தொ. பரமசிவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தொ. பரமசிவன்
தொ. பரமசிவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தொ. பரமசிவன்
பிறந்ததிகதி 1950
இறப்பு திசம்பர் 24, 2020

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.[1][2]

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ. பரமசிவன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஆறாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞராக இணைந்தார். சாக்கிர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008 இல் இளைப்பாறும்வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.[3]

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

குடும்பம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டையில் வசித்து வந்த இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆவார். தொ. பரமசிவன் இசக்கியம்மாள் தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.[4]

கல்வி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலையில் தமிழும் கற்றார். இதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1976ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார்.[5] முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால், இவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, மதுரையில் உள்ள அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். இந்தக் கோயில் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வு, கோயில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இவரது ஆய்வுக் கட்டுரையினை மதுரை காமராசர் பல்கலைக்கழம் “அழகர் கோயில்” என புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்விலிருந்து இவரது அணுகு முறை முற்றிலும் மாறி, அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்ததாக அமைந்தது. தமிழ் மொழியின் மீதும் பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வினை செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார்.

பணிபுரிந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்

இவரது நூல்கள்

  • அறியப்படாத தமிழகம் - காலச்சுவடு பதிப்பகம்
  • பண்பாட்டு அசைவுகள் - காலச்சுவடு பதிப்பகம்
  • அழகர் கோயில் - மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்
  • தெய்வம் என்பதோர் - காலச்சுவடு பதிப்பகம்
  • வழித்தடங்கள் - மணி பதிப்பகம்
  • பரண் - சந்தியா பதிப்பகம்
  • சமயம் (தொ.ப - சுந்தர் காளி உரையாடல்)
  • சமயங்களின் அரசியல் - வானவில் புத்தகாலயம்
  • தொ.பரமசிவன் நேர்காணல்கள் - காலச்சுவடு பதிப்பகம்
  • விடு பூக்கள் - கயல்கவின் பதிப்பகம்
  • உரைகல் - கலப்பை பதிப்பகம்
  • இந்துதேசியம் - கலப்பை பதிப்பகம்
  • நாள்மலர்கள் - பாவை பதிப்பகம்
  • மானுடவாசிப்பு - தடாகம் பதிப்பகம்
  • பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - காலச்சுவடு பதிப்பகம்
  • மஞ்சள் மகிமை - காலச்சுவடு பதிப்பகம்
  • மரபும் புதுமையும் - காலச்சுவடு பதிப்பகம்
  • இதுவே சனநாயகம் - காலச்சுவடு பதிப்பகம்
  • செவ்வி - கலப்பை பதிப்பகம்
  • தமிழாராய்ச்சியின் வளர்ச்சி

மேலும் தொ. பரமசிவத்தின் நூல்களை தமிழக அரசு அரசுடைமையாக்கியது.[6]

தொ. பரமசிவன் பற்றிய நூல்கள்

  • தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ. பரமசிவன் நினைவுச் சிறப்பிதழ். pdf இணைப்பு.[1]

அறியப்படாத தமிழகம்

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

பண்பாட்டு அசைவுகள்

‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர் வகைகளும் இவற்றினூடான மனித அசைவுகளும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது. தொ. பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல் \ தொடர் \ பழமொழியிலிருந்து \ ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தனின் போர் முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது.

அழகர் கோயில்

மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்விகத் தன்மை அடைந்துவிட்டன.

கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில், ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தம்முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. 'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.

ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல.. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று. இந்த நூலுக்காக மிகப்பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தொ.ப.

சித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கதைப்பாடல்கள். நம்பிக்கைகள், கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.ப ஆய்வு செய்துள்ளார்.

மக்களுக்கு நெருக்கமான, பழைமையான கோயில் குறித்த ஆய்வு நூல். புனிதத்தன்மை குலையாமல் அதை ஒரு வட்டார வரலாற்று நூலாக மாற்றியதுதான் தொ.ப வின் தனித்தன்மை. தமிழ்த் தொன்மத்தை, வழிபாட்டு மரபை, சமூக நடைமுறைகளை, அடுத்து அடுத்தென்று வளர்ந்து கிளைத்து நிற்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள அவசியமானது இந்த நூல்.

தெய்வம் என்பதோர்

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.

பரண்

சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.

சமயங்களின் அரசியல்

தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று. சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார்.

உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை.

இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை. கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது. கடலாகத் தெரியும்!.

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

அறிஞர் தொ. பரமசிவன் அவர்களின் ‘அழகர் கோயில்’ தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்க மற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப் பார்வையையும் தமக்கென வகுத்துக் கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்தைய சமூகத்திலிருந்து சமகால அரசியல் வரை அவரால் விளக்க முடியும்; விளக்கினார். அவரது ‘அறியப்படாத தமிழக’த்தின் மூலமே அவர் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அறியப்பட்ட அறிஞரானார்.

அவரை மேலும் அறிந்துகொள்ளவும், அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள்தாம் இந்த நேர்காணல்கள். நாட்டார் தெய்வங்கள் x ‘பெருந்’ தெய்வங்கள், சாத்திரங்கள் சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாடு இழையோடும் அன்றாட நடைமுறைகள், கலை, இலக்கியம், கல்வி, சாதியம், திராவிடக் கருத்தியல், ஆளுமைகள் என அனைத்தையும் பற்றிய பார்வைகள் இயல்பான உரையாடலில் சுவையாக வெளிப்படுவதை இந்நேர்காணல்களில் அனுபவிக்கலாம்.

விடுபூக்கள்

திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குறியவர். தொ.பா.வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. சிதம்பரம் கோயிலைக் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்பன போன்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது.

உரைகல்

பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உ.வே.சா. அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிதியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உன்மையினைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டியது அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தார்க்கும் முற்போக்கு இயக்கத்தார்க்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூலில் தொ.ப. மதிப்பிடுவது கவனத்துக்குரியது.

இந்து தேசியம்

பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம், சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் ஆகும்.

மானுடவாசிப்பு

ஓர் அற்புதமான ஆளுமையோடு நிகழ்த்துகின்ற நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறது இக்கலந்துரையாடல். அறிவின் துருத்தல்களற்ற வினாக்களும், அகந்தைகளற்ற விவரிப்புகளுமாக, நெளிந்தோடும் ஆறெனச் செல்கிறது நூல்.

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு

இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது.

பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.

மஞ்சள் மகிமை

பண்பாடு என்பது தொன்மையான மற்றும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.

மரபும் புதுமையும்

நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வின் ஆய்வுகள். அவ்வாறு கெட்டிதட்டிப் போனவற்றின், போக வாய்ப்புள்ளவற்றின் ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.

இதுவே சனநாயகம்

வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு ‘சமயமும் வழிபாடும்’, ‘உறவும் முறையும்’ ‘ஆளுமைகள்’, ‘மதிப்புரைகள்’, ‘ஆய்வுப்பார்வை’ போன்ற அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.

செவ்வி

பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல. பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”

பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்கு காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல இந்த பத்தாண்டுகளில் பெரியாரை பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.

தமிழாராய்ச்சியின் வளர்ச்சி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24.08.2000 அன்று நிகழ்ந்த அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தொ.ப. அவர்கள் ஆற்றிய உரையே இந்நூல்.

மொழி இலக்கியத் தளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை நிகழ்ந்த ஆய்வுப்போக்குகள் பற்றியும் தமிழறிஞர்கள் பற்றியும் இந்நூல் செறிவாகப் பதிவுசெய்கிறது.

மறைவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொ. பரமசிவன் 2020 திசம்பர் 24 அன்று பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் காலமானார்.[3] [7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

காணொளிகள்
"https://tamilar.wiki/index.php?title=தொ._பரமசிவன்&oldid=4744" இருந்து மீள்விக்கப்பட்டது