கோடம்பாக்கம் சிவலிங்கம்
கோடம்பாக்கம் சிவலிங்கம் (1941-1965[1]) என்று அறியப்படும் சிவலிங்கம் இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்துத், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின் போது தீக்குளித்து உயிர்விட்ட ஒரு போராளி ஆவார்.
இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட்டம்
26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர். சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சிவலிங்ம் மொழிப்போரில் தீவிரமாக்க் கலந்துகொண்டு வந்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து கீழப்பளுவூர் சின்னச்சாமி தீக்குளித்த செய்தி கேட்டு ஒரு பத்து தமிழராவது உயிர் நீத்தால் தான் நமக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும் என்று தன் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொல்லி வந்தார்[2]
தீக்குளிப்பு
24.1.1965 இரவு தன் தங்கையிடம் ”நாளைக் காலை நீ எங்கும் போகக் கூடாது வெளியே ஒரே ரகளையாக உள்ளது. நான் அதிகாலையிலேயே தொடர் வண்டி நிலையத்தில் கறுப்பு கொடியேற்றிவிட்டு வந்து விடுகிறேன் என்னை பற்றிப் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய சிவலிங்கம், 25 ஜனவரி 1965 அன்று காலையில் வீட்டைவிட்டு சென்று தீக்குளித்து மாண்டார்[3] ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இருபத்தைந்தாம் நாளைத் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகள் வீரவணக்கநாளாக் கடைபிடித்து வருகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html.
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12
- ↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 29