை. சங்கதி. 16 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
- ↑ "தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்". செய்தி. தி இந்து. 15 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.