திருவாலி அமுதனார் திருவிசைப்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவாலி அமுதனார் திருவிசைப்பா [1] திருவாலியமுதனாரால் பாடப்பட்டவை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. இந்தத் திருவிசைப்பா நான்கு பதிகங்களில் 42 இசைப்பாக்களைக் கொண்டுள்ளது. இவை தில்லையில் உள்ள நடராசப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்டவை.

இசையமைதி

'மையல் மாது' எனத் தொடங்கும் இதன் முதல் பதிகத்தில் உள்ள 11 பாடல்கள் நடராசப் பெருமானை அடிமுதல் முடிவரையில் பாதாதிகேச வருணனையாகப் பஞ்சமப் பண்ணில் அமைந்துள்ளன. 'பவளமாலை' எனத் தொடங்கும் இரண்டாம் பதிகம் 10 பாடல்களைக் கொண்டதாய் 'நட்டராகம்' பண்ணில் அமைந்துள்ளது. இவை அகத்துறைப் பாடல்கள். 'அல்லாய்ப் பகலாய்' எனத் தொடங்கும் மூன்றாம் பதிகம் 11 பாடல்களைக் கொண்டதாய் 'இந்தளம்' என்னும் பண்ணில் அமைந்துள்ளது. இது நடனக் காட்சியைக் காட்டுகிறது. 'கோலமலர்' எனத் தொடங்கும் நான்காம் பதிகம் 'பஞ்சமம்' என்னும் பண்ணில் 10 பாடல்களைக் கொண்டுள்ளது. இது அகத்துறைச் செய்திகளைக் கொண்ட பதிகம்.

பாடல் - எடுத்துக்காட்டு [2]

1
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.
2
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.
3
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே
4
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.[3]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 340. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ஒவ்வொரு பதிகத்திலும் உள்ள முதல் பாடல்
  3. எல்லாப் பாடல்களும்