சீலன் கதிர்காமர்

சீலன் கதிர்காமர்
Silan Kadirgamar
SeelanKathigamar.jpg
முழுப்பெயர் சாந்தசீலன்
கதிர்காமர்
பிறப்பு 11-04-1934
பிறந்த இடம் சாவகச்சேரி,
இலங்கை
மறைவு 25-07-2015
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
அரசியல்வாதி
படித்த கல்வி இலங்கைப் பல்கலைக்கழகம்
நிறுவனங்கள் பன்னாட்டு கிறித்தவப்
பல்கலைக்கழகம்
பணி கல்விமான்
வாழ்க்கைத் சகுந்தலா
துணை


சீலன் கதிர்காமர் (Silan Kadirgamar, 11 ஏப்ரல் 1934 - 25 சூலை 2015) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும், இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

சாந்தசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட சீலன் கதிர்காமர் 1934 ஏப்ரல் 11 இல் இலங்கையின் வடக்கே சாவகச்சேரியில் வண. ஜெ. டபிள்யூ. ஏ. கதிர்காமர், கிரேசு நேசம்மா இட்ச்கொக் ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்ப காலத்தில் மலாயாவில் வாழ்ந்து 1941 முதல் 1945 வரை சிரம்பானில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் 1946 ஏப்ரலில் இலங்கை திரும்பி யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1959 இல் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பேராதனையில் மாணவராக இருக்கும் போது இடதுசாரி அரசியலில் தீவிரமாக இறங்கி, லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவாளரானார்.

கதிர்காமர் சகுந்தலா அரசரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு அஜயன், அகிலன் என்ற இரு புதல்வர்கள் உள்ளனர். சீலன் கதிர்காமர் லக்சுமன் கதிர்காமரின் உறவினர் ஆவார்.

பணி

கதிர்காமர் யாழ்ப்பாணக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரை வரலாறு, அரசியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் 1970 முதல் 1978 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1974 இல் சப்பான் சென்று அங்குள்ள பன்னாட்டு கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1979 இல் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மூத்த விரிவுரையாளரானார். 1982 முதல் வரலாற்றுத் துறைத் தலைவரானார். 1979 இல் யாழ்ப்பாணத்தில் "இலங்களுக்கிடையே சமத்துவம் மேணும் இயக்கத்தின்" (Movement for Inter-Racial Justice and Equality, MIRJE) கிளை ஒன்றை ஆரம்பித்தார். 1981 இல் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பிரசைகள் குழுவை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்து பணியாற்றினார். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "சற்றடே ரிவியூ" என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவியவர்களில் சீலன் கதிர்காமரும் ஒருவர்.

1983 முதல் 2000 ஆம் ஆண்டு வரை சப்பானில் தோக்கியோ-யோக்கோகாமா நகரங்களில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அரசியலில்

சீலன் கதிர்காமர் இடது விடுதலை முன்னணியின் வேட்பாளராக 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். இக்கட்சியின் உறுப்பினர்கள் எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினராக தெகிவளை-கல்கிசை மாநகரசபைக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சீலன் கதிர்காமர் 2015 சூலை 25 இல் சில காலம் சுகவீனமுற்ற நிலையில் 2015 சூலை 25 இல் கொழும்பில் காலமானார்.

எழுதிய நூல்கள்

  • The Jaffna Youth Congress (1980)
  • Handy Perinbanayagam: A Memorial Volume (1980, Handy Perinbanayagam Commemoration Society)
  • Ethnicity: Identity, Conflict and Crisis, (1989, Arena Press, co-editor Kumar David)
  • The Left Tradition in Lankan Tamil Politics (2001, in Hector Abhayavardhana Felicitation Volume)
  • Jaffna Youth Radicalism – The 1920s and 1930s (2009, in Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka)
  • The Tamils of Lanka: Their Struggle for Justice and Equality with Dignity (2010)<
  • Handy Perinbanayagam: A Memorial Volume (2012, Kumaran Book House)
  • The Jaffna Youth Congress (2013, Kumaran Book House)
  • Landmarks in the History of the Left: 1935-1980 (2014, in Pathways of the Left in Sri Lanka)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சீலன்_கதிர்காமர்&oldid=2639" இருந்து மீள்விக்கப்பட்டது