தமிழ் ஒலி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் ஒலி
இதழாசிரியர்ச. உமாகாந்தன்
முன்னாள் இதழாசிரியர்கள்தம்பிஐயா தேவதாஸ்
வகைவானொலி
இடைவெளிகாலாண்டிதழ்
முதல் வெளியீடுசனவரி 1982
நாடுஇலங்கை
மொழிதமிழ்

தமிழ் ஒலி வானொலி சஞ்சிகை 1982 சனவரியிலிருந்து 1986 சூன் வரை இலங்கையில் வெளியான காலாண்டு இதழ் ஆகும். இவ்விதழ் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றத்தின் சார்பில் ச. உமாகாந்தன் என்பவரால் வெளியிடப்பட்டது.

வரலாறு

1981 ஆம் ஆண்டு வெரித்தாசு வானொலி தமிழ்ப்பணி ஒலிபரப்புக்கு பொறுப்பாக இருந்த எம். ஏ. சுவாமி (மடலைமுத்து ஆரோக்கியசாமி) அவர்களின் ஊக்குவிப்பினால் இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்[1] உருவானது. இதன் அமைப்புச் செயலாளராக ச. உமாகாந்தன் செயற்பட்டார். உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புகளை மக்கள் மத்தியில் பரவச் செய்வது மன்றத்தின் நோக்கமாக இருந்தது.

இந்த நோக்கத்துடன், மன்றம் உறுப்பினர்களைச் சேர்த்தது. முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் இலங்கையில் ஏனைய பகுதிகளிலிருந்தும் உறுப்பினர் சேர்ந்தனர். தமிழ்ப்பணி ஒலிபரப்பு, பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழோசை ஒலிபரப்பு ஆகியவை அளித்த ஒத்துழைப்பினால் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், செருமனி ஆகிய நாடுகளிலிருந்தும் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்ந்தனர்.

சேவை

இவ்வாறு பரந்து விரிந்திருந்த உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கும் பொருட்டு தமிழ் ஒலி காலாண்டு சஞ்சிகை வெளியிடப்பட்டது.

தமிழ் ஒலி சஞ்சிகையின் முதலாவது இதழ் 1982 சனவரி 14 அன்று அப்போது யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயராக இருந்த பேரருட்திரு தியோகுப்பிள்ளை ஆண்டகையால் வெளியிட்டு வைக்கப்பட்டது.[2]

தமிழ் ஒலி சஞ்சிகையில் பொதுவாக வானொலி ஒலிபரப்புகள் தொடர்பாகவும், சிறப்பாக தமிழ் வானொலி ஒலிபரப்புகள் தொடர்பாகவும் கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், கேள்வி-பதில் போன்ற அம்சங்கள் வெளியாகின. ஆரம்பத்தில் சஞ்சிகையின் ஆசிரியராக இலங்கையில் பிரபல எழுத்தாளராகவும், வானொலி ஒலிபரப்பாளராகவும் புகழ் பெற்ற தம்பிஐயா தேவதாஸ் செயற்பட்டார். அவரின் சொந்த பணிகள் காரணமாக தொடர முடியாமற்போனதனால் ச. உமாகாந்தன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் செயற்பட்டார்.

சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பது எப்படி?, வானொலிக்கு எழுதுவது எப்படி? போன்ற வானொலி தொடர்பான அறிவூட்டல் கட்டுரைகள், வானொலி ஒலிபரப்பாளர்களின் நேர்காணல்கள், வானொலிகளில் ஒலிபரப்பான பயனுள்ள தகவல்களை பிரசுரித்தல், வானொலிகளின் நிகழ்ச்சி அட்டவணை என்பவற்றோடு உறுப்பினர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களின் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகியனவும் தமிழ் ஒலி சஞ்சிகையில் வெளியாகின.

நிறைவு

1986 ஆம் ஆண்டு சூன் இதழின் பின் நாட்டு நிலைமை காரணமாக சஞ்சிகை வெளியீட்டுக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர் பலர் தொடர்ந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டதால் வெளியீடு இடைநிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
தமிழ்_ஒலி
இதழ்கள் உள்ளன.
  1. தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்
  2. "தமிழ் ஒலி மன்றம் பற்றியும் சஞ்சிகை பற்றியும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் அறிமுக அறிவிப்பை செவிமடுக்க". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_ஒலி_(இதழ்)&oldid=14881" இருந்து மீள்விக்கப்பட்டது