பெ. மணியரசன்
பெ. மணியரசன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10 மே 1946 |
பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.
குடும்பம்
இவர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி காண்மத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெரியசாமி, தாயார் பாப்பம்மாள், சகோதரர் பெயர் பெ. ரெங்கராசு. தோழர் பெ. மணியரசனுக்கு ம. லெட்சுமி என்ற மனைவியும் ம. செந்தமிழன் என்ற மகனும் உள்ளனர்.
அரசியல்
தொடக்கத்தில் தென்மொழி இயக்கத்தோடும் தமிழ்த்தேசியத்தந்தை பாவலரேறு அவர்களின் மீதுள்ள ஈடுபாட்டில் பெருஞ்சித்திரனார் கழகம் என்ற அமைப்பை நீண்ட காலம் நடத்தி இளைஞர்களை ஒருங்கிணைத்தார். தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தஞ்சை - திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மக்கள் பணியாற்றியவர்கள் தோழர்கள் பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் ஆகியோர். சீக்கிய இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சியைக் கண்டித்தும், தமிழீழ இனப்படுகொலையைக் கண்டுகொள்ளாததைக் கண்டித்தும் இவர்களது தலைமையில் தணிகைச்செல்வன், இராசேந்திரச்சோழன், தஞ்சை க. பழனிமாணிக்கம், த. கா. பரமசிவம், மா. கோ. தேவராசன் (சிதம்பரம்), புலவர் கி. த. பச்சையப்பன் உள்ளிட்ட பலர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்து 1985 சூன் 11, 12 ஆகிய இரு நாட்கள் கல்லணையில் விவாதித்தனர். இவர்கள் அனைவரையும் இந்தியப் பொதுவுடமைக்கட்சி, கட்சியில் இருந்து வெளியேற்றியது. 1985 சூன் 29,30 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் கூடிய இவர்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (Marxist Communist Party - எம். சி. பி.) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். அதன் அமைப்பாளராக தோழர் பெ. மணியரசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (சி. பி. எம்.) தலைமையிலிருந்து வெளியேறி எம். சி. பி. ஐ. என்ற பெயரில் பீகாரைச் சேர்ந்த சிறீவஸ்த்தவா தலைமையில் ஓர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அவர்களோடு தமிழகத் தோழர்கள் இணைந்தனர். அதன்பிறகு, இக்கட்சி இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (எம். சி. பி. ஐ) ஆனது. ஆனால், அவர்களும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை ஏற்க மறுத்தனர். இதனால், எம். சி. பி. ஐ.லிருந்து பெ. மணியரசன் தலைமையிலான தமிழகத் தோழர்கள் அனைவரும் வெளியேற முடிவு செய்தனர். இதன் தொடக்கமாக 1990 பிப்ரவரி 25 அன்று சென்னை பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” என்ற தலைப்பில் மாநாடு ஒன்று தோழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கட்சியின் மாநாடாக இல்லாமல் பொதுநிலையில் நடத்தப்பட்ட அம்மாநாடு அது.
கொள்கைகள்
இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்தது. இதில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும், தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த்தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும், இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை தோழர் பெ. மணியரசன் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுடன் ஒருமனதாக அது ஏற்கப்பட்டது. மாநாட்டில் தமிழ்த்தேசியத்தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன், சுப. வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கம் தருமாறு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 1990 திசம்பர் 25ஆம் நாள் சிதம்பரத்தில் வைத்து பெ. மணியரசன் சிறைப்படுத்தப்பட்டார். 8 ஆண்டுகள் இவ்வழக்கு நடந்தது. இறுதியில் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
எம். சி. பி. ஐ. யின் தமிழ்நாடு கிளை அக்கட்சியிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” என்ற புதிய பெயரை வைத்துக்கொண்டது. கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம், அய்யம்பேட்டையில் 1991 பிப்ரவரி 1, 2, 3 நாட்களில் நடைபெற்றது. கட்சியின் கொள்கை அறிக்கை முடிவு செய்யப்பட்டது. தோழர் பெ. மணியரசன் அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்டு த. தே. பொ. க. இயங்கத் தொடங்கியது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 1992 பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் தனது முதல் மாநாட்டை நடத்தியது. அதில், த. தே. பொ. க. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. பிறகு, 1998, திசம்பர் 24, 25, 26 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2005 அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 5ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையிலும், அமைப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மேற்கண்ட கொள்கை அறிக்கையின் அடித்தளத்தில் நின்று துல்லியப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு, ஓசூரில் 2011 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 6ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கை புதிதாக மறுவரைவு செய்யப்பட்டது. தேவைக்கேற்ப அமைப்புச் சட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு, புதிய அமைப்புச் சட்டமும் இச்சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொடியில் மூன்றில் இரண்டு பாகத்தில் சிவப்பு வண்ணம் உள்ளது. இந்தச் சிவப்பு, புரட்சியின் அடையாளம், ஈகத்தின் வெளிப்பாடு. நம் குருதியின் மறுபதிப்பு. எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பாகம் வெள்ளை நிறம். வெள்ளை நிறப் பின்னணி, அமைதியின் மீது, உலகு தழுவிய சமாதானத்தின் மீது தமிழர்களுக்குள்ள நமக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது. அமையப்போகும் தமிழ்த்தேசக் குடியரசு உலக அமைதிக்குப் பாடுபடும் என்பதைக் குறிக்கிறது. அந்த வெள்ளைப் பகுதியில் நம்முடைய தமிழ்த்தேசத்தின் வரைபடம் கருப்பு வண்ணத்தில் உள்ளது. கருப்பு வண்ணம் தமிழ் இனத்தின் நிறம்.
போராட்டங்கள்
4 சூன் 2017 அன்று கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகளும் பொதுமக்களும் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பெ. மணியரசனை காவல்துறையினர் கைது செய்தனர்.[1]
கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்ததை காட்டும் விதமாக அங்கு பெ. மணியரசன் அறவழியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்தனர். இந்நிலையில் 10 சூன் 2018 அன்று இரவு சென்னை செல்வதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தோழர் ஒருவருடன் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு வந்தார் மணியரசன். இவர்களை மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், மணியரசன் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்குக் கால் முட்டி, கை என உடம்பின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.[2][3]
எழுதிய நூல்கள்
- ஆரியம் X தமிழ் தேசியம்
- திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? [4]
- தமிழ்த் தேசியம் பன்முக பார்வை (தொகுதி -1, 2)
- தை நிமிர்வு
- தமிழ் தேசியம் அரசியல் அறம் அமைப்பு
- தமிழ் பேரரசன் இராசராசன்
- தமிழ்தேசக் குடியரசு
- தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா?
- காவிரி நேற்று-இன்று-நாளை
- இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த்தேசியமே
- ஒரு முடிவுக்கு வாருங்கள்
- சாதியும் தமிழ்த்தேசியமும்
- தேர்தலும் தமிழ்த்தேசியமும்
- பேராசிரியர் அ. மார்க்ஸுடன் இணைந்து மணியரசன் பாரதி - ஒரு சமூக இயல் பார்வை என்ற நுலை எழுதியிருக்கிறார்.[5]
- உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள் பெ. மணியரசன் மற்றும் கி .வெங்கட்ராமன்
மேற்கோள்கள்
- ↑ தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் திடீர் கைது
- ↑ பெ.மணியரசன் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது!
- ↑ "பெ.மணியரசன் மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி". Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சி - சென்னையில் நூலறிமுகம்!
- ↑ பிரபஞ்சன் (10 சனவரி 2018). "தோழமை என்று ஒரு சொல்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2018.