நெல்லை சு. முத்து
நெல்லை சு. முத்து (Nellai S. Muthu, பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
"செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.[1]
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.
- "விண்வெளி 2057" எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு" எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்)" எனும் நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்; பக்கம் 226 231