தொல்காப்பியம் கற்பியல் செய்திகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது.

கற்பியல் செய்திகள்

பெண்ணைக் கொடுப்பதற்கு உரிமை உடைய மரபினர் சடங்குகளுடன் தலைவனுக்குத் தருவது கற்பு எனப்படும். தலைவனுடன் தலைவி செல்லும்போது கொடுப்பவர் இல்லாச் சடங்குடனும் கற்பு நிகழும். நான்கு வகையான குலத்தொழில் நிலைகளில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் சடங்குடன் பெண்ணைக் கொடுப்பவர் மேல் மூவரே. இந்தச் சடங்கு முறையை வேளாளரும் பின்பற்றுவது உண்டு. சடங்கைப் பெற்றோர்களும், மற்றவர்களும் கூடிச் செய்வது வழக்கம். இதில் பொய்யும் குறைபாடுகளும் தோன்றிய பின்னர் ஐயர் சடங்குகளைச் செய்துவைத்தனர். [1]

தலைவன், [2] தலைவி, [3] தோழி, [4] காமக்கிழத்தியர், [5] செவிலி, [6] அறிவர், [7] கூத்தர், [8] இளையர், [9] பார்ப்பார், [10] ஆகியோரின் பங்கும் உரையாடல்களும் இப்பகுதியில் தொகுத்தும் தனித்துச் சுட்டியும் காட்டப்படுகின்றன.

குறித்துச் சொல்லப்பட்டவை

  • அவன்பின் சென்ற தலைவி வழியில் கண்டனவும், நேர்ந்தனவும் ஆகிய அச்சம் தரும் செய்திகளை அவனிடமும், வாயில்களிடமும் பேசமாட்டாள். [11]
  • கற்பு, காம இன்பம் தந்து பெறுதல், பெண்பாலார்க்கு உரிய ஒழுக்க முறைமைகள், பொறையுடைமை, நிறையுடைமை, பொறுமையுடன் விருந்தினரைப் பேணுதல், சுற்றத்தாரைப் பாதுகாத்தல், போன்றவை தலைவிக்கு உரிய மாண்புகள் (சிறப்புகள்). [12]
  • தலைவனிடம் முகம் கொடுத்துப் பேசுதல் வாயில்களின் கடமை. [13]
  • அறிவர் தலைவனையும் தலைவியையும் இடித்துரைப்பர். [14]
  • தலைவி ஊடல் தணியவில்லை என்றால் தலைவனும் ஊடுவான். [15]
  • அப்போது தோழி தலைவனை ஆற்றுவிப்பாள். [16] [17]
  • தலைவனைக் கொடியன் என்னும் உரிமை தோழிக்கு உண்டு. [18]
  • அலர் களவுக் காலத்திலும், பரத்தைமை பற்றிக் கற்புக் காலத்திலும் நிகழும். [19]
  • இதனால் காம இன்பம் சிறக்கும். [20]
  • கிழவன் விளையாட்டிலும் இன்பம் மிகும். [21]
  • வாயில்கள் தலைவியிடம் தலைவனைப்பற்றிக் கோள் மூட்டமாட்டார்கள். [22] நான் என்ன செய்வேன் என்று நழுவிக்கொள்வர். [23]
  • போர்ப்பாசறையில் பெண் அனுமதிக்கப்படுவதில்லை. 34 போர்க்காலத்தில் வேறோர் இடத்தில் பெண்ணைக் கூடுவது உண்டு. [24]
  • போர்க்காலத்தில் தலைவி நிலையைத் தலைவனிடம் பேசமாட்டார்கள். வெற்றிக்குப் பின்னர்தான் சொல்வார்கள். [25]

பிரிவின் கால அளவு

  • தலைவியின் பூப்பிலிருந்து 12 நாள் கரு தோன்றும் காலம். அப்போது தலைவியைத் தலைவன் பிரியமாட்டான். [26]
  • கல்விப் பிரிவு மூன்று ஆண்டைக் கடப்பதில்லை. [27]
  • தூது, போர்ப் பிரிவு ஓர் ஆண்டுக்குள் இருக்கும் [28]
  • பிற பிரிவுகளும் ஓர் ஆண்டுக்கு உட்பட்டனவே [29]
  • ஆறு, குளம் ஆகியவற்றில் நீராடச் செல்லும் பிரிவும் உண்டு. [30]

இறத்தல் என்னும் துறவு

  • இல்லற எல்லையைக் கடப்பதை இறத்தல் என்றும், துறத்தல் என்றும் கூறுவர். காம இன்பம் நிறைவு பெற்ற காலத்தில், மக்களுக்குப் பாதுகாவலாக இருந்துகொண்டு, அவர்களும், சுற்றத்தாரும் அறநெறியைக் கடைப்பிடிக்கச் சிறந்த வழி இன்னது எனப் பயிற்றுவித்துக்கொண்டு வாழ்வதுதான் இல்லறத் துறவு.[31]
  • இந்தத் இறந்தாரைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.[32]

அடிக்குறிப்பு

தனி எண்களாக உள்ளவை தொல்காப்பியம் கற்பியல் நூற்பா எண்ணைக் குறிக்கும்.

  1. 1 முதல் 4
  2. 5
  3. 6
  4. 9
  5. 19
  6. 12
  7. 13
  8. 27
  9. 29
  10. 36
  11. 7, 8
  12. 11
  13. 11
  14. 14
  15. 15
  16. 16
  17. அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல் – திருக்குறள் – 1303
  18. 17
  19. 21
  20. 22
  21. 23
  22. 24
  23. 25
  24. 35
  25. 45
  26. பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
    நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
    பரத்தையின் பிரிந்த காலையான. தொல்காப்பியம் கற்பியல் 46
  27. 47
  28. 48
  29. 49
  30. 50
  31. காமம் சான்ற கடைக்கோட் காலை
    ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
    அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
    சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. – தொல்காப்பியம் கற்பியல் 51
  32. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை – திருக்குறள் 42