கைலாயமாலை
கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும்.[1] ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. நல்லூர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆறுமுக நாவலரின் தமையனார் மகன் த. கைலாசபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது.
காலம்
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே இந்நூல் எழுதப்பட்டது என்பது யாழ்ப்பாண வரலாற்றாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தாலும், துல்லியமாக இதன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னர், 1604 ஆம் ஆண்டுக்கும் 1619 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு, இந்நூலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது இராசநாயக முதலியாரின் கருத்து. காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் நூலில் காணப்படுகிறது. நாயக்க அரசன் முத்துக்கிருட்டின நாயக்கர், 1604 ஆம் ஆண்டில், உடையான் சேதுபதி எனப்படும் சடையப்ப தேவரை முதன் முதலாக இராமநாதபுரத்துக்குத் தலைவராக நியமித்தார் என்பதால், இந்நூல் அந்த ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.[2]
ஆனாலும், சேதுபதி என்னும் விருதுப் பெயர் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே சேதுபதிகளுக்கும், யாழ்ப்பாணத்து அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்தன என்றும் பிற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.[2] கிபி 1260 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இந்நூல் எழுந்திருக்கலாம் என்று சி. பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைப்பு
இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. வெண்பா வடிவில் அமைந்துள்ள காப்புச் செய்யுள் நீங்கலாக, இரண்டிரண்டு அடிகளால் ஆன 310 கண்ணிகளால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பாடுபொருளையும், யாப்பிலக்கணத்தையும் பொறுத்தவரை இந்நூல் மெய்க்கீர்த்திமாலை, உலா ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் கலவையாக அமைந்துள்ளது.[3]
கைலாயமாலையை அதன் உள்ளடக்க அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் கண்ணி தொடக்கம் 46 ஆவது கண்ணி வரையிலான முதற் பகுதி, செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரமலையில் இருந்து அரசாண்ட வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும், நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும், அந்நகரை யாழ்ப்பாணன் அரசாண்டு இறந்ததன் பின்னர் அது அரசனின்றித் தளம்பியது குறித்ததுமான செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாக இடம்பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 211 ஆம் கண்ணி வரையிலான இரண்டாம் பகுதியில் செகராசசேகரனின் பெருமைகள், அவனை யாழ்ப்பாணத்தை ஆள அழைத்து வந்தமை, நல்லூர் நகரத்தை அமைத்து ஆட்சி செய்தது ஆகிய விடயங்கள் கூறப்படுகின்றன. இதற்குப் பிற்பட்ட மூன்றாம் பகுதி, செகராசசேகர மன்னன் கைலாயநாதர் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்வித்தது தொடர்பான விடயங்களை உள்ளடக்குகிறது.
உசாத்துணை
- ↑ "கைலாயமாலை". Archived from the original on 2013-01-10. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2014.
- ↑ 2.0 2.1 நடராசன், பி., முத்துராச கவிராயரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983, பக். vi.
- ↑ நடராசன், பி., முத்துராச கவிராயரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983, பக். v.
வெளியிணைப்பு