சை. பீர் முகம்மது
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சை. பீர் முகம்மது |
---|---|
பிறப்புபெயர் | பீர் முகம்மது |
பிறந்ததிகதி | 11 சனவரி 1942 |
பிறந்தஇடம் | கோலாலம்பூர், மலேசியா |
இறப்பு | செப்டம்பர் 26, 2023 | (அகவை 81)
தேசியம் | மலேசியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர், திறனாய்வாளர் |
துணைவர் | சமாரியா |
பிள்ளைகள் | 4 ஆண்கள், 1 பெண் |
சை. பீர் முகம்மது (11 சனவரி 1942 – 26 செப்டம்பர் 2023)புகைப்படத்திற்கு நன்றி selliyal.com[1] மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்; ஞானாசிரியன் எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். திறனாய்வாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ் இளைஞர் மணி மன்றம் முதலிய சமுதாய இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் என்ற அடிப்படையிலும் அறியப்பட்டவர்.
இளமைக் காலம்
இரண்டாம் உலகப் போரின்போது மலேசியாவை ஆக்கிரமித்து யப்பான் ஐந்தாண்டுகள் ஆண்ட காலத்தில் பீர்முகமது பிறந்தார். சிறுவயதில் யப்பானிய வீரர்களின் கூடாரத்தில் கிடைக்கும் உணவை உண்டு வாழ்வைக் கழித்த அனுபவம் இவருக்கு உண்டு. இவரது தந்தை சயாம் மரண இரயில்பாதை அமைக்க பிடித்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் இவரின் தாயாரும் இறந்தார். ஏழுவயதில் உணவகத்தில் தட்டுக்களை கழுவும் வேலைப் பார்த்தார்.[2]
எழுத்துத் துறை ஈடுபாடு
இவர் 1959 முதல் சுமார் ஐந்து தசாப்த்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், திறனாய்வுகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை 1961-இல் சிங்கப்பூரின் மாணவன் இதழில் வெளிவந்தது. மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டில் "புதிய பார்வை", "கணையாழி", "கலைமகள்", "ஓம் சக்தி" போன்ற இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
இவரால் எழுதப்பட்ட நூல்களில் சில வருமாறு
- வெண்மணல் (சிறுகதைத் தொகுப்பு)
- பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்
- சந்ததிகளும் இரப்பர் உறைகளும்
- அக்கினி வளையங்கள்
- பெண் குதிரை (நாவல் - 1997)
- கைதிகள் கண்ட கண்டம் (பயணக் கட்டுரை - 1997)
- மண்ணும் மனிதர்களும் (பயணக் கட்டுரை - 1998)
- வேரும் வாழ்வும் - பாகம் 1 (1999)
- வேரும் வாழ்வும் - பாகம் 2 (2001)
- வேரும் வாழ்வும் - பாகம் 3 (2001)
- மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (தொகுப்பாசிரியர், 2001);
- திசைகள் நோக்கிய பயணங்கள் (கட்டுரை, 2006)[3]
வேரும் வாழ்வும்
வேரும் வாழ்வும் என்பது மலேசிய எழுத்தாளர்களின் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு நூலாகும். இதன் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்த தொகுதிகள் மூலம் மலேசியா சிறுகதை இலக்கியப் பரப்பினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இலக்கியப் பணி
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்கி வரும் இவர் பல மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை நூலுருவாக்க உதவியுள்ளார். அத்துடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இதழாசிரியர்
மலேசியாவிலிருந்து வெளிவந்த "உதய சக்தி" என்னும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பரிசுகளும் விருதுகளும்
- "செந்தமிழ் மாமணி" (1998); சென்னை தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கியது.
- "எழுத்துச் செம்மல்"; பழனி தமிழ் நாட்டுக் கவிஞர் பேரணி வழங்கியது.
- தங்க விருதும் தமிழ்ச் செம்மல் விருதும் தமிழ் நாட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது
- பணமுடிப்பு (1996); பாரதிதாசன் விழாக் குழுவினர் வழங்கியது
- "மணிச்சுடர்"; பினாங்கு மணிமன்றம் வழங்கியது
- கோ. சாரங்கபாணி விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1984). வழங்கியது
- தான்சிறீ ஆதிநாகப்பன் விருது 2007
மேற்கோள்கள்
- ↑ "மலேசிய எழுத்தாளர் சை.பீர் முகம்மது காலமானார்". தமிழ் முரசு. 26 செப்டம்பர் 2023. https://www.tamilmurasu.com.sg/world/story20230926-137691. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2023.
- ↑
- ↑ "சை.பீர்முகம்மது பத்திகள்: அலை வரையும் கோலம்". வல்லினம். https://vallinam.com.my/version2/?p=6438. பார்த்த நாள்: 26 September 2023.
- சை. பீர் முகம்மது பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்