சுவேதா பாசு பிரசாத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சுவேதா பாசு பிரசாத் (Shweta Basu Prasad) (பிறப்பு சனவரி 11, 1991) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தனது சிறுவயதிலேயே சில இந்தித் திரைப்படங்களிலும், சில தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின் வங்காளம், தெலுங்கு மற்றும் தமிழகத் திரைப்படத்துறை போன்ற திரைப்படத் துறைகளின் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் இவர் நடித்த மக்தீ எனும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

சுவேதா பாசு பிரசாத் சனவரி 11,1991 இல் ஜம்சேத்பூரில், பீகார் (தற்போது சார்க்கண்ட் மாநிலம்) பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவருடைய பெற்றோர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தனர்.[1] இவருடைய தந்தை அனுஜ் பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தாய் சர்மிஷ்தா பிரசாத் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

சுவேதா பாசு பிரசாத்தின் தாத்தா, புது தில்லியில் உள்ள புலனாய்வுத் துறையில் புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தந்தை புதுதில்லியிலுள்ள ஸ்ரீராம் மையத்தில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். சுவேதா மும்பையிலுள்ள ஆர். என். போடார் உயர்நிலைப்பள்ளியில் வணிகம் பயின்றார். தனது தாயின் பெயரான பாசு என்பதனை திரைப்படத் துறைக்காகத் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார்.[2]

தொழில் வாழ்க்கை

2002 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார்.[1] விஷால் பரத்வாஜ் இயக்கிய மக்தீ எனும் திரைப்படத்தில் சுவேதா இருவேடங்களில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார்.[3] மேலும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் கஹானி கர் கர் கீ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஸ்ருதி எனும் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

2005 ஆம் ஆண்டில் இக்பால் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கதிஜா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருதினை ஐந்தாவது சர்வதேச கராச்சி திரைப்படத் திருவிழாவில் பெற்றார்.[4]

கோதா பங்காரு லோகம் எனும் இவரின் முதல் தெலுங்குத் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடித்தார். இதில் வருண் சந்தேஷ் உடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]

சுவேதா பாசு ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்திய மரபார்ந்த இசை பற்றிய ரூட்ஸ் (வேர்கள்) எனும் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அதில் மரபார்ந்த இசை உலகின் பற்றுதியாளர்களாகக் கருதப்படும் சிவகுமார் சர்மா, ஏ. ஆர். ரகுமான், குல்சார், விஷால் பரத்வாஜ், சுபா முத்கல், எல். சுப்பிரமணியம் போன்றவர்களின் இசைப்பயணம் இருந்தது.[5]

தமிழ்த் திரைப்படம்

2011 ஆம் ஆண்டில் ரா ரா எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதனை சாண்டில்யன் இயக்கினார். உதயா, சுவேதா பாசு பிரசாத் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[6] இந்தப் படத்தின் தலைப்பானது சென்னையில் உள்ள ராயபுரம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.[7] திசெம்பர், 2010 இல் துவங்கப்பட்ட இத் திரைப்படம் அக்டோபர் 7, 2011 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[7] இந்தத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.[8]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுவேதா பிரசாத்

"https://tamilar.wiki/index.php?title=சுவேதா_பாசு_பிரசாத்&oldid=22826" இருந்து மீள்விக்கப்பட்டது