பூவண்ணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பூவண்ணன் |
---|---|
பிறப்புபெயர் | வே. தா. கோபாலகிருஷ்ணன் |
பிறந்தஇடம் | தமிழ்நாடு |
புனைபெயர் | பூவண்ணன் |
பணி | எழுத்தாளர், பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் |
வகை | குழந்தைகள் இலக்கியம் |
பூவண்ணன் (இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன்) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய உப்பில்லாத பண்டம் முதல் பரிசைப் பெற்றது. மேலும் இவர் எழுதிய ஆலம் விழுது, காவேரியின் அன்பு ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் நம்ம குழந்தைகள், அன்பின் அலைகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு. இந்தப்படங்களுக்காக பூவண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருது கிடைத்தது..[1]
இலக்கிய வாழ்க்கை
பூவண்ணன், சிறு வயதில் வாசித்த ஆனந்த விகடன், பிரசண்ட விகடன் போன்ற இதழ்கள் மூலம் எழுத்தார்வம் உண்டானது. இல்லத்தில் நடக்கும் வள்ளலார் பற்றிய கூட்டத்திற்கு வருகை தந்த தமிழறிஞர் இளவழகனார், பூவண்ணனுக்கு ‘திருவருட்பா’ நூலைப் பரிசாக அளித்தார். அதை வாசித்ததன் மூலமும், கல்கியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ’சிவகாமியின் சபதம்’ போன்ற நூல்களைப் படித்ததன் மூலமும் இலக்கிய ஆர்வம் மேம்பட்டது. பாட்டி சொன்ன செய்தியை அடிப்படையாக வைத்து கைப்பலகையில் (சிலேட்) ஒரு கதையை எழுதினார். அதுதான் முதல் முயற்சி. பிற்காலத்தில் தினமணிகதிரின் ‘முதல் பிரசவம்’ என்ற பகுதியில் அச்சிறுகதை ’பலகையில் ஒரு கதை’ என்ற தலைப்பில் பிரசுரமானது.
பள்ளியில் உடன்பயின்ற நண்பர் எத்திராஜன், பூவண்ணனை எழுத ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பில், ‘வாரீர் விரைந்து’ என்னும் தலைப்பிலான முதல் கட்டுரை, 1949-ல், ‘குஞ்சு’ என்ற சிறார் இதழின் பொங்கல் மலரில் வெளியானது. ‘மாலை நேரத்திலே..’ என்ற முதல் கவிதை, ’மான்’ இதழில், 1949-ல் வெளியானது. முதல் சிறுகதை, ’அன்பிற்கும் உண்டோ?’ புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பாலர் மலரில் வெளியானது.
எத்திராஜன் மூலமாக குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் பூவண்ணனை எழுதத் தூண்டினார். வள்ளியப்பா தந்த ஊக்குவிப்பால் டமாரம், டிங்டாங், சங்கு, பூஞ்சோலை போன்ற சிறார் இதழ்களில் கதைகள், தொடர்கதைகள் எழுதினார். குழந்தை எழுத்தாளர் சங்கம் 1955-ல் அறிவித்த நாடகப் போட்டிக்காக நாடகம் ஒன்றை எழுதினார். ’உப்பில்லாத பண்டம்’ என்னும் அந்நாடகம் முதல் பரிசு பெற்றது.
இதழியல் வாழ்க்கை
பூவண்ணனின் அண்ணன் பால்வண்ணன், ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட ’கலைமன்றம்’ என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அவர், ஸ்ரீமகள் கம்பெனி மூலம் ‘கரும்பு’ என்ற சிறார் இதழைத் தொடங்கினார். பூவண்ணன் அதற்கு ஆசிரியர் ஆனார். அதில் கிடைத்த வருமானம் பூவண்ணனின் மேற்கல்விக்கு உதவியது. தொடர்ந்து அண்ணன் நடத்திவந்த ’அறிவொளி’ என்ற இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
‘தமிழ்த்தேன்’ என்ற மாத இதழுக்கும், ’மத்தாப்பு’ சிறார் இதழுக்கும் பூவண்ணன் ஆலோசகராக இருந்தார். முல்லை தங்கராசன் ஆசிரியராக இருந்த ‘ரத்னபாலா’ இதழுக்கும் பூவண்ணன் ஆலோசகராகப் பணியாற்றினார்.
வானொலிப் பங்களிப்புகள்
வானொலி அண்ணாவாக இருந்த ர. அய்யாசாமி, பூவண்ணனிடம் வானொலிக்கு எழுதுமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பூவண்ணனின் கதை, கவிதை, நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. பூவண்ணனின் முதல் வரலாற்று நாவலான ’புலவர் மகன்’, வானொலியில் ஒலிபரப்பானது. தமிழக அரசின் பரிசு பெற்ற ’மரகதக் கண்ணன்’ என்னும் நாவலும் வானொலியில் ஒலிபரப்பானது. இதனைப் பூவண்ணன் தன் குரலிலேயே ஒவ்வொரு வாரமும் வழங்கினார். ’குழந்தைக் கவிஞர்கள்’ என்ற தலைப்பில் பூவண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் 16 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பானது.
’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்’ என்ற தலைப்பில் பூவண்ணனின் சொற்பொழிவுகள் ஒலிபரப்பாகின. இது ‘பொற்கால வாழ்க்கை’ என்ற தலைப்பில் பின்னர் நூலாக்கம் பெற்றது. வானொலிக்காக என்றே பூவண்ணன் எழுதிய தனி நாடகம் ‘அன்பு நிலையம்’ தொடர்ந்து எட்டு வாரங்கள் ஒலிபரப்பானது. பூவண்ணனின் பல நாடகங்கள் வானொலியில் மட்டுமல்லாமல் வெளி மேடைகளிலும் நடிக்கப்பட்டன. அவரது ’எழுத்து மாறாட்டம்’ என்ற நாடகம், நூறு முறைக்கும் மேல் மேடையேறியது.
திரைப்பட - தொலைக்காட்சிப் பங்களிப்புகள்
பூவண்ணனின் ’எழுத்து மாறாட்டம்’ நாடகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து பூவண்ணனின் பல நாடகங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. பூவண்ணனின் ‘ஆலம்விழுது’ என்ற சிறுவர்களுக்கான தொடர்கதை கன்னடத்தில் ‘நம்ம மக்களு’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. பின்னர் இதே கதை ‘நம்ம குழந்தைகள்’ என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக வந்தது. பின்னர் இதுவே இந்தியிலும் ‘கர்கர் கி கஹானி’ என்ற பெயரில் திரைப்படமாக் தயாரிக்கப்பட்டு பல விருதுகளை வென்றது.
பூவண்ணனின் ‘காவேரியின் அன்பு’ என்ற கதை, ‘அன்பின் அலைகள்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதற்காக பூவண்ணனுக்கு ‘சிறந்த குழந்தைகள் திரைப்படக் கதாசிரியர்’ என்ற தமிழ்நாடு அரசின் விருதும் தங்கப் பதக்கமும் கிடைத்தது.
விருதுகள்
- தமிழ் நெறிச்செம்மல்
- மனித நேய மாண்பாளர்
- மழலைக் கவிஞர்
- இலக்கிய ஜோதி
- பாலர் இலக்கிய ஜோதி
- பாரதி இலக்கியச் செல்வர்
- தமிழண்ணல்
- பாரதி புகழ் பரப்பும் சான்றோர்
- மனிதநேய மாண்பாளர்
- ஆய்வுக்கரசர்
- செந்தமிழ்ச் சிற்பி
- இலக்கியச் செம்மல்
- பாலர் இலக்கிய ஜோதி
- குழந்தை இலக்கிய மாமணி
- குழந்தை இலக்கியப் பணியின் மணிமுடி
- குழந்தைக் கவிஞர் விருது
- சிறந்த குழந்தைகள் திரைப்படக் கதாசிரியர் விருது
- ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது
- இந்தியத் தேசியச் சிறுவர் கல்வி கழகம் (Indian council for Child Education) வழங்கிய இந்தியாவின் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர் விருது
மறைவு
பூவண்ணன், ஜனவரி 11, 2013 அன்று, தனது 81-ம் வயதில் கோவையில் காலமானார்.
நினைவு
அமரர் டாக்டர் பூவண்ணன் நினைவு இலக்கியப் பேரவை, அவர் நினைவாக ஆண்டுதோறும் கவிதைப் போட்டி நடத்தி சிறந்த படைப்புகளுக்குப் பரிசளித்து வருகிறது.
இலக்கிய இடம்
சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், வாண்டுமாமா வரிசையில், பூவண்ணனும் முக்கியம் இடம் பெறுகிறார். சிறார்களுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களுக்காகவும் பல படைப்புகளைத் தந்துள்ளார். பேராசிரியர், டாக்டர் மு.வரதராசனைப் போலவே தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும் ஈடுபட்டவர் பூவண்ணன். சிறார் இலக்கியம், இலக்கிய வரலாறு என இரண்டு துறைகளிலும் முக்கியப் பங்களிப்புச் செய்தவராக பூவண்ணன் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
நாவல்கள்
- ஆலம் விழுது
- அமுதாவின் ஆசை
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆளப்பிறந்தவன்
- இரண்டாம் பரமார்த்த குரு
- என்றும் நண்பன்
- எரிமலை அரக்கன்
- ஒரு பூனை புலியாகிறது
- காவேரியின் அன்பு
- குமரனும் குட்டியானையும்
- சங்கரன் சபதம்
- தங்க முத்துத் தாமரை
- துப்பறியும் பாபு
- நச்சுமலைக்காடு
- நரியைத் தேடிய புலிக்குட்டி
- நல்லமுத்து
- பஞ்சவர்ணப் பல்லக்கு
- பயப்படாதே பாப்பா
- பல்லவ மல்லன்
- பாண்டி முத்து
- பாபு சர்க்கஸ்
- புதையல் வீடு
- புலவர் மகன்
- மகன் புகழ்
- மணியும் மணியும்
- மரகதக் கண்ணன்
- மரகத வீணை
- மறப்போம் மன்னிப்போம்
- மாணிக்கத்தீவு
- ராஜாமணி
- ராஜாவும் ரோஜாவும்
- வீரமணி
சிறுகதைத் தொகுப்புகள்
- அதிசயப்பானையும் அற்புதச் சேவலும்
- அன்புத் தாத்தா
- இரத்தினபுரி இளவரசன்
- இரு நண்பர்கள்
- என் தம்பி
- ஐஸ்கிரீம் ஆசை
- சபாஷ்மணி
- சாந்தாவின் சபதம்
- செவ்வாய் மனிதன்
- சேர நாட்டு வீரன்
- சோம்னாம்புலிசம்
- திருக்குறள் கதைகள் - 1
- திருக்குறள் கதைகள் - 2
- திருக்குறள் கதைகள் - 3
- திருக்குறள் கதைகள் - 4
- காந்தி மொழிக் கதைகள் - 1
- காந்தி மொழிக் கதைகள் - 2
- வேடிக்கைக் கதைகள் - 1
- வேடிக்கைக் கதைகள் - 2
- திருக்குறள் திருத்திற்று
- பச்சைப் பாவாடை
- பவள மாலை
- பரமார்த்த சீடர்கள்
- பார்வதி
- புதிர்க் கதைகள்
- பாரியின் பேரன்
- புள்ளிமான்
- பொம்மை வண்டி
- மரக்கழுகு
- வெள்ளி டம்ளர்
நாடகங்கள்
- அழகுக்கு அழகு
- அன்பு நிலையம்
- ஆயிரத்தில் ஒருத்தி
- இதுவே அமுதம்
- இருப்பவனே இல்லாதவன்
- உண்மைக்கு வெற்றி
- உப்பில்லாத பண்டம்
- ஊரின் பெருமை
- ஊன்றுகோல்
- எழுதாதே
- எழுத்து மாறாட்டம்
- எனக்கு வேண்டாம்
- என்ன காரணம்?
- கண்ணன் மண்டபம்
- கமலாவின் கையெழுத்து
- கரை அமைத்த காவலன்
- கர்ணன் கற்றுத் தந்தான்
- காயா பழமா?
- குழந்தைக் கவிஞன்
- கோமதியின் கோபம்
- சிறந்த வேலை
- சேவைக்குத் தேவை
- நேற்றுக் கருமி, இன்று கர்ணன்
- பகை மறந்தது
- பயப்படாதே
- பெயர் தந்த பெருமை
- பொம்மைத் தேர்
- பொம்மை நூலகம்
- பொய் கலந்தால்
- பொன் மொழி
- மண்ணாங்கட்டி
- மருந்து வேண்டாம்
- முதல் கடமை
- முள்ளை எடுத்த முள்
- வேலனின் வெற்றி
பாடல் தொகுப்புகள்
- பாட்டுத் தோட்டம்
- முத்துக்குவியல்
வரலாற்று நாவல்கள்
- காந்தளூர்ச் சாலை
- கொல்லி மலைச் செல்வி
- நரசிம்மவர்மனின் நண்பன்
- சிற்பியின் மகள்
உரை நூல்கள்
- கம்பராமாயணம் - தெளிவுரை
- திருவாய்மொழி தெளிவுரை
- சடகோபர் அந்தாதி - தெளிவுரை
- திருக்குறள் சிறப்புரை
- கந்தபுராணம் தெளிவுரை
இலக்கியத் திறனாய்வு நூல்கள்
- சிறுவர் இலக்கியச் செல்வர்கள்
- குழந்தை இலக்கிய முன்னோடி - தி.ஜ.ர.
- பைந்தமிழ் சீர் பரவுவார்
- தமிழ் நூல்கள் - அன்றுமுதல் இன்று வரை
- மனோன்மணீயம்
- கல்கியின் வரலாற்று நாவல்கள்
- இலக்கிய எழுச்சி
- செந்தமிழ்க் கட்டுரைகள்
- ஞானகுரு
- மனோன்மணீயம் நாடக மாந்தர்
- மறைமலையடிகளாரின் அம்பிகாபதி-அமராவதி நாடகத்திறன்
இலக்கிய வரலாறு
- குழந்தை இலக்கிய வரலாறு
- சிறுவர் இலக்கிய வரலாறு
- தமிழ் இலக்கிய வரலாறு
வாழ்க்கை வரலாறு
- வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு
- குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வரலாறு
வரலாற்றுக் கதை நூல்கள்
- அக்பர் கதைகள்
- சிவாஜி கதைகள்
- மூவேந்தர் கதை
- இராசராசன் கதை
கட்டுரை நூல்கள்
- ஒரு லட்சம் பறவைகள்
- பொற்கால வாழ்க்கை
- கொற்கை
- பூதங்கள் ஐந்து (அறிவியல் நூல்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
- இந்தியாவில் ஹாக்கி
- மாய மனிதன்
- முல்லா நஸ்ருதீன் கதைகள்
மொழி நூல்கள்
- மொழித்திறன்
- யானைக்காய்ப் பொரியல்
மேற்கோள்கள்
- ↑ ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
வெளி இணைப்புகள்
- எழுத்தாளர் பூவண்ணன் நினைவாக ('தென்றல்' இதழிலிருந்து): குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணனுடன் ஒரு சந்திப்பு பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்
- பூவண்ணன் நேர்காணல்: தென்றல் இதழ், தமிழ் ஆன்லைன்.காம்
- சிகரம் தொட்ட சிந்தனையாளர் பூவண்ணன்: பஞ்சுமிட்டாய்
- எழுத்தாளர் பூவண்ணன் அஞ்சலிக் குறிப்பு
- சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்: இந்து தமிழ் திசை
- பூவண்ணன் படைப்புகள்: தமிழ் இணையக் கல்விக்கழகம்
- பூவண்ணன்: சிலிகான் ஷெல்ஃப் தளம்