சமயபுரம் மாரியம்மன் கோயில்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சமயபுரம் மாரியம்மன் கோயில் | |
---|---|
படிமம்:Temple tower of Samayapuram Mariamman.jpg | |
பெயர் | |
பெயர்: | சமயபுரம் மாரியம்மன் கோயில் புராண பெயர் : கண்ணபுரம் மாரியம்மன் கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிமாரியம்மன் தல விருட்சம் : வேப்ப மரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் |
சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன.
வரலாறு
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் பொ.ஊ. 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.
மூலவர்
மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.[1] பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.
திருவிழாக்கள்
அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
- வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்
- இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
- மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்
- மறுகால் குறிச்சி துர்கா மாரியம்மன் திருக்கோவில்
மேற்கோள்கள்
- ↑ "சமயபுரம் மாரியம்மன்". Archived from the original on 2010-04-17. பார்க்கப்பட்ட நாள் 2010-05-01.
வெளி இணைப்புகள்
- சமயபுரம் மாரியம்மன் கோயிலின் இணையதளம் பரணிடப்பட்டது 2010-04-25 at the வந்தவழி இயந்திரம்