சண்முகம் முருகேசு
சண்முகம் ""சாம்" முருகேசு (Shanmugam "Sam" Murugesu) (c.1967 – மே 13, 2005) மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1.03 கிலோ கஞ்சா கடத்தியமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரின் போதைப்பொருட்கள் தவறானப் பயனீடு சட்டத்தின்படி இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.[1]
வாழ்க்கை வரலாறு
சண்முகம் வாடகைவண்டி ஓட்டுனராகவும் சார்பிலா சாளரத் துப்புரவாளராகவும் பணியாற்றி வந்தார். அவரது வருமானத்தைக் கொண்டு தமது அன்னை, மனைவி மற்றும் இரு மகன்களைக் கொண்ட தமது குடும்பத்தைத் தவிர சகோதரி மற்றும் அவரது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.[2]
சண்முகம் சிங்கப்பூரின் படைத்துறையில் எட்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தில் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். நீர் விளையாட்டுக்களில் சிங்கப்பூரின் சார்பாக 1995ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அவாசு ஏரியில் நடந்த உலக வாகையாளர் ஜெட்ஸ்கீ இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அவரது தண்டனையை நிறைவேற்றும் முன்னர் இவரது வழக்கு மரண தண்டனையை எதிர்ப்போரால் மிகவும் பரவலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே நாட்டு மக்கள்தொகைக்கு மிக கூடுதலான சட்டபூர்வ மரண விதிப்புக்களை நிறைவேற்றும் நாடாக சிங்கப்பூர் விளங்குவதை இவர்கள் எடுத்துக்காட்டி அதுவரை ஒரு சிறிய போக்குவரத்து குற்றத்தைத் தவிர பெரிய குற்றமெதுவும் இழைக்காத சண்முகத்தின் தண்டனையைக் குறைக்கப் போராடினார்கள். சண்முகத்தின் அன்னையும் தமது மகன் சிங்கப்பூர் இராணுவத்தில் பணியாற்றியதையும் குற்ற வரலாறு இல்லாததையும் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க முறையிட்டார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Misuse of Drugs Act" இம் மூலத்தில் இருந்து 2012-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120215110916/http://statutes.agc.gov.sg/non_version/cgi-bin/cgi_retrieve.pl?actno=REVED-185.
- ↑ 2.0 2.1 "Please don’t crush this soul". October 27, 2005. http://hungatdawn.wordpress.com/category/shanmugam-murugesu/. பார்த்த நாள்: August 29, 2012.
வெளி இணைப்புகள்
- Petition of Shanmugam s/o Murugesu பரணிடப்பட்டது 2005-12-18 at the வந்தவழி இயந்திரம்
- Singapore finally finds a voice in death row protest from The Observer newspaper.