தொல்காப்பியப் பாயிரம்
தொல்காப்பியப் பாயிரம் என்பது தொல்காப்பியத்தின் முன்பகுதியில் ‘சிறப்புப் பாயிரம்’ எனத் தலைப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ள பாடல். இதனைப் பாடியவர் பனம்பாரனார்.
நூலுக்கு முன்னுரையாக அமையும் பகுதி ஒன்றை 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் இலக்கணம் பாயிரம் எனக் குறிப்பிடுகிறது. பாயிரம் என்னும் சொல்லே தொல்காப்பியத்திலும், சங்கப்பாடல்களிலும் இல்லை. எனினும் பனம்பாரனார் என்பவர் தொல்காப்பியம் என்னும் நூலைப்பற்றியும், தொல்காப்பியரைப் பற்றியும் எழுதியுள்ள பாடல் ஒன்று தொல்காப்பியத்துக்கு முன் ‘சிறப்புப் பாயிரம்’ எனத் தலைப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பாயிரம் சொல்விளக்கம்
இந்தப் பாடலில் அமைந்துள்ள செய்திகளை உள்ளத்தில் கொண்டு நன்னூல் சிறப்புப் பாயிரம் என்பதற்கு விளக்கம் தருவதைக் காணமுடிகிறது. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதை என்னும் நூலில் இராசனை என்பவள் பந்தடிக்கத் தொடங்கும்போது இவ்வாறு பந்து அடிக்கப்போகிறேன், இவ்வாறு எண்ணி மதிப்பிடுங்கள் எனப் பாயிரம் கூறிவிட்டுப் பந்தடிக்கத் தொடங்குகிறாள் என வருகிறது. பாய்ந்திருக்கும் செய்தி பாயிரம் எனப்படும. நூலுக்குப் பாயிரம் என்பது நூலில் பாய்ந்து இருக்கும் செய்தி. சிறப்புப் பாயிரம் என்பது சமகாலத்தவர் ஒருவர் நூலை மதிப்பிட்டு உரைக்கும் செய்தியாகும். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் தந்துள்ளவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர்.
பாயிரம் தரும் செய்திகள்
பனம்பாரனார் தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகள் இவை.
- தமிழ் கூறும் நல்லுலகம் என்பது வடவேங்கடம், தென்குமரி எல்லைகளுக்கு இடையே பரந்திருக்கும் நாடு.
- இங்கு வழங்கிய மொழி, எழுதப்பட்ட செய்யுள், ஆகியவை தொல்காப்பியத்துக்கும், அவரது முன்னோர் நூலுக்கும் முதல்.
- இந்த முதலானது எழுத்து, சொல், பொருள் என முன்னோரால் பகுத்துக் கூறப்பட்டிருந்தது.
- இவை செந்தமிழின் இயற்கை.
- தொல்காப்பியர் செந்தமிழ் வழங்கிய நிலத்தையும் கருத்தில் கொண்டார்.
- முன்னோர் நூல்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றிலுள்ள செய்திகளை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார்.
- அவற்றைப் புலமாகத் தொகுத்தார்.
- இது போக்கு என்னும் குற்றம் இல்லாத பனுவல்-நூல்
- இதனை நிலந்தரு திருவிற் பாண்டியன் புலவர்-அவையில் அரங்கேற்றினார்.
- அப்போது அதங்கோட்டு ஆசான் என்பவர் எழுப்பிய ஐயங்களைப் போக்கினார். இந்த அதங்கோட்டாசான் அறத்தை மட்டும் அழைத்துப் பேசும் நாவினை உடையவர். நான்கு வேதங்களிலும் முதிர்ந்த அறிவினை உடையவர்.
- தமிழ் (ஆரியத்தோடு) மயங்காத எழுத்து முறைமையை அதங்கோட்டு ஆசானுக்கு எடுத்துக் காட்டினார்.
- தொல்காப்பியர் ‘ஐந்திரம்’ என்னும் நூல் நிரம்பியிருந்த அறிவினை உடையவர். (ஐந்திரம் என்பது மயன் என்ற எழுத்தியல், ஓவிய,கட்ட்டிடக் கலை நிபுணரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்[1] என்றும் கூறுவர். ஐந்து திறம் ஆகிய ஐந்திணைகள் பற்றி கூறும் நூல் ஐந்திறம் எனப்பட்டது. பாணினியம் எனும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி தொல்காப்பியம் இயற்றப்பட்டது எனும் கூற்றுக்கு தக்க ஆதாரம் கிடைக்கவில்லை[2].
- இந்தப் புலநூலால் தன்னைத் தொல்காப்பியன் என நிலைநாட்டிக்கொண்டார். இதனால் படிமைக்கோலம் பூண்டிருந்த தொல்காப்பியர் புகழ் பலவாகப் பெருகிற்று, (பல்புகழ் நிறுத்தப் படிமையோன் = தொல்காப்பியர் தம் நூல்படைப்பு அறிவால் தம் பல்வேறு துறை அறிவை உலகில் நிலைநிறுத்தினார் என்பது இதற்குச் சரியான விளக்கமாகும்.)
- ↑ Yalarivan, யாழறிவன் (வெள்ளி, 24 அக்டோபர், 2014). "Yalarivan: மயன் என்ற தமிழன்..." Yalarivan. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ஐந்திரம் (இலக்கண நூல்)", தமிழ் விக்கிப்பீடியா, 2021-10-24, பார்க்கப்பட்ட நாள் 2022-05-26