தம்பிலுவில்
தம்பிலுவில் | |
---|---|
கிராமம் | |
தம்பிலுவில் கடற்கரை | |
ஆள்கூறுகள்: 7°08′0″N 81°51′0″E / 7.13333°N 81.85000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கீழை |
மாவட்டம் | அம்பாறை |
தம்பிலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. கிழக்கிலங்கையில் நாட்டுக்கூத்துக் கலைக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் ஒன்று.
இதன் எல்லைகளாக வடக்கே அக்கரைப்பற்று, தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம்.
வரலாறு
இன்றைய திருக்கோவில் உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் [1] இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
உகந்தையைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" [2] என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.
புள்ளிவிவரங்கள்
கிழக்கே வங்கக் கடலையும் தெற்கே பெரியகளப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு தம்பிலுவில் கிராமம், 5.05 சதுர கி.மீ பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இதன் உள்ளூர்ப் பகுதிகள், முனைக்காடு, தில்லங்குழி, பள்ளவெளி, கனகர்நகர், மணற்காடு முதலியனவாகும். 2686 குடும்பங்களைக் கொண்ட 8937 குடியிருப்பாளர்களில், (2009 சனத்தொகை மதிப்பீடு) 99.55 விழுக்காட்டினர் சைவர்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். பிரதான தொழில்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறுபான்மை மீன்பிடியும் குடிசைக் கைத்தொழில்களும் நடத்தப்படுகிறது. அரச தொழில்களில் ஈடுபடுவோரும் கணிசமான அளவு உள்ளனர்.
கோயில்கள்
மட்டக்களப்பு பிராந்தியத்தில் புகழ்பெற்ற கண்ணகி வழிபாட்டைப் பேணிக் காக்கும் ஆலயங்களில் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்று. இதுதவிர இங்கு காணப்படும் சைவக் கோவில்கள் வருமாறு:
- தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்
- தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
- தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் ஆலயம்
- தம்பிலுவில் முனையூர் காளி அம்மன் ஆலயம்
- தம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்
- தம்பிலுவில் காயத்திரி தபோவனம்
சமயம் சார்ந்து ஆன்மிகப் பணிகளைச் செய்யும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமும், தம்பிலுவில் சத்தியசாயிபாபா சேவா சமிதியும், அக்கரைப்பற்று தெற்கு இந்துமாமன்றமும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அணியும், இங்கு மேலும் குறிப்பிடத்தக்கன.
கல்வி
கல்விக்குப் புகழ்பெற்ற கிழக்கிலங்கைக் கிராமங்களில் இது ஒன்றாகும். முன்பு இங்கு குருகுலக் கல்வி முறையே காணப்பட்டதாகவும், அந்த மரபின் தொடர்ச்சியே கப்புகனார் கண்ணப்பர் (17ஆம் நூற்றாண்டு, மழைக்காவியம் பாடியவர்), கணபதி ஐயர் (கண்டியை இவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்று இவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர்.), பின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்பித்த பண்டிதர் குஞ்சித்தம்பி (19ஆம் நூற்றாண்டு), மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும் உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது என்று கூறுவதுண்டு.
1877ஆமாண்டு மெதடிஸ்த திருச்சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட மட்/ மெதடிஸ்தமிசன் ஆண்கள் பாடசாலை (இன்றைய சரஸ்வதி வித்தியாயலயம்) இவ்வூருக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பெருமை கொண்ட பாடசாலை. பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆங்கிலேய மிஷனரிகளால் முன்னெடுக்கப்பட்ட "பெண்களுக்கும் கல்வி" என்ற திட்டமானது, இவ்வூரில் 1879ஆமாண்டு ஆரம்பிக்கப்பட்ட 78 மாணவிகளைக் கொண்ட பெண்கள் பாடசாலை மூலம், (இன்றைய கலைமகள் வித்தியாலயம்) மட்டக்களப்புத் தென் பகுதியில் வெற்றி பெற்றுவிட்டதாக, அக்கால திருச்சபைக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.[3] தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் இப்பகுதியில், கல்வியிலும் விளையாட்டிலும் இன்றும் பெயர்சொல்லும் பலரை உருவாக்கிய - உருவாக்குகின்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இவ்வூரிலுள்ள ஏனைய பாடசாலைகள்:
- தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம்
- தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்
- தம்பிலுவில் அருணோதய வித்தியாலயம்
- தம்பிலுவில் கனக நகர் வித்தியாலயம்
- தம்பிலுவில் முனையூர் அ.த.க. பாடசாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- தம்பிலுவில் வலைத்தளம் பரணிடப்பட்டது 2021-05-15 at the வந்தவழி இயந்திரம்
- 2011இல் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பான கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி காணொளி பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம்