திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்

திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. நூல் மூன்று ஆசிரியப்பாவால் ஆனது. அவை முறையே 56, 36, 46 அடிகள் கொண்டவை. ஞானப்பிரகாசர் அறிவித்தபடி இந்த நூல் செய்யப்பட்டதாக இந்த நூலின் இறுதியில் உள்ள அடிகள் குறிப்பிடுகின்றன.

ஆசு ஆகமம் அறைந்தது இது எனத்
தேசிக மாமணி தென் கமலாபுரி
நாசம் இல் சீர்த்தி ஞானப்ரகாசன்
அருளிய அட்டவணையின் அடைவே
பெரிதும் பயனுறப் பேசினன் அறியே. – என்பன அந்த அடிகள். [1]

நூல் விளக்கம்

  • திரிபதார்த்தம் – பாசம், பதி, பசு
  • தசகாரியம் – தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவகோகம் – என்னும் 10 படிநிலைகள்.. இவற்றை இந்த நூல் ரூபாதி தசகாரியம் எனக் கொண்டு, பெயர் சூட்டிக்கொண்டுள்ளது.

இவற்றுள் ஆன்மரூபம் முதலான சி நிலைகள் உமாபதியார் செய்த சிவப்பிரகாசத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளன. உண்மைநெறி விளக்கம் என்னும் சித்தாந்த சாத்திரம் இப் பத்தையும் கூறுவதற்கென்றே எழுந்த தனி நூல். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. தத்துவப்பிரகாசம் என்னும் பெருநூல் இவற்றை விரிவாகச் சொல்கிறது. இந்த வரிசையில் 102 பாடல்களைக் கொண்டதாய் 15 ஆம் நூற்றாண்டில் களந்தை ஞானப்பிரகாசர் செய்த தசகாரியம் என்னும் நூல் விரிந்துள்ளது. இவை அன்றிச் சைவச் சிறுநூல்கள் பலவும் உள்ளன.

தசகாரியத்தை மேலும் பிரித்துக் கூறும் நூல்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தசக்கிரமக் கட்டளை. மு. அருணாசலம் எழுதி{ஃ ‘சித்தாந்தம்’ என்னும் இதழில் வெளிவந்துள்ளது. தத்துவப் பிரகாசம் நூலிலேயே இந்த விரிந்த முறை உள்ளது. தத்துவரூபம், ஆன்மரூபம், சிவரூபம் என்னும் படிநிலைகள் ஒவ்வொன்றும் உருவம், சொரூபம், சுபாவம், விசேடம், வியாத்தி, வியாபகம், குணம், வன்னம் – என்னும் எட்டாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றை இந்த நூலில் இவை பத்தும் - சுபாவம், வியாத்தி, வியாபகம், குணம், விசேடம், ரூபகம், ரூபம், சொரூபம், தரிசனம், சுத்தி – என வரிசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ‘வன்னம்’ என்பதை இந்த நூல் ‘ரூபம்’ எனக் குறிப்பிடுகிறது. ஆன்ம தசகாரியம் என வரும்போது ‘ஆன்மலாபம்’ என்பதைச் சேர்த்து 11 என இந்நூல் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.