தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் செய்திகள்
தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சொல்லதிகாரத்தில் மூன்றாவது இயலாக வேற்றுமை மயங்கியல் உள்ளது.
பொருள் செயல்படும்போது தொழிலால் தன்னிலை வேறுபடுவது வேற்றுமை. இந்த வேற்றுமை வேற்றுமை உருபுகளாலும், வேற்றுமை உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையாலும் உணரப்படும். இந்த இயலுக்கு முந்தைய வேற்றுமையியல் இவை இரண்டையும் விளக்கிற்று. இந்த இயலில் வேற்றுமை உருபும், வேற்றுமைப் பொருளும் மயங்குவது பற்றிய செய்தி சொல்லப்படுகிறது. (Though the case-suffix or case-ending added to the subject denotes the relation between subject and predicate, the matter of relation is to be considered rather than the suffix.)
வேற்றுமை பற்றிய செய்திகள் எழுத்திகாரம் புணரியலிலும், சொல்லதிகாரம் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கில், விளிமரபு ஆகிய மூன்று இயல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.
செய்திகள் இவ்வியல் நூற்பா வரிசையெண் குறியீட்டுடன் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் இளம்பூரணர் உரையைத் தழுவியவை.
உருபினும், பொருளினும் மெய் தடுமாறி நிற்கும் வேற்றுமைகள்
அரசரைச் சார்ந்தான் எனச் சொன்னாலும் அரசன்கண் சார்ந்தான் என்பதே பொருள் – இது செயல்படு கருமமல்லாத ஒழுக்கம் உருபு இரண்டாம் வேற்றுமை. பொருள் ஏழாம் வேற்றுமை அரசனைக் கண்டான் – இது கருமச் சார்பு. -1-
கண்ணைக் குத்தினார். கண்ணுள் குத்தினார் – 2, 7, மயக்கம் -2-
சூதினைக் கன்றினான், சூதிண்கட் கன்றினான் (கன்றல் = விருப்பத்தில் கனிதல்) -3- நெறியைச் சென்றான், நெறிக்கட் சென்றான் -3-
யானையது கோட்டைக் குறைத்தான் -4- (முதலுக்குப் பின் சினை) யானையைக் கோட்டுக்கண் குறைத்தான் -5- (முதலுக்குப் பின் சினை) கோட்டது நுனியைக் குறைத்தான். -6- கோட்டை நுனிக்கண் குறைத்தான் -6- கோட்டை நுனியைக் குறைத்தான் -6- இவற்றில் கோடு என்னும் சினைப்பெயர் முதற்பெயர் ஆயிற்று.
எட்குப்பை - பிண்டப் பெயர் (எள் குவியலாயிற்று) (எள் வேறு குவியல் வேறு அன்று) நெற்குப்பை (நெல்லின் குவியல்) எட்சாந்து (எள் துவையல்), கோட்டுநூறு (சங்கு வெந்த திருநீறு) -7-
அரசனொடு வந்தார் சேவகர். (உயர்பின் வழியே பிற வரும்) -8- நாயெடு நம்பி வரும் (இதில் நாய் உயர்பு)
வாணிகத்தான் ஆயினான் (மூன்றாம் வேற்றுமை), வாணிகத்தின் ஆயினான் (ஐந்தாம் வேற்றுமை) – ஆக்கச் சொல் இவ்வாறு 3, 5ல் மயங்கும் -9-
வான் நோக்கி வாழும் = வானை நோக்கி வாழும் (இரண்டாம் வேற்றுமை) = வானின் உதவிக்காக நோக்கி வாழும் (ஏது-பொருள்) -10-
நம்பி மகன் = நம்பிக்கு மகன் (நம்பி, மகன் இரண்டும் உயர்திணை. எனவே அது-உருபு கெட்டு, கு-உருபு வந்தது) -11-
புலி கொல் யானை – இது தடுமாறு தொழிற்பெயர். இதில் கொன்றது புலியா, யானையா என்று தடுமாறும் நிலை உள்ளது. இதனை விரிக்கும்போது புலியைக் கொன்ற யானை என்றும், புலியால் கொல்லப்பட்ட யானை என்றும் விரித்துக்கொள்ள வேண்டும். -12-
இந்தத் தடுமாறு தொழிற்பெயரை அடுத்து வரும் வினையால் விளங்கிக்கொள்ளலாம். புலிகொல் யானைக்கோடு வந்தது (புலி யானையைக் கொன்றது) புலிகொல்யானை ஓடிற்று (புலியைக் கொன்றுவிட்டு யானை ஓடிற்று) -13-
போற்றிவா என்பது ஓம்படைக்கிளவி. புலி போற்றிவா என்றால் புலி தாக்குதலிலிருந்து உன்னைப் போற்றிக்கொண்டு வா என்றும், புலியை நீ போற்றிவா (வளர்த்துவா) என்றும் பொருள் விரித்துக்கொள்ளவேண்டும். -14-
காட்டியானை என்பது காட்டில் வாழும் யானை. காட்டியானை என்பது வாழ்ச்சிப் பொருள். இதனைக் காட்டது யானை, காட்டின்கண் யானை என்று 6, 7 உருபுகளால் விரித்துக்கொள்ள வேண்டும். -15-
நகர்-பலி என்பது கொடையெதிர் கிளவி. நகருக்கு உணவு என்பது அதன் பொருள். இதனை நகர் தரும் உணவு என்னும் பொருள்பட நகரது பலி என்றும் விரித்துக்கொள்ளலாம். (வேற்றுமை 4, 6 மயக்கம்) -16-
புலியஞ்சும் – இது அச்சக்கிளவி. இதனைப் புலியின் அஞ்சும் என்றும், புலியை அஞ்சும் என்றும் விருத்துக்கொள்ள வேண்டும். (புலியின் அஞ்சும் என்றால் புலியை எண்ணி அஞ்சும் என்றும், புலியை அஞ்சும் என்றால் புலியைக் கண்டு அஞ்சும் என்றும் பொருணர்ந்துகொள்ள வேண்டும்) -17-
இவ்வாறு வேற்றுமை உருபினும், பொருளினும் மெய் தடுமாறி நிற்கும் -18-
யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் – இப்படிப் பல உருபுகள் அடுக்கி வந்தாலும் ஒருசொல் நடையாகக் கொள்ளப்படும். (ஒருசொல் = ஒரு வாக்கியம்) -19-
வேற்றுமை உருபு இடையிலும், இறுதியிலும் வரும் நிலம் கடந்தான், நிலத்தைக் கடந்தான் – இடையில் வந்தது கடந்தான் நிலத்தை – இறுதியில் வந்தது -20-
சாத்தனதனை, சாத்தனதனொடு – இவற்றில் வேற்றுமை உருபுகள் அது என்னும் பிறிதொன்றை ஏற்றன. நிலம் கடந்தான் – உருபு தொக வந்தது -21-
கடந்தான் நிலம் – இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது. இருந்தான் குன்றத்து – இதில் ஏழாம் வேற்றுமை உருபு இறுதிக்கண் தொக்கது. ஏனைய வேற்றுமை உருபுகள் இறுதியில் தொகுவதில்லை. -22-
எந்த வேற்றுமை உருபில் கூறியிருந்தாலும் வேற்றுமைப்பொருள் செல்லும் வழிதான் வேற்றுமையாக எடுத்துக்கொள்ளப்படும். -23-
கு, ஐ, ஆன் வேற்றுமை உருபுகள் செய்யுளில் அ எழுத்தைக் கொண்டு முடியும் -24-
‘கடிநிலை இலவே ஆசிரியர்க்க’ என்று செய்யுள் இறுதியில் வருகிறது. இது ‘ஆசிரியர்க்கு’ என வரவேண்டிய ஒன்று. (தொல்காப்பியம் 1-4-24) -25-
‘காவ லோனக் களிறு அஞ்சும்மே’ – இதில் காவலோனை என்று சொல்லவேண்டியது காவலோன கன வந்துள்ளது -25- இந்த மாறுதல் உயர்திணையில் மட்டுமே வரும். அஃறிணையில் வராது -26-
யானையது கோடு (யானைக்கு) 6>4 இவளைக் கொள்ளும் இவ்வணி (இவட்கு) (கொள்ளும் = பொருந்தும்) 2>4 வாயான் தக்கது வாய்ச்சி (வாய்க்கு) வாய்ச்சி = வாய்மை) 3>4 ஆவினது கன்று (ஆவிற்கு) 6>4 கருவூரின் கிழக்கு (கருவூர்க்கு) 5>4 சாத்தனின் கொடியன் (சாத்தனுக்கு) 5>4 மாரியுள் வந்தான் (மாரிக்கு) 7>4 ஊரிற் றீர்ந்தான் (ஊருக்கு) 5>4 உறையூரிற் பெரிது கருவூர் 5>4 இப்படி உருபுகள் மயங்கும் -27-
இப்படிப் பிற உருபும் பொருளும் மயங்கி வரினும் மொழிக்கு மானம் இல்லை (மானம் = குற்றம்) -28-
வினைச்சொல்
தொழில் தோற்றுவிக்கும் முதனிலைகள் எட்டு -29- வனைந்தான் என்பது தொழில் வினை - வனைதல் செய்வது - குயவன் செயப்படுபொருள் - குடம் நிலம் - படர்க்கை (இருந்து செய்த இடம்) காலம் - இறந்த காலம் (பகலோ, இரவோ) கருவி - கோல், திரிகை இன்னதற்கு - யாரோ ஒருவருக்காக இது பயன் – அறமோ, பொருளோ பயக்கும்
எட்டில் சில குன்றுவதும் உண்டு -30- கொடி வளர்ந்தது என்பதில் செயப்படுபொருள், இன்னார்க்கு, இது பயன் என்னும் மூன்றும் இல்லை.
ஆகுபெயர்
ஒன்றன் பெயர் மற்றொன்றுக்கு ஆகி நிற்பது ஆகுபெயர். 1. முதலில் கூறும் சினை அறி கிளவி \ தெங்கு தின்றான் - தெங்கு என்னும் தென்னைமரம் தேங்காய்க்கு ஆயிற்று \ 2. சினையில் தோன்றும் முதலறி கிளவி \ இலை நட்டு வாழும் – இலையை யட்டதால் முதல் தோன்றி வாழும் (வெற்றிலை) 3. பிறந்தவழி கூறல் \ காஞ்சிபுரம் – இப் பட்டுச்சேலை காஞ்சிபுரம் 4. பண்புகொள் பெயர் \ நீலம் உடுத்தினாள் – நீல நிறமுள்ள ஆடை உடுத்தினாள். 5. இயன்றது மொழிதல் \ ஒரு பிடி சோறு – பிடிக்கும் தொழில் 6. இருபெயர்-ஒட்டு \ பொற்றொடி வந்தாள் 7. வினைமுதல் உரைக்கும் கிளவி \ தொல்காப்பியம், கபிலம்
இந்த ஆகுபெயர்கள் தம்மோடு தொடர்புடைய பொருளுக்கும், தொடர்பில்லாப் பொருளுக்கும் ஆகி வரும். -32- தேன்மொழி வந்தாள் என்னும்போது தேனோடும், மொழியோடும் தொடர்பில்லாத அம்மொழி பேசும் ஒருத்திக்கு ஆகி வந்தது.
பொருளை விரிக்கும்போது தொடர்புள்ள வேற்றுமை தந்து விரித்துக்கொள்ள வேண்டும். -33- தெங்கு தின்றான் என்னும்போது தெங்கினது காய் என விரித்து உணர்ந்துகொள்ள வேண்டும்.
அளவு, நிறை ஆகியவற்றாலும் ஆகுபெயர் அமையும் -34- ஒரு உழக்கு தருக – ஒரு உழக்கு அளவு அளந்து தருக ஒரு தொடி தருக – ஒரு தொடி அளவு நிறுத்துத் தருக
சொல்லப்படாத வகையில் ஆகுபெயர் தோன்றினாலும் இந்த முறையில் உணர்ந்துகொள்ள வேண்டும். -35-
இவற்றையும் காண்க
கருவிநூல்
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963