நா. பொன்னையா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நா. பொன்னையா |
---|---|
பிறந்ததிகதி | 22 சூன் 1892 |
பிறந்தஇடம் | குரும்பசிட்டி, யாழ்ப்பாண மாவட்டம், பிரித்தானிய இலங்கை |
இறப்பு | மார்ச்சு 30, 1951 | (அகவை 58)
பணி | பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | பத்திரிகையாளர், சமூக சேவையாளர் |
பெற்றோர் | ப. நாகமுத்தர், தெய்வானைப்பிள்ளை |
துணைவர் | மீனாட்சி அம்மாள் (தி. 1918) |
பிள்ளைகள் | புனிதவதி சிவா பசுபதி |
நா. பொன்னையா (சூன் 22, 1892 - மார்ச் 30, 1951) ஈழத்துப் பத்திரிகையாளரும், பதிப்பாளரும், சமூக சேவையாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியில் ப. நாகமுத்தர், தெய்வானைப்பிள்ளை ஆகியோருக்கு நான்காவது, கடைசி மகவாகப் பிறந்தார்.[1] இவரது குடும்பம் வேளாண்மையை வாழ்க்கையாகக் கொண்டது. தந்தைவழிப் பாட்டனார் பரமநாதர் திண்ணைப்பள்ளிக்கூடத்துச் சட்டம்பியார்.[2] பொன்னையா அவரது ஊரில் உள்ள மேரி பள்ளிக்கூடம் என்ற அமெரிக்க மிசன் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் மகாதேவ வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கற்று[2] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு வேளாண்மைத் தொழிலில் இறங்கினார்.[1]
அச்சுத் தொழில்
பொன்னையா வேளாண்மையில் அதிக ஆர்வம் காட்டாது, பத்திரிகை படிப்பதில் ஆர்வம் கொண்டு அச்சுத் தொழில் கற்க விரும்பினார். அக்காலத்தில் சுதேச நாட்டியம் எனும் பத்திரிகையை நடத்தி வந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் அச்சுக்கூடத்தில் அச்சுத் தொழிலைக் கற்றார். அதன் பின்னர் குரும்பசிட்டியைச் சேர்ந்த நல்லையா என்பவர் யாழ்ப்பாண நகரில் நடத்தி வந்த தேசாபிமானி பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றி தமிழில் போதியளவு ஆற்றல் பெற்றார். அதன் பின்னர் 1910 இல் தென்னிலங்கையில் களுத்துறையில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி முதலாம் உலகப் போர்க் காலத்தில் 1914 இல் தாமே ஒரு வணிக நிறுவனத்தை நடத்தி வந்தார்.[1]
1918 அக்டோபரில் கதிரிப்பிள்ளை என்பவரின் மகள் மீனாட்சி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூவர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.[1] மகள் புனிதவதி முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதியின் மனைவி ஆவார். இவர் சிட்னியில் வசித்து வந்தார்.
1918 இல் ரங்கூன், மலாயா ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1920 இல் கிழக்கு ரங்கூன் 92-ஆம் வீதியில் இருந்து வெளிவந்த சுதேச மித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் சில காலம் வசித்து கதிரேசபிள்ளை என்பவருடன் சேர்ந்து தந்திச் சுருக்கெழுத்துத் திரட்டு நூலை ஆக்குவதில் முக்கிய பங்காற்றினார். 1925 இரங்கூனில் இருந்து இலங்கை திரும்பி, தெல்லிப்பழையில் யேசுதாசன் என்பவரின் அமெரிக்க மிசன் அச்சியந்திரசாலையில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அமெரிக்க மிசன் பாடசாலையில் கைத்தொழில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1]
மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் கற்று யாழ்ப்பாணம் ஆரிய-திராவிட பாசாபிவிருத்திச் சங்கம் நடத்திய பிரதேச பண்டிதர் சோதனையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாரப் பிரவேச சோதனையிலும் சித்தியடைந்தார். 1926 ஆகத்து மாதத்தில் சுன்னாகத்தில் ஒரு புத்தகசாலையை ஆரம்பித்தார். இதனால் அவரால் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து படிக்க முடியவில்லை. 1929 இல் திருமகள் அழுத்தகம் என்ற பெயரில் அச்சுக்கூடத்தையும் ஆரம்பித்தார்.[1] திருமகள் அழுத்தம் ஊடாக 1939 இல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தை சி. கணேசையரின் உரை விளக்கக் குறிப்புடன் சி. வை. தாமோதரம்பிள்ளையின் நினைவாகப் பதிப்பித்து வெளியிட்டார். தொடர்ந்து ஏனைய அதிகாரங்களையும் வெளியிட்டார்.[1]
பத்திரிகைத் தொழில்
1930 சூன் 22 இல் சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் ஈழகேசரி வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1935 முதல் ஈழகேசரியின் ஆண்டு மலர்களை உயர்ந்த முறையில் வெளியிட்டு வந்தார். 1933 இல் Ceylon Patriot என்ற ஆங்கில வாரப்பத்திரிகையை எஸ். சி. சிதம்பரநாதன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தி வந்தார்.[1]
1941 ஆம் ஆண்டில் Kesari என்ற ஆங்கில வார இதழை ஹன்டி பேரின்பநாயகம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.[1]
சமூகப் பணிகள்
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இணைந்து இளைஞர் மாநாடுகளில் பங்குபற்றினார். மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினராகச் சேர்ந்து பங்களித்தார். 1936 முதல் கிராம சங்கத்தில் உறுப்பினராக இருந்து, பின்னர் 1946 முதல் இறக்கும் வரை மயிலிட்டி கிராமச் சங்கத்தில் தலைவராக இருந்தார்.[1]
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவிய போது 1941 இல் வயாவிளானில் 12 ஏக்கர் காணியை வாங்கி பெருமளவு உணவுப் பொருள் உற்பத்தி செய்தார். அவ்விடத்தில் கைத்தொழில் பாடசாலை ஒன்றை நிறுவ முயற்சிகளை மேற்கொண்ட போது, உள்ளூர் பொதுமக்கள், மற்றும் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், அவ்விடத்தை வயாவிளான் மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்காகக் கையளித்து பெருமளவு நன்கொடையும் அளித்தார். குரும்பசிட்டியில் சன்மார்க்க சபை என்னும் பெயரில் ஒரு சங்கத்தை 1934 ஆம் ஆண்டில் நிறுவினார்.[1]
1950 ஆம் ஆண்டில் அரசாங்கம் இவரை சமாதான நீதிபதியாக்கிக் கௌரவித்தது.[1]
மறைவு
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நா. பொன்னையா மானிப்பாய் கிறீன் மருத்துவமனையில் 1951 மார்ச் 30 அன்று அதிகாலை 4:30 மணிக்குக் காலமானார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "செந்தமிழ் வளர்த்த தேசபக்தன்". ஈழகேசரி 21 (35): பக். 1. ஏப்ரல் 1 1951. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1951.04.01.
- ↑ 2.0 2.1 2.2 கனக செந்திநாதன் (1968). ஈழம் தந்த கேசரி. pp. பக். V.