கு. முருகன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கு. முருகன் |
---|---|
பிறந்ததிகதி | டிசம்பர் 29,1959 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
இளந்தமிழன் (பிறப்பு:டிசம்பர் 29,1959)மலேசிய எழுத்தாளர், கவிஞர், இலக்கிய ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல் எழுதியுள்ளார்.
பிறப்பு- கல்வி
இளந்தமிழன் டிசம்பர், 29.1959-ல் கெடா மாநிலத்தில் அமைந்த டப்ளின் தோட்டத்தில் பிறந்தார். இளந்தமிழனின் இயற்பெயர் முருகன். தந்தையார் குள்ளப்பன், தாயார் வள்ளியம்மாள். ஒன்பது உடன் பிறந்தவர்களில் இளந்தமிழன் இளையவர். இவருக்கு இரண்டு அண்ணன்களும் ஆறு அக்காள்களும் உள்ளனர்.
இளந்தமிழன் 1966-லிருந்து 1971 வரை ஆரம்பக் கல்வியை டப்ளின் தோட்டம், ஹோம் டிவிஷன் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். 1972-லிருந்து 1976 வரை கூலிம், மஹாங் இடைநிலைபள்ளியில் படிவம் ஐந்து வரை பயின்றார். சிறிது காலம் காவல் துறையில் பணியாற்றியபின் 1980-லிருந்து 1982 வரை கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (Maktab Perguruan Sri Kota) பயிற்சி பெற்று ஆசிரியராக பணியமர்ந்தார். பிறகு, சொந்தமாகப் பயின்று, எஸ்டிபிஎம் தேர்வில் தேறி, 1991 ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து, இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்
தனி வாழ்க்கை
இளந்தமிழன் பெப்ருவரி 2, 1989-ல் ஆசிரியையான ஜெயந்தி கருப்பையாவை மணமுடித்தார். இலக்கியா, நவீனா, அருணா என மூன்று மகள்கள்.
பகுதி நேரமாக எம்வே வணிகத்தில் ஈடுபட்ட இளந்தமிழனும் இவரது துணைவியாரும் 2000 ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விலகி, முழுநேர எம்வே வணிக உரிமையாளர்களாக (Amway Business Owners) விளங்குகின்றனர்.
இலக்கிய வாழ்க்கை:
இளந்தமிழன் தமிழப்பள்ளியில் பயின்ற காலத்தில், ‘திருமகள்’ மாணவர் இதழில் குட்டிக் கதைகள் எழுதினார். ஆசிரியர் பயிற்சி காலத்தில் கல்லூரியில் கவியரங்கம், நாடக அரங்கேற்றம் என தனது கலை இலக்கிய ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார்.' வானம்பாடி' வார இதழில் அவர் தனது படைப்புகளை தொடர்ந்து எழுதினார்.
முதல் கவிதை 1978-ஆம் ஆண்டு வானம்பாடி வார இதழில் ‘மகாசமர்த்தான்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. முதல் சிறுகதை ஜூன் 17,1978-ல் வானம்பாடி வார இதழில் ‘ஒரு நியாயம் தவறாகிறது' என்ற தலைப்பில் வெளிவந்தது.
வானம்பாடி இதழின் ஆசிரியர் மறைந்த எழுத்தாளர் ஆதி. இராஜகுமாரன் சதாசிவத்தின் இலக்கிய ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். ஆகவே வானம்பாடி இதழில் தொடர்ந்து பல படைப்புகளை இவர் எழுதினார். 1980-ல் வானம்பாடி வார இதழில் ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ எனும் சமூகத் தொடர்கதையை எழுதினார். 1980-ல் வானம்பாடி வார இதழின் மாதம் ஒரு நாவல் வெளியீட்டிற்கு 'செம்மண் சிலைகள்' என்ற குறுநாவலை எழுதினார். பிறகு தமிழ் எழுத்தாளர் சங்க தலைவராக ஆதி. குமணன் பொறுப்பேற்றிருந்த காலத்தில் இளந்தமிழன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினராக இணைந்தார்.
வானம்பாடி தவிர மலேசிய இதழ்களான தமிழ் ஓசை, மக்கள் ஓசை, மலேசிய நண்பன், தமிழ் நேசன், கோமாளி, தூதன், சமநீதி, புதிய சமுதாயம், நயனம், தென்றல், மயில், தினக்குரல் ஆகியவற்றிலும் இளந்தமிழனின் படைப்புகள் வந்துள்ளன. மே 26, 1985-ல், தமிழ் ஓசை ஞாயிறு மலரில் வெளிவந்த ‘மன்னிக்கணும் சார்!’ என்கிற சிறுகதை அந்த மாதம் மலேசிய இதழ்களில் வெளிவந்த சிறந்த சிறுகதை என்று ‘கோலாலம்பூர் இலக்கியச் சிந்தனை’ குழுவினரால் பாராட்டு மடல் கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட், 1989-ல், தமிழ் ஓசை ஞாயிறு மலரில் வெளிவந்த ‘வெள்ளி நாக்குகள்’ சிறுகதைக்குத் தமிழ் ஓசையின் தங்கப் பதக்கம் விருது கொடுக்கப்பட்டது
ஆய்வுகள்/ படைப்புகள்
நவீன இலக்கியச் சிந்தனை இயக்கம் ஆயர் தாவாரில் நடத்திய மூன்றாவது புதுக்கவிதை கருத்தரங்கில் (மே 4, 1995) எழுத்தாளர் எம். ஏ. இளஞ்செல்வன் தொகுத்து வெளியிட்ட ‘மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகள் - ஓர் ஆய்வு’ என்னும் புதுக்கவிதை ஆய்வு நூலில் இளந்தமிழனின் 33 பக்க ஆய்வுக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதுவே மலேசிய புதுக்கவிதைகள் பற்றி வெளியீடு கண்ட முதல் ஆய்வு நூலாகும்.
ஆறாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் (1987) கவியரங்கில், ஆதி. குமணன் முயற்சியில் முதல் முறையாக புதுக்கவிதையை அரங்கேற்ற முனைந்த போது அந்த வாய்ப்பை கவிஞர் அக்கினி சுகுமார், இளந்தமிழனுக்கு வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கவியரங்கில் புதுக்கவிதையை அரங்கேற்றிய முதல் கவிஞர் என்று அடையாளம் பெற்றார் இளந்தமிழன்.
ஆகஸ்டு 8, 2021-இல், கோவிட் பெருந்தொற்று காலத்தில், இயங்கலை வழியாக கவிஞர்கள் சுதந்திரன், மனஹரன் ஆகியோருடன் இணைந்து இலக்கியப் பயணம் 2020, மழைச்சாரல், இலக்கியக்களம், சிகரம், கவிதை கசடற ஆகிய புலனக்குழுவினரின் ஒத்துழைப்பில், 'புதுக்கவிதை நதிக்கரை 2021' என்னும் தேசிய அளவிலான புதுக்கவிதை கருத்தரங்கை வழிநடத்தினார். அக்கவியரங்கில் ‘அன்னையின் அணிகலன்கள் - அகவல் முதல் ஹைக்கூ வரை’ என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைத்தார்.
வானொலி நாடகம்:
இளந்தமிழன் மின்னல் வானொலியின் (ஒலியலை ஆறு) ஹாஜி அசான் கனி அவர்களின் தயாரிப்பில் சில வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார்.
இலக்கிய இடம்:
தோட்டப்புற வாழ்விலிருந்து விலகி மலேசிய கம்பங்களின் வாழ்க்கையை கதைப் பின்னணியாக கொண்ட படைப்புகளை எழுதியவர் இளந்தமிழன். 80-களின் காலகட்டத்தைத் தன் கதைகளில் கொண்டிருந்த இப்படைப்புகள் அழுத்தமான யதார்த்தவியல் கதைகளாகவும் சமகால சிக்கல்களை முன்வைப்பவையாகவும் இருந்தன.
விருதுகள், பரிசுகள்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் துறைக்கான டான் ஸ்ரீ டத்தோ ஆதி. நாகப்பன் இலக்கிய விருது. (1992)
- 2021-ஆம் ஆண்டில், இவ வெளியிட்ட தனது சிறுகதைகளின் தொகுப்பான 'இளந்தமிழன் சிறுகதைகள்' நூலுக்குத் தமிழ் நாட்டின் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2021-ஆம் ஆண்டுக்கான 'கரிகாற் சோழன் விருது' தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
எழுதிய நூல்கள்
கவிதை
இளந்தமிழன் கவிதைகள்
நாவல்
அமாவாசை காணாத அழகு நிலாக்கள் செம்மண் சிலைகள்
சிறுகதை
இளந்தமிழன் சிறுகதைகள்
கட்டுரை:- அல்ஹாஜ் எம்.எஸ். காதரின் வாழ்க்கைப் பயணம் (வாழ்க்கை வரலாறு) குறிஞ்சிமயிலும் புதுக்கவிதையும்
உசாத்துணை
‘ஈரம்’ புதுக்கவிஞர்கள் நேர்காணல் - வாணி ஜெயம்