டி. வி. நாராயணசாமி
நடிகமணி டி.வி.என் என அழைக்கப்பட்ட டி. வி. நாராயணசாமி (D. V. Narayanaswamy, 21, ஆகத்து, 1921 - 22, நவம்பர், 2000) என்பவர் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், அரசியல்வாதி ஆவார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோரை கா. ந. அண்ணாதுரைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.[1] கலையுலகில் இவரது பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்தது.
வாழ்க்கை
டி. வி. நாராயணசாமி பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் எட்டையபுரம் அருகே உள்ள சிந்தலைக்கரை துரைசாமிபுரத்தில் 1921 ஆகத்து 21 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் கிராம முனிசீப் வீரப்பன், வேளம்மாள் இணையராவர். எட்டையபுரம் இளைய மன்னர் காசி விசுவநாத பாண்டியனின் தேவராஜ ஜெகதீச பால கான சபா என்னும் நாடக்குழுவில் டி. வி. நாராயணசாமி தன் பத்தாவது வயதில் இணைந்தார். பின்னர் டி. கே. எஸ் நாடகக் குழுவில் இணைந்தார். அவ்வை டி. கே. சண்முகம் இவரை தேர்ந்த நடிகராக்கினார்.[2]
அப்போது அவ்வை டி.கே. சண்முகத்தின் நாடகங்கள் பற்றி நல்ல விமர்சனங்களை அண்ணா எழுதிவந்தார். அவற்றைப் படித்துப் பார்த்த டி. வி. நாராயணசாமி 1940 இல் ஈரோடு குடியரசு அலுவலகத்தில் பெரியாரையும், அண்ணாவையும் சந்தித்தார். அண்ணாவிடம் உங்கள் எழுத்து கலை நயத்தோடு இருக்கிறது. நீங்கள் நாடகம் எழுதி, அதில் நான் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார். பின்னர் அண்ணா காஞ்சி திராவிட நடிகர் கழகம் தொடங்கினார். பின்னர் அண்ணா தன்னை கலை உலகைப் பற்றியும் சிந்திக்கவைத்தவர் என்று டி.வி.என்னைப் புகழ்ந்தார்.[2]
1944 பெப்ரவரி 19 அன்று கும்பகோணத்தில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த திராவிட மாணவர் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு அண்ணாவைச் சந்தித்தார். அண்ணா இவரை மாநாடில் அறிமுகம் செய்துவைத்தார். 1945 திசம்பர் 15 அன்று சென்னை செயிட்மேரிஸ் மண்டபத்தில் சுயமரியாதை மாநாடு நடந்தது. அதில் அண்ணாவின் சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் நாடகம் பெரியாரின் தலைமையில் அரங்கேறியது. அதுவரை நாடகங்களில் பெண் பாத்திரங்களை ஏற்றுவந்த கணேசன் சிவாஜி வேடத்தில் நடிக்க, அண்ணா காகபட்டராகவும், டி. வி. நாராயணசாமி சந்திரமோகனாகவும் நடித்தனர். அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியாரின் பாராட்டுதலைப் பெற்று அதன் பிறகு கணேசன் சிவாஜி கணேசனாக ஆனார்.
திரைப்பட வாழ்வு
சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் சந்திரோதயம் நாடகம் நடைபெற்றது. அதில் அண்ணாவும், டி. வி. நாராயணசாமியும் நடித்தனர். அப்போது திரைப்படங்களில் நடிக்க டி. வி. நாராயணசாமிக்கு உதவுமாறு என். எஸ். கிருஷ்ணனிடம் அண்ணா பிரிந்துரைத்தார். அதன் பிறகு ஜுபிடர் பிக்சர்சில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை என்.எஸ். கிருஷ்ணன் நாராயணசாமிக்குப் பெற்றுத் தந்தார்.[2]
1950 ஆம் ஆண்டு ஏ. வி. எம் நிறுவனத்தின் பல படங்களில் நடிக்க நாராயணசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பராசக்தி (திரைப்படம்) படத்தில் மேடைப் பேச்சாளராக நடித்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அரசியல் வாழ்வு
1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு டி. வி. நாராயணசாமி சிறை சென்றார். 1967 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்துக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு. க சார்பில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட டி. வி. நாராயணசாமி கட்சியால் தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் கூட்டணிக் கட்சியான தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சிவஞானம் அத்தொகுதியில் போட்டியிட விரும்பியதால் டி. வி. நாராயணசாமி அத்தொகுதியை விட்டுக்கொடுத்தார்.[2]
வகித்த பதவிகள்
- தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் (1968 - 1974)
- தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்
- அரசு பொதுமருத்துவமனை ஆலோசனைக் குழுத் தலைவர்
- தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர்
- மத்திய சங்கீத நாடக அகாடமி பொதுக்குழு உறுப்பினர்
குடும்பம்
1946 திசம்பர் முதல் நாளன்று டி. வி. நாராயணசாமிக்கும் எஸ். எஸ். ராஜேந்திரனின் தங்கை பாப்பம்மாளுக்கும் திருச்சி திருவரங்கத்தில் சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பாரதிதாசன் தலைமை தாங்கினார்.[2] அதே மேடையில் அண்ணாவின் தலைமையில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கும் திருவனந்தபுரம் பங்கஜ குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது.[2] டி. வி. நாராயணசாமி, பாப்பம்மாள் இணையருக்கு இராணி என்ற மகள் உண்டு. இராணியை இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஜி. இராமகிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்துவித்தார்.[3]
2000 நவம்பர் 22 அன்று தன் 70வது வயதில் முதுமைகாரணமாக டி. வி. நாராணயசாமி இறந்தார்.[2]
நடித்த திரைப்படங்கள் சில
- பராசக்தி மேடைப் பேச்சாளராக
- இரட்டை மனிதன்
- மாமியார் மெச்சின மருமகள்
- சிவகெங்கைச் சீமை
- துளி விசம்
- அவன் பித்தனா
- காஞ்சித்தலைவன்