சங்கு சுப்பிரமணியம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சங்கு சுப்பிரமணியம் |
---|---|
பணி | எழுத்தாளர், இதழாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் |
தேசியம் | இந்தியர் |
இலக்கிய இயக்கம் | இந்திய விடுதலைப் போராட்டம் |
துணைவர் | சரஸ்வதி |
சங்கு சுப்பிரமணியம் (நவம்பர் 18, 1905 - பெப்ரவரி 15, 1969) தமிழக எழுத்தாளரும், இதழாளரும், நடிகரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார்.
பிறப்பு
சங்கு சுப்பிரமணியம். 18 நவம்பர் 1905ல் திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில், மீனாட்சி, சுந்தரம் எனும் தம்பதியருக்குப் பிறந்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையார் வேலை தேடி ஆப்பிரிக்கா சென்றிட, உயர்நிலைப்பள்ளி படித்த சுப்பிரமணியமின் தலையில் குடும்ப பொறுப்பு விழுந்தது. தேரெழுந்தூர் சிற்றரச குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கு தனிப்படிப்பு சொல்லித் தந்து பணிபுரிந்தார். அச்சிறார் சரியாக படிக்கவில்லை என்றால் சிறார்கள் கண்காண தன்னையே அடித்துக்கொள்வாராம். தன்னை தானே அடிப்பேனே தவிர மற்றவரை துன்புறுத்தாத குணம், சிறு வயதில் இருந்தே இருந்திருக்கிறது.
திருமண வாழ்க்கை
தீண்டாமையை வெறுத்தார் சங்கு. அக்காலத்தே தீண்டத் தகாத மக்களுக்கு உணவளித்ததால் மிகவும் வசைக்கு உள்ளான பெண்மணி சரஸ்வதி. அவரை திருமணம் புரிந்தார் சங்கு. அவருக்கு 8 குழந்தைகள். 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு
சங்கு ஒரு தீவிர காந்தியவாதி. மக்களுக்கு விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் சென்று சேராத காலம். அந்நாட்களில் செய்தித்தாளோ பத்திரிகைகளோ அதிக விலைக் கொடுத்து வாங்க முடியாத நிலையில் மக்கள் இருந்தனர். ஓரணா, இரண்டனா என பத்திரிக்கைகள் விற்ற பொது காலணாவிற்கு சுதந்திரச் சங்கு என்ற பத்திரிகையை 1930ல் தொடங்கினார். "சுதந்திரச்சங்கு” மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு, அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான ‘சங்கு’ ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.[2] சி. சு. செல்லப்பா, பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் கட்டுரை, சிறுகதைகள் என பல வெளியிட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் பல முறை கைதானார் சங்கு. போராட்டம் சூடு பிடித்த போது திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியில் பேரணி நடைபெற்றது. கூட்டத்திற்கு தன் இரு பெண் குழந்தைகளை கூட்டிப்போனார். அந்த பேரணியை தடுக்க வந்த காவலர் கலைந்து போகுமாறு மிரட்ட தன் மேல்சட்டையை கழற்றி " என்ன செய்வாய், சுடுவாயா? சுடு!" என்றாராம். காவலர் அவரை கைது செய்தனர். பெண்களுக்கோ சிறுவயது. இராயப்பேட்டையில் வீடு. இரண்டு மைல் மாலை நேரம் தனியாக பெண்கள் நடந்தே செல்லவேண்டும். என்னவாகும் என மன பதபதைத்தாலும், சுதந்திர தாகம் மேற்கொள்ள கைதானார் சங்கு. சுதந்திர போராட்டத்தை தூண்டியதற்காக பத்திரிக்கையை நிறுத்த ஆங்கிலேய அரசாங்கம் பலவழிகளில் முயற்சித்தது.
அவருக்கு கட்டுரைகள் வந்து சேராமல் இருக்க காவலர் அவர் வீட்டின் முன் நிற்பார்கள். யாரேனும் படித்தவர் வந்தால் முழுமையாக சோதனை செய்து உள்ளே அனுப்புவார்களாம். அதனால் அதை அறிந்த கட்டுரையாளர்கள் தெரு முனையில் இருந்த பால்காரரிடமோ, மளிகைக் கடையிலோ கட்டுரைகள் கொடுத்துச் செல்வார்கள். அவர்களும் மளிகை சாமானுடனோ, பால் தரும் போதோ வீட்டில் சேர்ப்பார்களாம்.
இலக்கியப் பணி
பல பத்திரிக்கைகளில் கதை சிறுகதை, கட்டுரை என எழுதியவர் சங்கு. அவரின் படைப்புகள் சுதேசமித்திரன், மணிக்கொடி அனுமான், பத்திரிகைகளிலும் வெளிவந்தன. சுதேசமித்திரன் பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றினார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர் சங்கு.[2] "தினமணி"யில் பாகவதக் கதைகள் எழுதினார். இதற்காக திராவிட இயக்கங்கள் இவரை பக்தி மார்க்கத்திற்காக எதிர்த்தன.
ஜயதேவரின் "கீதகோவிந்தம்" நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இன்றும் இம் மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதியாகவே வலம் வருகிறது.
திரைப்படத்துறையில் சங்கு
ஜெமினி வாசனுடன் நெருக்கமானவர் சங்கு. அவர் ஜெமினி கதைக் குழுவில் பல படங்களுக்கு கதை எழுதியவர். சக்ரதாரி, சந்திரலேகா, ராஜி என் கண்மணி போன்ற படங்களில் கதை, பாடல்கள் என எழுதியுள்ளார். ஸ்ரீராமானுஜர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சக்ரதாரி படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் பாடலை தெருவில் பாடிவரும் பாகவதராகவும் நடித்திருக்கிறார்.[1][2]
இறப்பு
15 பிப்ரவரி 1969ல் சென்னையில் காலமானார்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "காலணா இதழ்" - சங்கு சுப்பிரமணியம்
- ↑ 2.0 2.1 2.2 "சங்கு சுப்ரமணியம் - இது தமிழ்", இது தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2018-04-04