ப. தங்கம்
ப. தங்கம் (P.Thangam, பிறப்பு: சூன் 15, 1937), தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த ஓவியர் ஆவார். இவரது மனைவி சந்திரோதயம் ஒரு ஓவியரும் ஓவிய ஆசிரியருமாவார். சித்திரக்கதைகளில் நாட்டம் மிகுந்தவர். இவரது ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றனவாகும். தங்கம், 27 அக்டோபர் 2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
கல்வி, பணி
கும்பகோணம் ஓவியப்பள்ளியில் (தற்போது கல்லூரி) 1950ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் ஓவியம் பயின்று, சென்னையில் தினத்தந்தி இதழில் ஓவியராக 1958ஆம் ஆண்டு முதல் மூன்று காலம் பணியாற்றி, மதுரை மாவட்டத்தில் நாகமலை, தே.கல்லுபட்டி, திருமங்கலம், திருச்சி அருகே திருவெறும்பூர் ஆகிய ஊர்களில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு பின்னர் 1963ஆம் ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓவியர், புகைப்படக்கலைஞராக 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
சித்திரக்கதை
சென்னையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வசந்தம் வார மலரில் ‘வீர சோழன்‘ என்ற தலைப்பில் ஏழு ஆண்டுகள் மாமன்னன் ராஜராஜசோழனின் வீர வரலாற்றினை வரைந்து சித்திரக்கதையாக வெளியிட்டார். அம்மன்னனைப் பற்றிய சித்திரக்கதைகளை தமிழகக் குழந்தைகளுக்குத் தருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டு இதழ்களில் புகைப்படங்கள்
மருத்துவக் கல்லூரியில் இவர் ஓவியராகவும் புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றியபோது மருத்துவத்துறைக்காக நுண்நோக்கியில் எடுத்த இவருடைய புகைப்படங்கள் வெளியான வெளிநாட்டு நூல் மற்றும் இதழ்கள்.
- இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்‘ என்ற நூல்.
- அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘கேன்சர்‘ என்ற மருத்துவ இதழ் (1978).
நூல்கள்
- ஓவியனின் கதை (தன் வரலாறு), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (டிசம்பர் 2010) [1]
- அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை (ஒரு தமிழ் ஓவியனின் அமெரிக்க பயணக்கதை), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (டிசம்பர் 2003) [2]
- இராஜகம்பீரன் (வரலாற்று சித்திரக்கதை), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (மார்ச் 2008) [3]
- கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர், 10 பத்து பகுதிகள் (முதல் பகுதி, சூலை 2016), (இரண்டாம் பகுதி, டிசம்பர் 2016), (மூன்றாம் பகுதி, செப்டம்பர் 2017), (நான்காம் பகுதி, மார்ச் 2018), (ஐந்தாம் பகுதி, சூலை 2018), (ஆறாம் பகுதி, பிப்ரவரி 2019), (ஏழாம் பகுதி, ஆகஸ்டு 2019), (எட்டாம் பகுதி, மே 2020), (ஒன்பதாம் பகுதி, செப்டம்பர் 2020), (பத்தாம் பகுதி, ஜனவரி 2021). கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களை 10 பகுதிகளாகப் பிரித்து 1,000 படங்கள் வரைய முடிவு செய்து 1,050 படங்களுக்கு மேல் வரைந்து சித்திரக்கதையாக நிறைவு செய்துள்ளதாக நூலாசிரியர் கூறுகிறார். [4]
ஓவியங்கள்
இவர், தனது மனைவியுடன் வரைந்த ஓவியங்கள் மிகச் சிறந்த கலைப்படைப்புகள் ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கன பின்வருவனவாகும்.
- தஞ்சாவூர் பெரிய கோயிலில் சரஸ்வதி, பிரஹ்ஹன் நாயகி, வராகியம்மன் ஓவியங்கள்
- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மன் ஓவியம்
- திருவையாறு தியாகராஜர் சன்னதியில் உஞ்சிவிருத்தி தோற்றத்தில் தியாகராஜர் ஓவியம்
இவற்றையும் காண்க
உசாத்துணை
- ↑ "Online Public Access Catalog (OPAC) Connemara Public Library" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304130927/http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=8564151.
- ↑ "Online Public Access Catalog (OPAC) Connemara Public Library" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304130427/http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=315386.
- ↑ கீற்று, தமிழ்ச்சித்திரக்கதைகள் ஓர் அறிமுகம்
- ↑ கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர். பத்தாம் பகுதி, ஜனவரி 2021, ப.9