திரு ஆனைக்கா உலா
திரு ஆனைக்கா உலா (திருவானைக்கா உலா) [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரால் பாடப்பட்ட நூல்களில் ஒன்று. வெண்ணாவல் [2] மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் உலா வருவதாகப் பாடும் பாடல் இது. இதில் 461 கண்ணிகளும் 2 வெண்பாக்களும் உள்ளன.
இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றதை ஆசிரியர் காளமேகப் புலவர் தலச்சிறப்பு கூறும் பகுதியில் குறிப்பிடுகிறார்.
பருவ விளையாட்டுகள்
மகளிர் விளையாட்டுகள் சிலவற்றை இந்த நூல் பருவமங்கையரைக் கூறும் பகுதியில் தெரிவிக்கிறது. இமனால் இந்த விளையாட்டு இந்தப் பருவத்தில் நிகழும் என்பதை உணரமுடிகிறது.
விளையாட்டு | விளையாடும் பருவம் |
---|---|
சிற்றில் இழைத்தல் | பேதைப் பருவம் [3] |
பாவை புனைதல் | பேதை, பெதும்பை பருவங்கள் [4] |
கழங்கு ஆடல் | பெதும்பைப் பருவம் |
பந்து ஆடல் | மங்கைப் பருவம் |
யாழ் மீட்டுதல் | மடந்தைப் பருவம் |
அம்மானை ஆடுதல் | அரிவைப் பருவம் |
பொழில் விளையாட்டு | பேரிளம்பெண் பருவம் [5] |
கழங்காட்டம்
கழங்கு ஒண்ணாங்கல் விளையாட்டில் மகளிர் ஒன்று, இரண்டு என ஏழு வரை எண்ணிக்கொண்டே கழற்சிக் காய்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பர். இந்த நூல் அதனை உணர்த்தும் வகையில் கழங்காட்டப் பாடலில் இறைவன் புகழை எண்ணிக்கை காட்டிப் பாடுகிறது.
- கயிலை வெற்பெடுத்த வீரன் உடல் சரிய ஊன்றிய தாள் ஒன்று
- ஆனைக்காவில் உறை ஓங்கார மூர்த்தி உரு இரண்டு
- கோலம் மூன்று ஆக்கி முடிக்கும் திருக்கருமம் மூன்று
- எம்மை ஏழு பிறப்பில் விழாமல் காத்தெடுக்கும் கரம் நான்கு
- மால் பார் காக்கத் தந்த பைடை ஐந்து
- சேவடி சேரத் தவம் செய் பண்பினார் வெல்லும் பகை ஆறு
- விடங்கர் என இருந்த இடங்கள் ஏழு
அழகுக்கு ஆரும் ஒவ்வாதான், அனைத்துலகை ஆள்வான், என்னானைக் கன்று, செழுநீர்த்திரன், தேவர்குலக் கொழுந்து, பின்னிரக்கம் செய்வான் முதலான தொடர்களால் இவர் சிவபெருமானை இந்த நூலில் போற்றி மகிழ்கிறார்.
திருக்கயிலாய ஞான உலா, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, சோழர் மூவர் உலா, தில்லை உலா, இரட்டையர் பாடிய தில்லை தெய்விக உலா ஆகிய உலா நூல்கள் இந்த நூலுக்கு முன்னோடி நூல்கள்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ நாவல் பழத்தின் நிறம் கறுப்பு. இது வெள்ளை நாவல் எனக் கூறப்படுவது விந்தை
- ↑ கண்ணி 222
- ↑ கண்ணி 217, 225
- ↑ கண்ணி 428 – 435