சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்

மூலவர்: லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்)
தாயார்: கனகவல்லித் தாயார்
உற்சவர்: பிரகலாத வரதன்
புராண பெயர்: கிருஷ்ணாரன்யஷேத்ரம்
பழைமை: 1000 முதல் 2000 ஆண்டுகள்
தல விருட்சம்: ஆல மரம்
தீர்த்தம்: ஜமதக்கினி தீர்த்தம் இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்
வழிபாட்டு நேரம் காலை 7.30 மணி முதல் 121 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி

வரை

கோவில் விழாக்கள்: சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா,

மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி,
ஐப்பசியில் பவித்ர உற்சவம்,
வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி,

அமைவிடம்: சிங்கிரிக்குடி
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் (அ) சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. இங்கே பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில், புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில், புதுச்சேரி பகுதியான அபிஷேகப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது.[1] மே மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா இங்கு மிகச் சிறப்பாக நடைபெறும்.

அட்ட நரசிம்ம தலங்கள்

இரண்யனின் துன்புறுத்தலைக் கண்டு அஞ்சி நாட்டை விட்டு அகன்று காட்டில் ஒளிந்து வாழ்ந்த தவயோகிகள், தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் நரசிம்ம அவதாரமெடுத்து இரண்யனை வதம் முடித்த பின்பு பெருமாளிடம் நரசிம்ம அவதாரக் கோலத்தைத் தங்களுக்கும் காட்டியருளுமாறு கோரினர். பெருமாளும் இந்த வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலத்தை முனிவர்களுக்கு தமிழ்நாட்டில் காட்டிய எட்டு இடங்கள் அட்ட நரசிம்ம தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த எட்டு தலங்களில் நடுவில் அமைந்துள்ள பூவரசன் குப்பத்தைச சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கிரி கோவில், சித்தனைவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கிரி கோவில், பூவரசன்குப்பம், பரிக்கல், ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.

வசிஷ்டர் சிங்கிரிக் குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.

இத்திருத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

  • 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர்; .
  • சிறிய உருவில் யோக நரசிம்மர்
  • சிறிய வடிவில் பாலநரசிம்மர்.

பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது. தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுகின்றன இராசராச சோழன், விசயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளனர். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.[2]

மூலவர் லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்)

இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் தாங்கியுள்ள ஆயதங்கள்: 1.பாதஹஸ்தம், 2.பிரயோக சக்கரம், 3.ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4.காணம், 5.அரக்கனின் தலை அறுத்தல், 6.கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7.இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8.இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9.இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10.சங்கம், 11.வில், 12.கதை, 13.கேடயம், 14.வெட்டப்பட்ட தலை, 15.இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16.இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட இரணியன் மனைவி நீலாவதியும் வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர் , சுக்கிரன் மற்றும் மூன்று அசுரர்களும் காட்சி தருகிறார்கள்.[3]

மூலவர் யோக நரசிம்மர், பாலநரசிம்மர்

இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் மற்ற இரண்டு மூலவர்களான யோக நரசிம்மர் மற்றும் பாலநரசிம்மர் சிறிய வடிவில் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்கள்

தாயார் கனகவல்லித் தாயார்

இத்தலத்தின் தாயார் கனகவல்லித் தாயார் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தல வரலாறு

16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக பிரகலாதனுக்கு அருள்பாலிக்கிறார். .

வேண்டுதல்கள்

இது ஒரு பரிகாரத் தலம். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்

நேர்த்திக்கடன்

சுவாதி நட்சத்திரத்தன்றும, பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். சிங்கிரி கோவில், பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்ம தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் துன்பங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.

திருவிழா

  • சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா,
  • மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி,
  • ஐப்பசியில் பவித்ர உற்சவம்,
  • வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை
  • மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி

சிங்கிரிக் குடி செல்லும் வழி

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.[4][5]

மேற்கோள்கள்