பெரியார் ஈ. வெ. இராமசாமியும் சமூக சீர்திருத்தமும்
ஈ. வெ. இராமசாமி[1] (செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973), இராமசாமி, ஈ. வெ. ரா, தந்தை பெரியார் அல்லது பெரியார் என்று அழைக்கபடும் இவர் திராவிட சமூகச் சீர்திருத்தவாதி. இவர் திராவிட இயக்கம், சுய மரியாதை இயக்கம் ஆகியவற்றை நிறுவினார்.[2][3][4] மக்கள் தமது சமுதாயத்தை பரிபூரணமாக்க சீர்திருத்தம் அவசரத் தேவையாக உள்ளது என்பதை உணர வேண்டும் என்று விரும்பினார். அரசு அரசியல் கட்சிகள், மற்றும் சமூக தொழிலாளர்கள் சமுதாயத்தில் உள்ள அவலங்களைக் கண்டு அவற்றைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்பினார்.[5]
சுயமரியாதை இயக்கம்
இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள்[6] என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
- சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்[7].
- ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது[7].
- சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
- அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுபாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது[7].
- கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது[7].
- இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928[7] லேயே வலியுறுத்தியது.
இந்தப் பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார்.[8] சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது[9].
மேற்கோள்கள்
- ↑ A biographical sketch பரணிடப்பட்டது 2005-07-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Thomas Pantham; Vrajendra Raj Mehta; Vrjendra Raj Mehta (2006). Political Ideas in Modern India: thematic explorations. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7619-3420-0. https://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs.
- ↑ N.D. Arora/S.S. Awasthy. Political Theory and Political Thought. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8124111642. https://books.google.com/books?vid=ISBN8124111642&id=szBpnYfmH0cC&pg=PA425&lpg=PA425&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=zyuKCxtk4jFplHL8Y_JeaiDUb94.
- ↑ Thakurta, Paranjoy Guha and Shankar Raghuraman (2004) A Time of Coalitions: Divided We Stand, Sage Publications. New Delhi, p. 230.
- ↑ Gopalakrishnan, Periyar: Father of the Tamil race, p. 66.
- ↑ Diehl, ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கங்கள். 77 & 78.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 பெரியார் காலத்தில் சுயமரியாதை இயக்கம் பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 26-06-2009
- ↑ சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 4.
- ↑ சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 19.