தாயமங்கலம்
தாயமங்கலம் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | 9°41′05″N 78°37′53″E / 9.684691°N 78.631382°ECoordinates: 9°41′05″N 78°37′53″E / 9.684691°N 78.631382°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்[4][5].
இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தபுகழ்மிக்க அம்மன் கோவில் காரணமாக இந்த ஊர் தாயமங்கலம் (அம்மா-தாய்) என பெயர் பெற்றுள்ளது. பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். இலங்கை அகதிகள் முகாம் ஒன்று இங்கு உள்ளது.
இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அருகில் உள்ள ஊர்களான இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆரம்ப சுகாதார மையம், தபால் அலுவலகம், உயர்நிலைப் பள்ளி, குழந்தைகள் நலமையம் ஆகியன இவ்வூரில் உள்ளன.
வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் தங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு கிட்டவில்லை.
முத்துச்செட்டியார் ஒரு நாள் மதுரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சின்னமன்னூரில் ஒரு பெண் குழந்தை யாரும் அருகில் இல்லாமல் தனியே அழுது கொண்டிருக்கக் கண்டார். அழுது கொண்டிருந்த குழந்தையை வாரியணைத்துக் கொண்டவர் அருகில் யாரும் அக்குழந்தைக்குரியவராகக் காணப்படாததால் அன்னை மீனாட்சித் தன் மேல் இரக்கம் கொண்டு அக்குழந்தையைத் தனக்காகவே அனுப்பியுள்ளதாக எண்ணித் தானே கூட்டிக் கொண்டுபோய் வளர்க்க எண்ணினார்.
குழந்தையைக் கூட்டிக் கொண்டு வரும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவர் ஆற்றின் கரையில் குழந்தையை இருக்கச் செய்து விட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கினார். குளித்து முடித்து திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. சுற்றுமுற்றும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் தாளாத துயருடன் வீடு சென்றவர் தன் மனைவியிடம் நடந்த விவரத்தைக் கூறி வருந்தினார். துயரத்தினால் உண்ணாமல் உறங்கிக்கொண்டிருந்த அவரது கனவில் அக்குழந்தை வந்து தான் கள்ளிக்காட்டில் உறைவதாகவும் அவ்விடத்தில் தனக்கு சிலை செய்து வைத்து வணங்கும்படியும் தெரிவித்தது. குழந்தையைத் தோளில் சுமந்து சென்றபோது அக்குழந்தை அவரிடம் அவர் பெயருடன் அம்மன் பெயரையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதால் அம்மனுக்கு "முத்துமாரி" என பெயரிடப்பட்டது. அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆற்று மணலைக் கொண்டு அம்மன் சிலை செய்யப்பட்டு கூரை வேயப்பட்ட ஒரு சிறு கோவிலுக்குள் வைத்து வணங்கப்பட்டது.
இந்த அம்மனை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. செல்வந்தர்களிடமிருந்தும் அயல்நாட்டினரிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடையால் கோவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருங்கல்லான அம்மன் சிலையும் கோவிலும் 1914ல் உருவானது.
ஏழு தலைமுறையாக முத்துச்செட்டியார் வழிவந்தவர்கள் இக்கோவிலைப் பராமரித்து வருகிறார்கள். அவ்வழி வந்த திரு என். எ. முத்துப்பால் செட்டியார் என்பவர் 1-12-1967 இல் இந்து சமய அறக்கட்டளை வாரியம் மற்றும் மதுரை ஆட்சியாளரால் (1180/68 சட்டப்படி) கோவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு 3-4-2001 தனது மறைவு வரை பொறுப்பிலிருந்தார். அதன் பிறகு 4-4-2001 இல் அவரது மகன் வெங்கடேசன் செட்டியார் பரம்பரைவழி அறங்காவலராக இந்து சமய அறக்கட்டளை வாரியத்தால் நியமிக்கப்பட்டார். இக்கோவில் விலக்களிக்கப்பட்டக் கோயிலாக 1934 ஆம் ஆண்டில் 2286(a.O. 327/34) தேதி செப்டம்பர் 19 -ஆணையின் படி, சென்னை வாரிய ஆணையரால் அறிவிக்கப்பட்டது.
திருவிழா
இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோவிலில் வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி 15ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மிக விமரிசையாக திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்கள் கொண்ட திருவிழாவில் தேரோட்டம் மிகவும் சிறப்பான வைபவம் ஆகும். தேரோட்டத்தின் பொழுது முத்துமாரிஅம்மன் அமர்ந்திருக்கும தேரை அப்பகுதி வாழ் யாதவர்கள் ஓட்டிச்செல்வர். அப்பொழுது யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படும்.
திருவிழா சமயத்தில் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
- முத்துமாரியம்மன் கோவில்[1] பரணிடப்பட்டது 2011-09-05 at the வந்தவழி இயந்திரம்
- [2]