சேதுபதி (2016 திரைப்படம்)
சேதுபதி | |
---|---|
இயக்கம் | எஸ். உ. அருண் குமார் |
தயாரிப்பு | சான் சுதர்சன் |
கதை | எஸ். உ. அருண் குமார் |
இசை | நிவாஸ் கே. பிரசன்னா |
நடிப்பு | விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் |
ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | வாசன் மூவீஸ் |
விநியோகம் | ஆரஞ்சு கிரியேஷன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 19, 2016 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சேதுபதி(Sethupathi) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி பரபரப்பூட்டும் அதிரடித் திரைப்படம் ஆகும்.[1][2] இத்திரைப்படம் எஸ். உ. அருண் குமாரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது, வாசன் மூவீஸ் நிறுவனத்திற்காக, சான் சுதர்சன் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.[3][4] இத்திரைப்படம் உலகளவில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியான வெற்றியையும் பெற்றுள்ளது.[5] இத்திரைப்படம் தெலுங்கில் புதுமுகம் காந்த ரவி நடிக்க ஜெயதேவ் என்பரால் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
கதைக்களம்
மதுரையிலிருந்து வரும் சேதுபதி (விஜய் சேதுபதி) ஒரு நேர்மையான காவல் ஆய்வாளர். இவர் தனது பணியில் காவல் உதவி ஆணையர் பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கொலை தொடர்பான வழக்கை கையிலெடுக்கிறார். சுப்புராஜ் பணியிலிருக்கும் போது சில குண்டர்களால் வெட்டப்பட்டுள்ளார். ஆனால், கொலையாளிகளின் இலக்கு சுப்புராஜ் அல்ல. உண்மையில், சேதுபதி காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கனகவேல் தான் கொலையாளிகள் தேடி வந்த நபர் ஆவார். கனகவேல் கொலை நடந்த நாளன்று பணிக்கு வராததால், வேறொரு காவல் நிலையத்திலிருந்து பணிக்கு வந்திருந்த சுப்புராஜ் மாற்றுப்பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். சேதுபதி கொலைக்குக் காரணமான நபராக அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாதா மற்றும் வாத்தியார் என்றழைக்கப்படும் அரசியல்வாதி (வேல ராமமூர்த்தி) இருப்பதைக் கண்டறிகிறார். கனகவேல் வாத்தியாரின் மகளைத் திருமணம் செய்துள்ளார். ஆனால், இந்தத் திருமண வாழ்வு வாத்தியாரின் மகளுக்கு விருப்பமான வாழ்வாக இல்லை. ஒரு நிலையில் வாத்தியார் கனகவேலைக் கொலை செய்ய முயல்கிறார். சேதுபதி வாத்தியாரை ஒரு கோயில் திருவிழாவின் போது கைது செய்து சென்னைக்குப் பயணம் செய்ய வைக்கிறார். அவர் தனது பிணைக்காக காத்திருக்கச் செய்து அவரது பகைமையைச் சம்பாதிக்கிறார்.
பிறகு, சேதுபதி இரண்டு பள்ளி வயது குமரப்பருவ மாணவர்களை ஒரு சங்கிலி பறிப்பு வழக்குக்காக விசாரணை செய்கிறார். அவர்கள் பேச மறுக்கும் போது சேதுபதி ஐந்து எண்ணிக்கைக்குள் அவரைச் சுட்டு விடுவதாக மிரட்டுகிறார். ஐந்து எண்ணி முடிக்கும் போது, அவர் ஒரு பையனைச் சுட்டு விடுகிறார். அவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். சேதுபதி கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். இருப்பினும், சேதுபதி இரண்டு மாணவர்களில் யாரையும் கொலை செய்யும் எண்ணம் கொண்டிருக்காத நிலையில், மூடிய நிலையில் இருப்பதாகத் தான் கருதிக்கொண்டு கையில் வைத்திருந்த தனது துப்பாக்கியை யாரோ திறந்து வைத்திருப்பதாக உணர்கிறார். விரைவில் கனகவேல் அந்தத் துப்பாக்கியைத் திறந்து வைத்திருப்பதைக் கண்டறிகிறார். கனகவேல் அந்தத் துப்பாக்கியை மாற்றி வைத்துள்ளார். வாத்தியாரை நிரந்தரமாக சிறையில் வைத்து விட்டால் தான் தனது மனைவியுடன் இணக்கமாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் கனகவேல் இவ்வாறு செய்கிறார். சேதுபதியும் அவரது உயர் அதிகாரியும் இணைந்து விசாரணையில் சேதுபதி மீது தவறில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். விசாரணைக் குழுவில் உள்ள ஒருவர் வாத்தியாரின் அணியில் இருந்து கொண்டு சேதுபதியைக் குற்றவாளியாக முயல்கிறார். இருப்பினும், வாத்தியாரின் இரட்டை நிலை புரிய வைக்கப்பட்டு சேதுபதி குற்றமற்றவராக விடுவிக்கப்படுகிறார். சேதுபதிக்கான இடைஞ்சல்கள் இத்துடன் முடியவில்லை. வாத்தியார் கனகவேலை உயிருடன் எரித்து விட்டு சேதுபதியையும் அவருடைய குடும்பத்தையும் குறி வைக்கிறார். வாத்தியார் மற்றும் அவரது அடியாட்களால் நிகழ்த்தப்படும் அனைத்துத் தடைகளையும் வென்று விடுகிறார். சேதுபதியின் குடும்பத்தை அழிப்பதே சேதுபதியைப் பழிவாங்க சரியான வழி என்று கருதும் வாத்தியார் அதற்காகத் தனது அடியாட்களை அனுப்பி வைக்கிறார். சேதுபதியின் மகன் தனது தந்தை சொல்லிக் கொடுத்தவாறு துப்பாக்கியைக் கையாளத் தெரிந்திருந்ததால், அடியாட்களைத் துரத்தி விடுகிறான். இந்தத் தோல்வியால் மனமொடிந்த வாத்தியார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பையனைக் கொன்று பழியைச் சேதுபதி மீது சுமத்த முயற்சிக்கிறார். இருப்பினும், சேதுபதி, வாத்தியாரின் திட்டமறிந்து, மருத்துவமனையில் வாத்தியாரின் அடியாட்களிடமிருந்து பள்ளி மாணவனைக் காப்பாற்றுகிறார்.
சேதுபதி மீண்டும் பணிக்கு வரும் போது வாத்தியாரின் அடியாட்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர். வாத்தியாரை மதுரையை விட்டு ஓடிவிட அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வாத்தியார் அதைக் கருத்திற்கொள்ளவில்லை. சேதுபதி வாத்தியாரின் வீட்டிற்குத் தீ வைத்து அவரைக் கொல்வதாகப் படம் முடிகிறது.
நடிப்பு
- காவல் ஆய்வாளர் கா. சேதுபதியாக விஜய் சேதுபதி
- சேதுபதியின் மனைவியாக ரம்யா நம்பீசன்
- வாத்தியாராக வேல இராமமூர்த்தி
- செண்பக மூர்த்தியாக லிங்கா
- விவேக் பிரசன்னா
- மாறனாக செல்வன் ராகவன்
- செல்வி தனுஷ்ரா
- முருகானந்தம்
- கருப்பு நம்பியார்
- பிரான்சிஸ்
- முருகன்
- டிகேஎஸ்
- சந்தானலட்சுமி
மேற்கோள்கள்
- ↑ "Sethupathi Review: One More Feather in Sethupathi's Hat". The New Indian Express. 27 June 2016.
- ↑ "Sethupathi: A good thriller, a better family drama". The Hindu. 27 June 2016.
- ↑ "Remya to romance Vijay Sethupathi, again". The Times of India. 28 March 2015.
- ↑ "Vijay Sethupathi plays honest policeman in Sethupathi". The New Indian Express. 23 September 2015.
- ↑ "After the success of 'Sethupathi' Will Vijay stop doing 'offbeat films'?". firstpost.com. 26 June 2016.