கு. இராமலிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கு. இராமலிங்கம் ( புனைபெயர் குயிலன் 14 செப்டம்பர் 1922 - 8 திசம்பர் 2002) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளராவார்.[1] இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். முகவை ராஜமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைத்தவர்.

வாழ்க்கை

இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி பிள்ளை -வெயில் உவந்தம்மாள் ஆகிய இணையரின் மகனாகப் பிறந்தார். வாழ்க்கைச் சூழலால் ஆறாம் வகுப்புவரைதான் படிக்க இயன்றது. பின் பிழைப்புக்காக சிலகாலம் பர்மா சென்று மீண்டும் தமிழகம் வந்தார். துவக்கத்தில் இவர் காங்கிரசு கட்சியில் இருந்த இவர் பின் பொதுவுடமையாளராக மாறி, கட்சிப்பணியில் இணைத்துக் கொண்டார்.

எழுத்துப் பணிகள்

  • இவர் எழுதிய காக்கை மனிதனைப்பார்த்து கேலி செய்யும் என்ற கவிதை வ. ராமசாமியின் பாரத தேவி இதழில் முதன்முதலில் வெளிவந்தது.
  • 1947 இல் ‘செங்குமுதம்’ எனும் குறுங்காப்பியத்தை குயிலன் என்னும் புனைபெயரில் எழுதினார்.
  • எமிலி ஜோலோ எழுதிய தெரசா, பி.எஸ்.பெக்சன் எழுதிய ‘தி பேன்ட் மைன்ட்’ ஆகிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
  • வடமொழி நூலான விவேக சூடாமணி என்ற நூலைத் தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார்.
  • தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்களின் வசனங்களத் தமிழ் மொழி மாற்றாகப் எழுதியிருக்கிறார். மேலும் 17 படங்களில் 52 பாடல்களை எழுதியுள்ளார்.
  • இவர் மொத்தம் 56 உரைநடை நூல்கள், ஒன்பது புதினங்கள், ஏழு கவிதை நூல்கள், இரண்டு நாடகங்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்புகள் என இவர் எழுதிய நூல்கள் 116 ஆகும்.

இதழியல் பணிகள்

சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணையில், அதன் வெளியீடாக வெளி வந்த ‘மாலதி’ என்ற வார இதழ், 1946 இல் இலக்கிய மன்றம் இதழ் ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்தார். பொதுவுடமைக் கட்சியில் இணைந்தபின் 1948இல் ‘தென்றல்’ என்ற இதழை பொதுவுடமை கொள்கை தாங்கிய இதழாகத் தொடங்கினார். பொதுவுடமை கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில், முன்னணி என்ற அரசியல் வார இதழைத் தொடங்கினார். இதில் இவர் எழுதிய அரசியல் தலையங்கத்தால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார். 1961 இல் ‘குயிலன் பதிப்பகம்’ என்ற பதிப்பகம் துவக்கி நடத்திவந்தார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கு._இராமலிங்கம்&oldid=15801" இருந்து மீள்விக்கப்பட்டது