பாலக்காடு ஆர். ரகு
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பாலக்காடு ஆர். ரகு |
---|---|
பிறந்ததிகதி | 9, சனவரி 1928 |
பிறந்தஇடம் | ரங்கூன் மியன்மார் |
இறப்பு | 2009 |
அறியப்படுவது | மிருதங்க இசைக் கலைஞர் |
பெற்றோர் | பாலக்காடு இராமசாமி ஐயர் அனந்தலட்சுமி அம்மாள் |
துணைவர் | ஸ்வர்ணாம்பாள் |
பாலக்காடு ஆர். ரகு (1928 - 2009) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பாலக்காடு ரகு 1928ஆம் ஆண்டு சனவரி 9 அன்று பர்மாவின் (இப்போதைய மியன்மார்) ரங்கூன் நகரில் பிறந்தார். பெற்றோர்: பாலக்காடு இராமசாமி ஐயர், அனந்தலட்சுமி அம்மாள். ஆரம்பத்தில் திண்ணியம் வெங்கடராம ஐயரிடமும், திருச்சி ராகவா ஐயரிடம் மிருதங்க இசையினைக் கற்றார் ரகு. பின்னர் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயரிடம் பயிற்சி பெற்றார். மணி ஐயரின் உறவுக்கார பெண்மணியாகிய ஸ்வர்ணாம்பாளை திருமணம் செய்துகொண்ட ரகு, கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
இவரின் பேரன் அபிசேக் ரகுராம், கருநாடக இசைப் பாடகராவார்.
தொழில் வாழ்க்கை
பாலக்காடு ரகு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிருதங்க இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவரின் தனி ஆவார்த்தனம் நேயர்களிடையே பெரிதும் விரும்பப்பட்டது. ஹரிசங்கர், நாகராஜன் (கஞ்சிரா), ஆலங்குடி ராமச்சந்திரன் (கடம்), ‘விக்கு’ விநாயக்ராம் (கடம்), சுபாஷ் சந்திரன் (கடம்) இவர்களுடன் ரகு தனி ஆவர்த்தனம் நிகழ்த்தியுள்ளார்.
சிறப்புகள்
ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். வடஇந்திய இசைக் கலைஞர்களான பண்டிட் ரவி சங்கர் (சித்தார்), ஹரிப்ரசாத் சௌரசியா (புல்லாங்குழல்), சிவ்குமார் ஷர்மா (சந்தூர்), அல்லா ரக்ஹா (தபேலா) இவர்களுடன் இணைந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 'வாத்திய விருந்து' இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். கிழக்கு-மேற்கு ஒருங்கிணைந்த இசையிலும் தனது பங்களிப்பினைத் தந்துள்ளார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1983[1]
- பாலக்காடு மணி ஐயர் விருது
- பத்மசிறீ, 1985 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- மிருதங்க சக்ரவர்த்தி விருது
- கலைமாமணி விருது, வழங்கியது: தமிழ்நாடு அரசு
- சங்கீத சூடாமணி
- மிருதங்க நாத மணி
- நாத பிரம்மம், 2000 ; வழங்கியது: நாரத கான சபா, சென்னை
- நாத நிதி, 2001
- சங்கீத கலாநிதி விருது, 2007 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
மேற்கோள்கள்
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.