பொ. திருகூடசுந்தரம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பொ. திருகூடசுந்தரம் |
---|---|
பிறந்ததிகதி | நாள்: 1891 |
பிறந்தஇடம் | இடம்:திருவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு இந்தியா |
இறப்பு | நாள்: 1969 |
பணி | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | M.A., B.L. |
காலம் | 1915 முதல் 1969 வரை |
வகை | கட்டுரைகள் |
கருப்பொருள் | பாலியல் அறிவியல் இலக்கியக் கட்டுரைகள் |
இலக்கிய இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
பிள்ளைகள் | பொன்னம்பலம் சொர்ணம்மாள் |
பொ. திருகூடசுந்தரம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர், இதழாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.
பிறப்பும் படிப்பும்
பொ. திருகூடசுந்தரம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் திருவைகுண்டத்தில் பொன்னம்பலம் பிள்ளை – சொர்ணாம்பாள் என்னும் இணையருக்கு 1891ஆம் ஆண்டில் பிறந்தார். திருவைகுண்டத்திலேயே தொடக்கக்கல்வி பயின்ற அவர்,5ஆம் படிவம் முதலே படிப்பில் முதலாமவராகத் திகழ்ந்தார். திருநெல்வேலியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்ற பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்து, கலைமுதுவர் (Master of Arts) தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். இவர் கமலம் என்பவரை சாதிமறுத்தும் புரோகிதச்சடங்குமறுத்தும் தாலிகட்டுதல் மறுத்தும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணம் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் 1931 அக்டோபர் மாதம் நடைபெற்றது.[1]
தொழிலும் போராட்டமும்
திருகூடசுந்தரம் சட்ட இளவர் பட்டம் பெற்றதும் நீதிமன்றத்தில் பதிந்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார். 1921ஆம் ஆண்டில் ஆங்கிலேயே அரசிற்கு எதிராக அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும்படி காந்தி அழைப்புவிடுத்தார். அதனையேற்று திருகூடசுந்தரமும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1939ஆம் ஆண்டில் வேதாரண்யம் என்னும் மரைக்காட்டில் (மான்கள் நிறைந்த காடு) நடைபெற்றஉப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார்.
காந்தியப் பணிகள்
பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்தின் செட்டிநாட்டுப் பகுதியிலும் காந்திய இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். செட்டிநாட்டு இளைஞர்களைத் திரட்டி அப்பகுதியில் உள்ள ஊர்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். அப்பணியைப் பாராட்டி குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பா, தோட்டி மகாத்துமா என திருகூடசுந்தரத்தைப் புகழ்ந்து கட்டுரை எழுதினார். அப்பணியை மற்றவர்கள் எவ்வாறு எள்ளிநகையாடியவர்களைப் பற்றி ஊழியன் இதழின் திருகூடசுந்தரம் கட்டுரைகள் எழுதினார். தீண்டாமை ஒழிக்க சாதிகடந்த திருமணங்களை காந்தி ஊக்குவித்தார். எனவே, திருகூடசுந்தரமும் சாதிகடந்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் நாகர்கோவிலில் இவரும் இவர்தம் மனைவியாரும் தங்கி அப்பகுதியில் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இவர்களுக்கு பொன்னம்பலம் என்னும் மகனும் சொர்ணாம்பாள் என்னும் மகளும் பிறந்தனர்.
வகித்த பொறுப்புகள்
- திருநெல்வேலி நகர சபையில் உறுப்பினர்.
- தேவகோட்டை நகரசபையில் துணைத் தலைவர்.
- சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் அவை உறுப்பினர்.
- சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியர்.
எழுதிய நூல்கள்
1946ஆம் ஆண்டில் வெளிவந்த அப்பாவும் மகனும் என்னும் நூலில் இவர் பத்து நூல்களை சொந்தமாக எழுதவும் பத்து நூல்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றுள் அறிய வந்துள்ள நூல்கள் வருமாறு:
வ.எண் | முதற்பதிப்பு ஆண்டு | நூல் | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1915 திசம்பர் | விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை | காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை | இந்நூல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு உள்ளன. |
02 | குழந்தைகள் கேள்வியும் பதிலும் | குழந்தைகளுக்கான அறிவியல் கேள்வி – பதில்கள் | ||
03 | 1946 | அப்பாவும் மகனும் | காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை | குழந்தைகளுக்கான 251 அறிவியல் கேள்வி – பதில்கள் |
04 | தந்தையும் மகளும் | குழந்தைகளுக்கான 206 அறிவியல் கேள்வி – பதில்கள் | ||
05 | அண்ணனும் தங்கையும் | குழந்தைகளுக்கான அறிவியல் கேள்வி – பதில்கள் | ||
06 | 1946 நவம்பர் | குழந்தை எப்படிப் பிறக்கிறது? | காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை | குழந்தைகளுக்கான பாலியல் கல்விநூல் தமிழ் வளர்ச்சிக் கழக பரிசு பெற்றது. |
07 | ஜவஹர் கதை | |||
08 | விஞ்ஞானப் பெரியோர்கள் | |||
09 | வெற்றி யாருக்கு? | |||
10 | எனது பூங்கா | |||
11 | மந்தரை சூழ்ச்சி | |||
12 | இதய உணர்ச்சி | |||
13 | அழியாச் செல்வம் | |||
14 | அமுதமொழிகள் | |||
15 | அணையா விளக்கு | |||
16 | தாசியின் காதல் | |||
17 | பொழுது புலர்ந்தது | |||
18 | பாஞ்சாலி சபதம் | |||
19 | இனிய சுவைகள் | |||
20 | சிலப்பதிகாரச் சிந்தனை | |||
21 | சங்ககால வீரம் | சிறீபாபுசி பதிப்பகம், சென்னை | சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் கையாண்ட முறைகளையும் மக்கள் கொண்டிருந்த வீரத்தினையும் ஆராய்ந்து வீரம் எத்தன்மையது என்று விளக்கும் ஓர் ஆராய்ச்சிநூல். | |
22 | மாதவியின் மாண்பு | சிறீபாபுசி பதிப்பகம், சென்னை | டாக்டர் மு. வரதராசனார் சிலப்பதிகாரத்தில் காணும் மாதவி, மாண்பு மிக்கவள் என்று தம் ‘மாதவி’ என்னும் நூலில் கூறுகின்றார். அவர் கூறுவது முற்றிலும் தவறு. அறநெறிக்கு விரோதமானது. அவள் மாசுடையவள் என்று காட்டும் ஓர் ஆராய்ச்சி நூல். | |
23 | ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம் | சிறீபாபுசி பதிப்பகம், சென்னை | ||
24 | கொக்கோக விளக்கம் | |||
25 | அறிவுக் கனிகள் | |||
26 | விஞ்ஞானம் எதற்கு? | |||
27 | போரும் அமைதியும் | டால்சுடாய் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு | ||
28 | காந்தி வழி | |||
29 | சத்தியகிராகம் | |||
30 | ஆங்கிலக் கவிதைமலர்கள் | |||
31 | பாபுஜி காட்டும் பாதை | சிறீபாபுசி பதிப்பகம், சென்னை | பலாத்காரத்தில் சிக்கித் தவிக்கும் உலக மக்களை அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வில் எல்லா இன்பங்களையும் அடைய உதவும் உன்னத நூல். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இன்பங்காணவும் தேசப்பணியில் ஈடுபடவும் வழிகாட்டும் நூல். |
எழுதிய முன்னுரைகள்
திருகூடசுந்தரம், மற்றவர்கள் எழுதிய சில நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில:
இதழாளர்
காந்தி நடத்திய அரிசன் இதழின் தமிழ்ப் பதிப்பான தமிழ் அரிசன் என்னும் இதழுக்கு இவரும் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கமும் ஆசிரியர்களாக இருந்தனர்.
எழுதிய இதழ்கள்
- காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஊழியன், குமரன் இதழ்கள்
- சுத்தானந்த பாரதியின் உதவியோடு வ. வே. சு. ஐயர் நடத்திய பாலபாரதி இதழ்
- சுதேசமித்திரன் இதழ்
கலைக்களஞ்சியப் பணி
இந்தியா நாடு விடுதலைபெற்ற பின்னர், தமிழக அரசு தமிழில் கலைக்களஞ்சியத் தொகுதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. அப்பணிக்கு ஆசிரியராக பெரியசாமி தூரன் பொறுப்பேற்றார். திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார்.
மறைவு
காந்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாகக்கொண்ட திருகூடசுந்தரம் தான் வாழ்ந்த சென்னை, தியாகராய நகர், கோவிந்து தெரு வீட்டில் 1969ஆம் ஆண்டு மறைந்தார்.