கே. எஸ். பாலச்சந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
-
கே. எஸ். பாலச்சந்திரன்
KSBalachandran.jpg
முழுப்பெயர்
பிறப்பு 10-07-1944
பிறந்த இடம் கரவெட்டி,
யாழ்ப்பாணம்
மறைவு 26-02-2014
கனடா
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
நாடக, திரைப்பட,
நடிகர்
வாழ்க்கைத் கனகேஸ்வரி
துணை

கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.

இளமைக் காலம்

யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பாலச்சந்திரன் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.

பாலச்சந்திரன் பல ஆண்டுகள் இலங்கை உள்நாட்டு வருமான வரித்திணைகளத்தில் பணி புரிந்தவர்.

படைப்புகளும் கலைப் பங்களிப்புகளும்

நடிப்புத்துறை

மேடை நடிகர்

1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.

வானொலி நடிகர்

பாலச்சந்திரன் இலங்கையில் அறியப்பட்ட வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.

தொலைக்காட்சி நடிகர்

இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

திரைப்பட நடிகர்

இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

வானொலித் துறை

நேர்முக வர்ணனையாளர்

1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.

வானொலித் தயாரிப்பாளர்

இலங்கை வானொலியில், 'கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சியையும், 'விவேகச் சக்கரம்' என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

தனி நடிப்பு

1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் இரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணே றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.

அண்ணே றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன.

எழுத்துக்கள்

வானொலி நாடகங்கள்

இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும். இந்த நாடகத்தின் ஒலிப்பதிவைக் கேட்டே கமலஹாசன் தெனாலி படத்தில் சோமன் பாத்திரத்தில் இலங்கைத் தமிழ் பேசி நடித்தார். இப்படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கமலஹாசனே இந்தத் தகவலைத் தெரிவித்தார். கனடாவில் சி.எம்.ஆர் வானொலியில் "மனமே மனமே" என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கின்றார்.

தொலைக்காட்சி நாடகங்கள்

இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவில் TVI க்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இருந்து TVI, 125 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய் 'Wonderful Y.T.Lingam Show' இவரது படைப்பே. எம்மிடையே முதலாவது TV Show நிகழ்ச்சி இதுவேயாகும். TVI யில் முதலாவது தமிழ் Sitcom நாடகம் என்ற வகையில் "நாதன், நீதன்,நேதன்" என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்பச் செய்தார்.

மேடை நாடகங்கள்

இவர் 20 மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி உள்ளார்.[1] அவற்றுள் பின்வருவன அடங்கும்:

  • கனவுகளும் தீவுகளும்
  • தலைமுறைகள்
  • குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய்
  • காரோட்டம்
  • கலாட்டாக்காரர்கள்
  • எங்கோ தொலைவில்
  • தள்ளுவண்டிக்காரர்கள் (மொழிபெயர்ப்பு நாடகம்)
  • பாரதியின் குயில்பாட்டு
  • நவீன சுயம்வரம்
  • மடிப்பிச்சை

மேடை நிகழ்ச்சிகள்

பல்வேறு வகையான மேகை நிகழ்ச்சிகளை இவர் வழங்கி உள்ளார். பாரதியுடன் ஒரு மாலைப் பொழுது, மனமே, மனமே, கே. எஸ். பாலச்சந்திரனுடன் ஒரு மாலைப் பொழுது' ஆகியன குறிப்பிடத்தக்கன.[1]

சிறுகதைகள்,கட்டுரைகள்

தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் 'மலர் மணாளன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல 'சிரிகதை'களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் 'ஒரு பேப்பர்' என்ற பத்திரிகையில் 'கடந்தது..நடந்தது' எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் "தாய் வீடு" பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், "தமிழ் ரைம்" சஞ்சிகையில் "என் கலைவாழ்வில்" என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். தாய்வீடு பத்திரிகையில் , "வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை" என்ற தொடரையும், "தூறல்" என்ற காலாண்டு சஞ்சிகையில் "என் மனவானில்" என்ற தொடரையும் எழுதி வந்தார்.

வெளியிட்ட நூல்கள்

திரைத்துறை

திரைப்பட இயக்குனர்

இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டார்.

இயக்கிய குறும்படங்கள்

நகைச்சுவை

வானொலி, மேடை, தொலைக்காட்சி, எழுத்து என இவரது எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் நகைச்சுவையை வெளிப்படுத்தினார். "தனி நடிப்பு என்ற நகைச்சுவை மேடை நிகழ்வை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்".[1]



விருதுகள்

  • கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது.
  • கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய “நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு இலங்கை சாகித்ய விருதுக்காக சிறந்த நூலாக நானாவித பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டது. 2011
  • “நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு 2011ல் இலங்கை இலக்கியப் பேரவை – யாழ் இலக்கியவட்டம் வழங்கிய சிறந்த நூலுக்கான (நானாவிதப்பிரிவு) விருதையும் பெற்றது.
  • தமிழர் தகவல் விருது
  • உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழக விருது
  • கனேடியக் கலைஞர்கள் கழக விருது


வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 1.2 ப. சிறீஸ்கந்தன் (மார்ச்சு 2012). கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன். தாய்வீடு. பக்கம் 100.
"https://tamilar.wiki/index.php?title=கே._எஸ்._பாலச்சந்திரன்&oldid=2573" இருந்து மீள்விக்கப்பட்டது