சப்த தீவுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சப்த தீவுகள் உட்பட்ட யாழ் மாவட்டத்திலுள்ள பிற தீவுகள்

சப்த தீவுகள் என்பது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:

  1. லைடன் தீவு (வேலணைத்தீவு)
  2. புங்குடுதீவு
  3. நயினாதீவு (மணிபல்லவம்/ மணிபல்லவத் தீவு)
  4. காரைநகர்
  5. நெடுந்தீவு
  6. அனலைதீவு
  7. எழுவைதீவு

யாழ் தீவுகள்

இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. இவை தவிர யாழ் குடாநாட்டை அண்டியுள்ள சில மனிதர் வாழாத தீவுகளும், கச்சதீவும் இதற்குள் அடங்குவதில்லை.

முன்னர் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.[1] அவ்வாறு பிரிந்த தீவுகளாக மண்டைதீவு உட்பட, 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு வரை சிறிய தீவுகள் யாழ் தீபகற்பத்தில் அமைந்துள்ளன. ஆகவே ஏழு தீவுகள் என்ற பெயரில் கருத்தியல் சிக்கலை உருவாக்குகின்றன.[2] யாழ் குடாவில் காணப்படும் பிற தீவுகள் பின்வருமாறு:[3]

  • சிறு தீவு
  • குருசடித்தீவு 
  • கண்ணன் தீவு
  • காரைதீவு (வேலணை)
  • குறிகாட்டுவான்
  • நடுத்துருட்டி
  • பாலை தீவு
  • பாறை தீவு
  • புளியந்தீவு
  • தொரட்டப்பிட்டி
  • காக்காரத்தீவு

சப்த தீவுகளின் பெயர் விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும், ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:

பெயர் ஆங்கிலத்தில் இடச்சில் கந்தபுராண பெயர்
வேலணைத்தீவு Velanaitivu Leiden (லைடன்) சூசை
புங்குடுதீவு Punkudutivu Middleburgh கிரவுஞ்சம்
நயினாதீவு Nainativu Harlem சம்பு
காரைநகர் Karaitivu Amsterdam சாகம்
நெடுந்தீவு Neduntheevu Delft (டெல்ப்ற்) புட்கரம்
அனலைதீவு Analaitivu Rotterdam கோமேதகம்
எழுவைதீவு Eluvaitivu Ilha Deserta இலவு

வரலாறு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவற்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.

போர்த்துகேயர் (1505–1658), ஒல்லாந்தர் (1656–1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.

சமூகம்

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.

யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்".

இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.

பொருளாதாரம்

விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகளை பேணியும், வியாபார தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக, உயர் கல்வி, தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.

புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள்

இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்து வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள், பொருள் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.

யாழ் தீவகப்பகுதிகளின் அட்டவணை

தீவுகள்
ஆள்கூற்று பரப்பு
(கி.மி2)[4]
சனத்தொகை
(கிட்டத்தட்ட)[5]
அனலைதீவு 9°40′01″N 79°46′32″E / 9.66694°N 79.77556°E / 9.66694; 79.77556 4.82 2,200
சிறு தீவு 9°38′36″N 80°00′37″E / 9.64333°N 80.01028°E / 9.64333; 80.01028 0.28
எழுவைதீவு 9°42′03″N 79°48′38″E / 9.70083°N 79.81056°E / 9.70083; 79.81056 1.40 800
கச்சத்தீவு 9°23′16″N 79°31′37″E / 9.38778°N 79.52694°E / 9.38778; 79.52694 0.68
காக்காரத்தீவு 9°26′23″N 79°53′14″E / 9.43972°N 79.88722°E / 9.43972; 79.88722 0.14 ஆட்களற்றது
கண்ணன் தீவு 9°37′33″N 79°51′26″E / 9.62583°N 79.85722°E / 9.62583; 79.85722 1.22
காரைதீவு 9°36′27″N 79°49′48″E / 9.60750°N 79.83000°E / 9.60750; 79.83000 0.97
காரைநகர் 9°44′03″N 79°52′33″E / 9.73417°N 79.87583°E / 9.73417; 79.87583 22.95 8,600
லைடன் தீவு (வேலணைத்தீவு) 9°39′09″N 79°54′11″E / 9.65250°N 79.90306°E / 9.65250; 79.90306 64.01 16,300
குறிகாட்டுவான் 9°35′43″N 79°47′40″E / 9.59528°N 79.79444°E / 9.59528; 79.79444 0.38
மண்டைதீவு 9°36′48″N 79°59′44″E / 9.61333°N 79.99556°E / 9.61333; 79.99556 7.56 900
நடுத்துருட்டி 9°35′05″N 79°47′54″E / 9.58472°N 79.79833°E / 9.58472; 79.79833 0.88
நயினாதீவு 9°36′15″N 79°46′04″E / 9.60417°N 79.76778°E / 9.60417; 79.76778 4.22 2,700
நெடுந்தீவு 9°30′48″N 79°41′22″E / 9.51333°N 79.68944°E / 9.51333; 79.68944 47.17 4,200
பாலை தீவு 9°37′22″N 79°49′10″E / 9.62278°N 79.81944°E / 9.62278; 79.81944 0.16
பாறை தீவு 9°41′06″N 79°47′32″E / 9.68500°N 79.79222°E / 9.68500; 79.79222 0.38 ஆட்களற்றது
புளியந்தீவு 9°38′52″N 79°46′28″E / 9.64778°N 79.77444°E / 9.64778; 79.77444 0.44
புங்குடுதீவு 9°35′08″N 79°50′05″E / 9.58556°N 79.83472°E / 9.58556; 79.83472 22.56 3,600
தொரட்டப்பிட்டி 9°44′55″N 79°54′23″E / 9.74861°N 79.90639°E / 9.74861; 79.90639 0.14

துணை நூல்கள்

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

உசாத்துணை

  1. "யாழ் தீவுகள் உருவான வரலாறு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2015.
  2. "யாழ் தீவுகளும் சரித்திர பின்னணியும்". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2015.
  3. "List of islands of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2015.
  4. "Table 05 (Geo., Topography) Islands in Sri Lanka". Sri Lanka Statistics. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
  5. "Statistical Handbook 2009". Jaffna District Secretariat. Archived from the original on 2010-03-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.

வெளி இணைப்புகள்

தேசவரை படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=சப்த_தீவுகள்&oldid=39786" இருந்து மீள்விக்கப்பட்டது