புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)
அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர் (15ஆம் நூற்றாண்டு) என்பவரின் இயற்பெயர் சாருவபெளமன் புகழேந்தி எனக் கருதப்படுகிறது. இவர் கி. பி. 1422-62 ஆண்டு தென்காசி பராக்கிரம பாண்டியனைப் பாடியவர்.[1] இவர் நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய, 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, புகழேந்திப் புலவர் அல்லர். ஒருக்கால், இவர் முந்தைய புகழேந்தி மரபில் வந்தவர் ஆகலாம்.
கதை
ஒட்டக்கூத்தர் சொன்னபடி சோழன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புகழேந்திப் புலவர் சோழன் தந்த உணவை உண்ணாமல் பல அம்மானை நூல்களைப் பாடி அவ்வழியே தண்ணீர் கொண்டு செல்லும் பெண்கள் கேட்கும்படி பாடி நூலைக் கொடுத்து, அவர்கள் தந்த உணவை வாங்கி உண்டு வயிறு வளர்த்தார் என்பது ஒரு புனைகதை.[2] இவர் ஒட்டக் கூத்தன் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தவர் புகழேந்தி.
புகழேந்தியின் அம்மானைப் பாடல் நூல்கள் [3]
புகழேந்திப் புலவர் இயற்றியதாக வழங்கப்படும் நூல்களின் பட்டியல் வருமாறு:
வ.எண் | நூலின் பெயர் | அச்சிடப்பட்ட ஆண்டு | பதிப்பித்தவர் | குறிப்பு |
01 | அபிமன்னன் சுந்தரி மாலை | |||
02 | அல்லி அரசாணி மாலை | அல்லி என்னும் பெயர் கொண்ட அரசியை அருச்சுனன் மாலையிட்ட கதையைக் கூறும் நூல் | ||
03 | ஏணி ஏற்றம் | துரியோதனன் அல்லியைத் தகாத முறையில் அடையக் கருதி அவமானம் அடைந்த செய்தியைக் கூறும் நூல் | ||
04 | கோவிலன் கதை | 1873 | ||
05 | சித்திர புத்திர நாயனார் கதை | 1876 | ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதி எமன் துணையுடன் செயல்படுத்துபவன் சித்திரபுத்திரன் | |
06 | சுந்தரி மாலை | |||
07 | சுபத்திரை மாலை | |||
08 | செஞ்சிக் கலம்பகம் | |||
09 | துரெளபதி குறம் | 1880 | சென்னை அரசாங்க நூலகத்தில் கையெழுத்துப்படியாக இருக்கிறது. | |
10 | தேசிங்குராசன் கதை | 1869 | சென்னை அரசாங்க நூலகத்தில் கையெழுத்துப்படியாக இருக்கிறது. | |
11 | நல்லதங்காள் கதை | 1869 | சென்னை அரசாங்க நூலகத்தில் கையெழுத்துப்படியாக இருக்கிறது. | |
12 | பஞ்ச பாண்டவர் வனவாசம் | பஞ்ச பாண்டவர் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தபோது பட்ட துன்பங்களையும், கண்ணன் துணைகொண்டு துன்பத்திலிருந்து மீண்ட செய்திகளையும் கூறும் நூல் | ||
13 | பவளக்கொடி மாலை | ஆண் ஆதிக்கத்துக்கு அடிபணியாத பவளக்கொடி என்பவளை அருச்சுனன் மாலையிட்ட கதை | ||
14 | புலந்திரன் களவு மாலை | அல்லிக்கும் அருச்சுனனுக்கும் பிறந்த பிள்ளை புலந்திரன். இவன் துரியோதனனின் தங்கை துச்சலை என்பவளின் மகள் காந்தாரியைக் களவு நெறியில் மணம் செய்துகொள்ளும் வரலாற்றைக் கூறும் நூல் | ||
15 | புலந்திரன் தூது | |||
16 | பொன்னுருவி மசக்கை | |||
17 | மதுரைவீரன் கதை | |||
18 | மின்னொளியாள் குறம் | 1874 | சென்னை அரசாங்க நூலகத்தில் கையெழுத்துப்படியாக இருக்கிறது. | |
19 | விதுரன் குறம் |
பாடல்
இந்த அம்மானை நூல்களில் உள்ள பாடல்கள் செப்பலோசை என்னும் வெண்பா ஓசை குன்றாமலும், குன்றிய கலிநடையிலும் நாற்சீர் அடிகளால் எளிய தமிழில் எழுதப்பட்டவை ஆகும்.
எடுத்துக்காட்டு
- அழகில் மதனரடி அரிவையர்க்கு மணவாளர்
- அருச்சுனரைப் பார்த்தாலே அருங்களைகள் தீர்ந்துவிடும் [4]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
- ந. சி. கந்தையா பிள்ளை; தமிழ்ப் புலவர் அகராதி:புலவர் அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை-1; 1952
- ந. சி. கந்தையா பிள்ளை; தமிழ் இலக்கிய அகராதி : இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; 1952