சங்கர் மகாதேவன்
சங்கர் மகாதேவன் Shankar Mahadevan | |
---|---|
சங்கர் மகாதேவன் சங்கர் எசான் லாய் இரவில். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 3 மார்ச்சு 1967 |
இசை வடிவங்கள் | இந்திய செவ்விசை, திரையிசை, இசையமைப்பாளர் |
தொழில்(கள்) | திரைப் பாடகர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1998–நடப்பு |
இணைந்த செயற்பாடுகள் | சங்கர்-எசான்-லாய் |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
வாய்ப்பாட்டு |
சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக் கருதப்படுகிறார்.[1]
இளமை வாழ்வு
சங்கர் மகாதேவன் செம்பூர், மும்பையில் ஓர் தமிழ் பேசும்[2] கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.[3]. இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்.ஐந்து அகவையில் வீணை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். காலே காகா என்றழைக்கப்பட்ட சீனிவாச காலேயிடம் இசை பயின்றார். செம்பூரில் உள்ள அவர் லேடி ஆஃப் பெர்பெட்சுவல் சக்கர் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றபின் சயான் தென்னிந்திய கல்வி சமூகத்தின் (SIES) கல்லூரியில் இடைநிலைப்பள்ளி சான்றிதழ் படிப்பை முடித்தார்.1988ஆம் ஆண்டு நவி மும்பையில் அமைந்துள்ள மும்பை பல்கலைகழகத்தின் ஆளுமைக்குட்பட்ட ராம்ராவ் அதிக் தொழில்நுட்பக் கழகத்தில் கணிப் பொறியியலில் பட்டம் பெற்றார். ஆரக்கிளில் சிலகாலம் பணியாற்றினார்.
இசை வாழ்வு
மென்பொருள் பொறியியலாளராக வாழ்க்கையைத் துவங்கிய சங்கர் விரைவிலேயே இசைத்துறையில் காலடி வைத்தார்.[4] ஏ. ஆர். ரகுமான் இசையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்காக அவர் பாடிய பாடலுக்கு தேசிய திரைப்பட விருது பெற்றார். 1998ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் இசைத்தொகுப்பு பிரெத்லெஸ் (மூச்சின்றி) இவரை பிரபலமாக்கியது. இந்த இசைத்தொகுப்பின் தலைப்புப் பாடலில் தொடக்கம் முதல் கடைசிவரை மூச்சிழக்காது பாடுவது போன்று தொகுக்கப்பட்டிருந்தது சிறப்பாகும். தொடர்ந்து பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பின்னர் சங்கர்-எசான்-லாய் என்ற மூவர் கூட்டணி அமைத்து பல இந்தித் திரைப்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். தமிழைத் தவிர இந்தி,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் மராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
சில்க் (SILK) என்று ஆங்கில பெயரின் முதலெழுத்துக்களின் சுருக்கத்துடன் மோதுகைக் கலைஞர் சிவமணி,மிருதங்கம் சிறீதர் பார்த்தசாரதி,விசைப்பலகை கலைஞர் லூயி பாங்க்சு, அடித்தொனி கிட்டார் கலைஞர் கார்ல் பீட்டர்ஸ் ஆகியோருடன் இணைந்து பிணைவு நடன இசைக்குழு (fusion jazz) சோதனையிலும் வெற்றி கண்டார்.
மற்றொரு பிணைவு இசைக்குழுவான "ரிமெம்பர் சக்தி"யில் தபலாக் கலைஞர் சாகீர் உசேன், கிட்டார் கலைஞர் ஜான் மக்லாலின்,மண்டோலின் யூ. ஸ்ரீநிவாஸ் மற்றும் கஞ்சிரா வி. செல்வகணேஷ் ஆகியோருடன் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Shankar declared as best singer in India" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305123606/http://internationalcelebritiesblog.blogspot.com/2010/03/2103-shankar-mahadevan-best-singer-in.html.
- ↑ http://www.mouthshut.com/review/Five_Best_Songs_of_Shankar_Mahadevan-64498.html
- ↑ "Log in ...Tribune: IT supplement of The Tribune, Chandigarh, India. Web Jingle". 2007-03-10 இம் மூலத்தில் இருந்து 2007-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310201553/http://www.tribuneindia.com/2002/20021021/login/music.htm.
- ↑ Yasir (6 November 2003). "Striking the right note... for his supper". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 மே 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050509175826/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/11/06/stories/2003110600310400.htm. பார்த்த நாள்: 20 November 2009.