தி. அ. முத்துசாமிக் கோனார்
தி. அ. முத்துசாமிக் கோனார் (1858-1944) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும் வடமொழியும் கற்றார்.இசை, சமயக் கல்வி ஆகியவற்றிலும் நல்ல புலமை பெற்றவர். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கதிரைவேற் பிள்ளையிடம் அஷ்டாவதானம் கற்றார். பலதுறைப் புலமை உடைய இவர் திருச்செங்கோடு மலைக்குப் படி அமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தவர். படி மேஸ்திரியாகவும் வேலை செய்துள்ளார். படிப்படியாக இலக்கியத்துறையில் நுழைந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'திருச்செங்கோட்டு விவேகதிவாகரன்' என்னும் இதழை நடத்தினார். 'கொங்கு வேள்', 'கொங்கு மண்டலம்' ஆகியவையும் இவர் நடத்திய இதழ்கள். 'கொங்கு நாடு' என்னும் தலைப்பில் முதன்முதலாகக் கொங்கு நாட்டு வரலாறு எழுதியவர் இவர். 'கார்மேகக் கவிஞர்' எழுதிய 'கொங்கு மண்டல சதகம்' நூலை ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பித்ததோடு அந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார்.
திரு. வி. கலியாணசுந்தரனார் இவரை,
"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்"
என்று பாராட்டி உள்ளார்.[1]
பதிப்பித்த நூல்கள்
திருச்செங்கோட்டைப் பற்றிய இலக்கியங்கள்
- .திருச்செங்கோட்டு மாலை
- பணிமலைக் காவலர் அபிஷேக மாலை
- திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
- செங்கோட்டுக் குமரர் இரட்டை மணிமாலை
- அர்த்தநாரீசுர மாலை
- சந்திரசேகர மாலை
- கருணாகர மாலை
- திருச்செங்கோட்டுப் புராணம்
- திருச்செங்கோட்டு மான்மியம்
- அர்த்தநாரீசுவரர் பதிகம்
- கருணாகரப் பதிகம்
- அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம்
- உமைபாகப் பதிகம்
- பணிமலைக் காவலர் பதிகம்
- திருச்செங்கோட்டுக் கலம்பகம்
- திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ்
- அர்த்தநாரீசுவரர் கும்மி
- அர்த்தநாரீசுவரர் முளைக்கொட்டுப் பாட்டு
- திருமுக விலாசம்
- திருச்செங்கோட்டுச் சதகம்
- நாரிகணபதி ஒருபா ஒருபஃது
- திருச்செங்கோட்டு ஊசல்
- திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
- செங்கோட்டு வேலவர் பஞ்சாமிர்தம்
- அர்த்தசிவாம்பிகை நவகம்
மேற்கோள்கள்
- ↑ "காலச்சுவடு இதழ்க் கட்டுரை - பதிப்புப் பணியில் கொங்கு விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி - கு.மகுடீசுவரன், தமிழ்த்துறைத் தலைவர், கோபி கலைக்கல்லூரி". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.