நூஷு எழுத்துமுறை
நூஷு | |
---|---|
நூஷுவில் (இடமிருந்து வலமாக) எழுதப்பட்ட "Nüshu". | |
எழுத்து முறை வகை | அசையெழுத்து முறை
|
காலக்கட்டம் | பின்னை ஏகாதிபத்திய காலம் (1550-1911) |
மொழிகள் | ஜியாங்யோங் வட்டாரவழக்கு, க்சியாங் |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Nshu (499), Nüshu |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Nushu |
நூஷு (எளிய சீனம்: 女书; மரபுவழிச் சீனம்: 女書; ||பின்யின்]]: Nǚshū வார்ப்புரு:IPA-cmn; நேர்பொருளாக "பெண்களின் எழுத்துக்கள்") என்பது முழுக்க முழுக்கப் பெண்களிடம் மட்டுமே புழங்கிய, தென்சீனாவில் இருக்கும் ஹூனான் மாநிலத்தின் ஜியாங்யோங் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, சீன எழுத்துருக்களின் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு அசையெழுத்துமுறை ஆகும்.[1]
மொழி
நூஷு எழுத்துமுறையானது க்சியாங்னான் துஹுவா (湘南土話, 'Southern Hunanese Tuhua') என்ற சீன மொழியின் ஒரு வட்டாரவழக்கை எழுதப் பயன்படுகிறது. இந்தத் தனிவழக்கு ஹூனானின் வடக்கத்திய ஜியோங்யோங் மாவட்டத்தில் க்சியாவோ மற்றும் யோங்மிங் ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே வழங்கிவருவதொன்று.[2] ஹுனானின் பிற பகுதிகளில் புழங்கும் பிறிதொரு வட்டார வழக்கிலிருந்து கணிசமாக வேறுபடுவதால் இத் தனிவழக்கு அவர்களுக்குப் புரிபடாத ஒன்று. இதைப் பேசுபவர்களால் [tifɯə] "தோங் மொழி" என்று அழைக்கப்படும் இம் மொழிவழக்கு முழுக்க முழுக்க நூஷு எழுத்துமுறை கொண்டே எழுதப்படுகிறது. [3] பல்வேறு சீன மொழிகளின் கூறுகளைக் கொண்டிருப்பதால் க்சியாங்னான் துஹுவாவின் வகைப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சில அறிஞர்கள் இதை க்சியாங் சீனம் அல்லது பிங்ஹுவாவின் கீழ் வகைப்படுத்த, வேறு சிலர் இதை ஒரு கலப்பு வழக்காகக் கருதுகிறார்கள்.[4] பெரும்பாலான உள்ளூர்வாசிகள் துஹுவாவோடு சேர்த்து தென்மேற்கு மாண்டரின் மொழியின் ஹூனான் வழக்கையும் அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதை துஹுவா பேசப்படாத பிற பகுதிகளிலிருந்து வருபவர்களோடு தொர்புகொள்ளவும், வேறு சில முறைப்படுத்தப்பட்ட தறுவாய்களிலும் பயன்படுத்துகின்றனர்.[2][5] தென்மேற்கு மாண்டரினின் ஹூனான் வழக்கு எழுதப்படும்போது நூஷூ எழுத்துமுறை பயன்படுத்தப்பட மாட்டாது; தரப்படுத்தப்பட்ட சீன வரிவடிவமே பயன்படுத்தப்படும்.[5]
ஜியாங்யோங் மாவட்டத்தில் ஹான் சீனர்களும், யாவோ மக்களும் கலந்தே வசிக்கின்றனர். நூஷு உள்ளூர் ஹான் சீன மொழியை எழுதவே பயன்படுத்தப்படுகிறதேயன்றி உள்ளூர் யாவோ மொழியை எழுதப் பயன்பட்டதற்கான எடுத்துக்காட்டுகள் இல்லை.[6]
வரலாறு
பாலினப் பாகுபாடு மலிந்த மரபார்ந்த சீனச் சமூகத்தில் எழுத்தறிவு பெறும் வாய்ப்பு சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் இருந்த அளவுக்கு சிறுமியர்க்கும், பெண்களுக்கும் இருக்கவில்லை. பெரும்பான்மையோர் - ஆண்களோ, பெண்களோ - எழுத்தறிவற்றவர்களாகவே இருந்தனர். என்றபோதும், சீனாவின் வரலாறு நெடுக எழுதவும், படிக்கவும் தெரிந்த மகளிர் எப்போதும் இருந்தே வந்திருக்கின்றனர். பின்னை ஏகாதிபத்திய காலத்தில் மேட்டுக்குடியினர் நடுவில் பெண்களின் கவிதைப் படைப்புகள் ஒரு குடும்பப் பெருமையாகவே ஆகிவிட்டிருந்தன. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் கல்வியறிவைப் பிரபலமாக்கியதோடு, பண்டித இலக்கிய நடையிலான எழுத்துநடையை (wenyanwen) மாற்றி பேச்சை ஒத்த ஒன்றாக (baihuawen) நடைமுறைப்படுத்தின. இது ஆடவர், பெண்டிர் இருபாலர் மத்தியிலும் எழுத்தறிவை அதிகரித்தது. எப்போது, எப்படி நூஷு தோன்றியது என்பது தெரியாதபோதும், தரப்படுத்தப்பட்ட சீன எழுத்துமுறையின் அடிப்படையில் அமைந்திருப்பதால் ஹன்சி நிலைப்படுத்தப்படுவதற்கு (ஏறத்தாழ 900) முன்பு ஹன்சி-நூஷு தோன்றியிருக்கமுடியாது. நூஷுவில் காணப்படும் பல எளிமையாக்கங்கள் எளிய சீன வரிவடிவில் சொங் அரசமரபு மற்றும் யுவான் அரசமரபு (13-14 ஆம் நூற்றாண்டு) காலத்திலிருந்தே முறைசாராப் பயன்பாட்டில் இருந்துவந்தவையே. சிங் அரசமரபு (1644–1911) காலத்தின் பிற்பகுதியில் இது உச்சமடைந்திருக்கக் கூடும்.[7]
ஜியாங்யோங் பண்பாட்டு அலுவலகத்தில் வேலைபார்த்த படித்த உள்ளூர்ப் பணியாளர் ஒருவர் (Zhou Shuoyi) பற்பல நூஷு பனுவல்களைச் சேகரித்து, படித்து, எளிய சீனத்துக்கு மொழிபெயர்த்திருந்தபோதும் 1983-இல் அறிக்கையொன்று நடுவண் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படும்வரை அவரால் வெளியுலகின் கவனத்தை ஈர்க்கமுடியவில்லை.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இளம்பெண்டிர் நூஷுவைக் கற்றுக்கொள்வதை நிறுத்தினர். ஹன்சி எழுத்தறிவு பெறுவதற்குக் கிடைத்த கூடுதலான வாய்ப்புகளே காரணம் என்பது ஒருவிதத்தில் உண்மையே என்றபோதும் அகன்ற தளத்தில் வலுவான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களும் இதற்கு காரணமாகும். நூஷு அறிந்த வயதான மகளிரும் இறந்துபட இது புழக்கத்தில் இருந்து மறைந்தது. 1930-40களில் ஜப்பானியர் சீனாவில் ஊடுருவியபோதும், சீனாவின் "பண்பாட்டுப் புரட்சி"யின்போதும் (1966-76) மந்தணத் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தில் நூஷு அடக்குமுறைக்குள்ளானது.[8] 1990-களில் இந்த எழுத்துமுறையின் மூல எழுத்தாளர்கள் மறைந்தனர். 2004-இல் இருந்த ஒருவரும் இறந்தார். நூஷு கற்றுக்கொள்வது பெண்கள் மத்தியில் வழக்கொழிந்துவிட்டது. கடைசிக்காலத்தில் இருந்த சிலரிடம் கற்றுக்கொண்ட சில ஆய்வாளர்க்கு மட்டுமே இப்போது நூஷு எழுத்தறிவு உண்டு. இருந்தாலும் யாங் யூகிங் (Yang Yueqing) நூஷு பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தபிறகு சீன மக்கள் குடியரசு அழிவின் விளிம்பில் இருக்கும் இவ்வெழுத்துமுறையைக் காக்கும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதால் இளம்பெண்டிர் சிலர் கற்கத் தொடங்கியுள்ளனர்.
பண்புக்கூறுகள்
ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ குறிக்கும் சொல்லச்சுமுறையில் அமைந்த எளிய சீன வரிவடிவத்தைப் போலன்றி, நூஷு அசையெழுத்துமுறையில் அமைந்தது. தோராயமாக 600-700 எண்ணிக்கையிலான அதன் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையைக் குறிப்பது. இது துஹுவாவின் எல்லா அசைகளையும் குறிப்பதற்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் ஏறத்தாழ சரிபாதியே. தொனி சார்ந்த வேறுபாடுகளை பெருமளவுக்குப் புறக்கணிப்பதால் இது சாத்தியமாகிறது. இதன்பொருட்டு நூஷு எழுத்துமுறையானது "சீன வரிவடிவத்தில் செய்யப்பட்டதிலேயே மிகப்புரட்சிகரமானதும், முழுமையானதுமான எளிமையாக்கம்" என்று கருதப்படுகிறது.[7] இந்த எழுத்துமுறையில் கரைகண்ட ஒரே ஆணாகக் கருதப்படும் சௌ ஷுவுவோயி (Zhou Shuoyi) 1800 எழுத்து வடிவங்கள், மாறுபாடுகளைப் பட்டியலிட்டு ஒரு அகராதியைத் தொகுத்தார்.[9]
சில எழுத்துக்கள் பூத்தையல் வேலைப்பாடுகளுக்காக கணிசமாக மாறுபாடு அடைந்திருந்தாலும், நூஷு எழுத்துக்கள் பெயரிலிருந்து அறியலாகுவதுபோல கைஷு சீன எழுத்துக்களின் சாய்வெழுத்து வடிவங்களே. [1] எழுத்துக்கீற்றுக்கள் புள்ளிகள், கிடைமட்டக்கோடுகள், சாய்வுக்கோடுகள், வளைகோடுகளாலானவை.[8] சீன மரபையொட்டி நூஷு மேலிருந்து கீழாகவோ அல்லது படுக்கைவசத்தில் எழுதப்படும்போது இடமிருந்து வலமாகவோ எழுதப்படுகிறது. செந்தர சீனத்தைப் போலவே குத்துக்கோடுகள் நேர்குத்தாக இருக்க அவற்றைக் கடக்கும் கோடுகள் செங்குத்திலிருந்து கோணங்களில் அமைந்துள்ளன. ஆனால் சீனத்தைப் போலன்றி நூஷு எழுத்துக்கள் நூல் போன்ற மிக நுண்ணிய கோடுகளால் அமைந்திருப்பதை நல்ல கையெழுத்துத் திறமையாகக் கருதி மதிக்கின்றனர்.
நூஷுவில் ஏறத்தாழ பாதி எழுத்துக்கள் சொல்லச்சுமுறையில் பயன்படுத்தப்படும் சீன எழுத்துக்களின் மாறுபாடடைந்த வடிவங்கள்[நம்பகமற்றது ] கிட்டத்தட்ட 100 வரையிலானவற்றில் முழு எழுத்தும் சிறு மாற்றத்தோடு - சட்டகத்தை சதுரத்திலிருந்து சாய்செவ்வகமாக மாற்றியோ, கண்ணாடி பிம்பமாகத் திருப்பியோ, கீற்றுக்களைக் குறைத்தோ - அப்படியே எடுத்தாளப்பட்டவை. மேலும் ஒரு 100 வரையிலானவற்றில் வரைகீற்றுக்கள் மாற்றமடைந்திருக்கும்போதும் எளிதில் இனங்காணக்கூடியவை (மேலே உள்ள நூ (nü) 'பெண்' என்பதைப்போல). இன்னுமொரு 200 எழுத்துக்கள் பெருமளவுக்கு மாற்றம் அடைந்தவையாக இருந்தாலும் அவற்றிலுள்ள சீன எழுத்துக்களின் தடயங்களை உற்றறியமுடியும்.
ஏனையவை ஒலிப்பு முறையிலானவை. அவை மேற்கூறியவாறு மாறுபாடடைந்த எழுத்துக்கள் அல்லது எழுத்துக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகள். இவை 130 ஒலிப்பு மதிப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் சில பிறவற்றின் மாற்றுவடிவங்கள் என்றபோதும் இவை ஒவ்வொன்றைக் கொண்டும் சராசரியாக பத்து ஒத்தொலிக்கும் (உச்சரிப்பு ஒன்றும்) சொற்களை உருவாக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஒலிப்புக்காக எந்த எழுத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து பெண்களிடையே வேறுபட்ட விருப்பத்தெரிவுகள் இருந்தன.[7]
நூஷு படைப்புகள்
நூஷு படைப்புகளில் பெரும்பாலானவை மூன்றாம் நாள் மடல்கள் (third day missives)(எளிய சீனம்: 三朝书; மரபுவழிச் சீனம்: 三朝書; ||பின்யின்]]: sānzhāoshū). அவை லாவோதொங் எனப்படும் சூளுரை மேற்கொண்ட உடன்பிறவா சகோதரிகளாலும் "sworn sisters" (எளிய சீனம்: 结拜姊妹; மரபுவழிச் சீனம்: 結拜姊妹; ||பின்யின்]]: jiébàizǐmèi), அன்னையராலும் உருவாக்கப்பட்ட துணிமூடிய சிற்றேடுகள். தனது இணையான சூளுரைச் சகோதரிக்கோ, மகளுக்கோ திருமணத்தின்போது வழங்கப்பட்டவை. பாடல்கள் புனைந்து நூஷுவில் எழுதி இளம்பெண்ணின் மணம் முடிந்த மூன்றாம் நாளில் தரப்பட்டவை. இவ்வழியே அவர்கள் ஊர் விட்டேகிய மணப்பெண்ணின் மகிழ்ச்சிகரமான மணவாழ்வு குறித்த நம்பிக்கையையும், அவளைப் பிரிய நேர்ந்தமையின் துயரத்தையும் வெளிப்படுத்தினர்.[10]
கவிதைகள், பாடல்களை உள்ளடக்கிய பிற நூஷு படைப்புகள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், துணிமணிகளில் பூத்தையல் வேலைப்பாடாகவும், இடுப்புப்பட்டை, வார்களில் கைவேலைப்பாடாகவும் செய்யப்பட்டவை.
அண்மைக் காலங்களில்
இந்த எழுத்துமுறையில் தேர்ச்சி பெற்றிருந்த கடைசி நபரான, ஹுனான் மாநில ஜியாங்யோங் மாவட்டத்தைச் சேர்ந்த யாங் ஹுவான்யி, தமது 98-ஆம் அகவையில் செப்டம்பர் 20, 2004 அன்று இறந்தார்[11][12]
இம்மொழியினரால் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படுத்தத்தக்க இடங்களின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த அன்னிய நிதியை ஈர்க்க முடிந்திருக்கிறது. ஃபோர்டு அறக்கட்டளை நூஷு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க $209,000 நல்கை ஒன்றை வழங்கியது. இருந்தாலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இவ்வெழுத்துமுறையைக் கடத்தும் கண்ணி அறுபட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தொழிலுக்காக இவ்வெழுத்துமுறையை சந்தைப்படுத்தும் முனைப்பில் இதன் பண்புக்கூறுகள் சிதைக்கப்படுகின்றனவோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தான் துன் (Tan Dun) என்ற சீனக்கலைஞர் ஹார்ப் என்ற யாழிசையையும், குழு இசையையும் (orchestra), 13 சின்னஞ்சிறுபடங்களையும் சேர்த்து "நூ ஷு: பெண்களின் ரகசியப் பாடல்கள்" (Nu Shu: The Secret Songs of Women) என்ற ஒரு பல்லூடக சிம்ஃபொனியை உருவாக்கியுள்ளார். அவர் ஹூனான் மாநிலத்தில் 5 ஆண்டுகள் கள ஆய்வு மேற்கொண்டு பெண்கள் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் பல்வேறு பாடல்களை ஆவணப்படுத்தினார். இப்பாடல்கள் அவரது கூட்டு இன்னிசையின் (சிம்ஃபொனி) ஒரு மூன்றாம் பரிமாணமாக குழு இசையுடனும், ஹார்ப் தனியிசையுடனும் காட்டப்படுகின்றன.
லிசா சீ எழுதிய பனிமலரும் ரகசிய விசிறியும் Snow Flower and the Secret Fan நாவலில் 19-ஆம் நூற்றாண்டு பெண்களிடையே நூஷூ பயன்பட்டதை விவரிக்கிறார். இந்நாவல் 2011-இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
நூஷு எழுத்துமுறையை ஒருங்குறி முறையில் வரவிருக்கும் பதிப்புகளில் குறிமுறையேற்றம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த பல்வேறு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன[1][13]
மேலும் பார்க்க
- கெஞ்சியின் கதை போன்ற பெரும் படைப்புகளை எழுதப் பயன்பட்ட, பெண்களால் மட்டுமே துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ஹிரகனா எழுத்துக்கள் என்ற ஜப்பானிய மொழியின் ஒலிப்பு எழுத்துமுறையோடு ஒப்புநோக்கவும்.
குறிப்புதவி
- ↑ 1.0 1.1 1.2 முன்மொழிவு text, slides), 2007-9-17
- ↑ 2.0 2.1 Zhao 2006, ப. 162
- ↑ Chiang 1995, ப. 20
- ↑ Zhao 2006, ப. 162
- ↑ 5.0 5.1 Chiang 1995, ப. 22
- ↑ Zhao 2006, ப. 247
- ↑ 7.0 7.1 7.2 Zhao Liming, "The Women's Script of Jiangyong". In Jie Tao, Bijun Zheng, Shirley L. Mow, eds, Holding up half the sky: Chinese women past, present, and future, Feminist Press, 2004, pp. 39–52. ISBN 978-1-55861-465-9
- ↑ 8.0 8.1 Additional text - Chapter 12, An Introduction to Language and Linguistics, Jeff Connor-Linton and Ralph Fasold, Cambridge University Press, ISBN 978-0-521-84768-1
- ↑ "Last inheritress of China's female-specific languages dies". News.xinhuanet.com. 2004-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-10-03.
- ↑ A language by women, for women, Washington Post, Feb 24, 2004
- ↑ "Language dies with woman". London: Observer.guardian.co.uk. 2004-09-26. http://observer.guardian.co.uk/international/story/0,,1312951,00.html. பார்த்த நாள்: 2012-10-03.
- ↑ Jon Watts (2005-09-22). "Jon Watts, The forbidden tongue, The Guardian 23 September 2005". London: Guardian. http://www.guardian.co.uk/g2/story/0,3604,1576488,00.html. பார்த்த நாள்: 2012-10-03.
- ↑ "முன்மொழிவின் தற்போதைய நிலை". பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
உசாத்துணை
- Zhao, Liming 赵丽明 (2006). Nǚshū yòngzì bǐjiào 女书用字比较 (in Chinese). Zhishi Chanquan Chubanshe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-80198-261-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Chiang, William Wei (1995). We two know the script; we have become good friends. University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-0013-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wilt L. Idema. Heroines of Jiangyong: Chinese Narrative Ballads in Women's Script. (Seattle: University of Washington Press, 2009). ISBN 9780295988412. Ballads include: Moral tracts -- Admonitions for my daughter; The ten months of pregnancy; The family heirloom; The lazy wife -- Narrative ballads: The tale of third sister; The daughter of the Xiao family; Lady Luo; The Maiden Meng Jiang; The flower seller; The demonic carp; The karmic affinity of Liang Shanbo and Zhu Yingtai; Fifth daughter Wang.
வெளி இணைப்புகள்
- Nu Shu: The Secret Songs of Women பரணிடப்பட்டது 2015-04-21 at the வந்தவழி இயந்திரம் by Tan Dun
- [1] Selections from Writing from the Useless Branch, by Cathy Silber
- Nüshu texts பரணிடப்பட்டது 2009-06-09 at the வந்தவழி இயந்திரம் (in Chinese)
- Much ado about Nushu, by Laura Miller, 2004 Invited contribution to the weblog Keywords.oxusnet.net
- World of Nushu பரணிடப்பட்டது 2014-06-16 at the வந்தவழி இயந்திரம்: a detailed history of Nüshu and numerous illustrations.
- 6-paragraph article of AncientScripts.com
- Details of Nüshu at Omniglot.com
- A documentary about Nüshu on CCTV website
- An audio interview with journalist and culturalist Lisa See on her research of Nüshu பரணிடப்பட்டது 2008-07-25 at the வந்தவழி இயந்திரம்
- The secrets of nu-shu பரணிடப்பட்டது 2011-06-04 at Archive.today, article by Lisa See
- The forbidden tongue (article in The Guardian)
- Chinese women lost for words (article in The Guardian)
- Simple arrangement of an unidentified Nüshu song in MIDI format (explanatory notes are mid-way down this page)
- Nüshu dictionary